நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Monday, April 24, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 101

எவரோ கல்லெறிந்து...


(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)

குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தான் அலிக்கு நிம்மதியான மூச்சு வந்தது. ஹாயாக அந்த மருத்துவ மனையின் வெளி வராண்டாவில் காலை நீட்டி உட்கார்ந்தார். 'பதினோரு வருட ஏக்கத்திற்கு இறைவன் முடிவை கொடுத்திருக்கான்' மன நிம்மதியில் கண்களை மூடிக் கொண்டார்.

'குழந்தையும் தாயும் நலமா இருக்காங்க உள்ள போய் பாருங்க..' நர்ஸ் முக மலர்ச்சியுடன் சொன்னதும் ஆபிதாவிற்கு குதூகலம் தாங்கவில்லை. பேரபிள்ளையைப் பார்ப்பதற்கு உள்ளே ஓடினாள். கையையும் காலையும் சுருட்டிக் கொண்டு குழந்தை படுத்துக் கிடந்தது. நூரி ஆபிதாவை பார்த்து சிரித்தாள். பக்கத்தில் உட்கார்ந்த ஆபிதா மருமகளின் தலையை தடவினாள்.

'இப்போ சந்தோசந்தானே மாமி.. எனக்கு கொழந்த இல்லே'ன்னு ஊரார் சொன்னப்பவெல்லாம் நம் குடும்பத்தாரும் சேர்ந்துக் கொண்டு என்னை வதைத்தாங்க, நான் பட்ட மனகஸ்டத்துக்கெல்லாம் இறைவன் ஒரு வழி காட்டியிருக்கான்.. நூரியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. ஆபிதாவும் கண்கலங்கினாள்.

'டேய் உமர் ஒனக்கு ஆண் கொழந்த பொறந்திருக்கு எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா.. நீ எப்ப ஊர் திரும்பற, கொழந்த ஒன்ன மாதிரியே இருக்கான் சீக்கிரம் பொறப்பட்டுவா..'

'எனக்கு பிஸினஸ் லோட் ஓவரா இருக்குமா..' எதிர்முனையில் தெலிபோனில் உமர்.
'நீயும் கல்யாணத்துக்கு முன்னே இருந்து பிஸினஸ், பிஸினஸ்ன்னுதான் அலஞ்சிகிட்டு இருக்கே. உம்மனைவி பத்திக்கூட ஒனக்கு கவல இல்லே கொழந்த பெத்தவ ஒன்ன பாக்குறதுக்கு ஆசையா இருப்பா..சீக்கிரம் வா..'
'...................'
'வீடு சந்தோசமா இருக்குடா..இப்ப நீ இல்லாம இருந்தா நல்லா இருக்காது. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம் உடனே நீ வா..'

ஆபிதா சொன்னது போல் அந்த வீடு சந்தோசத்தில் மிதந்தது. 'அலியை எட்டி உதைக்க இந்த பேரன் வந்துட்டான்' பலர் ஜாலியாக பேசியபோது அலி மெய்மறந்து நின்றார்.

'நூரிமா கொழந்தைக்கு யார் கண்ணும் பட்டுட போகுது ஜாக்கர்தயா பாத்துக்க' அக்கறையுள்ள எவரோ சொன்னதும் நூரி எச்சரிக்கையானாள். பாதுகாப்பிற்காக அவள் நினைத்ததையெல்லாம் செய்தாள். ஊர் வந்த உமர் குழந்தையை நெருங்கும் போது கூட பல கண்டிஷன் போட்டாள்.

'ஏங்க நம்ம புள்ள எப்படி இருக்கான்'

'ஒன்ன மாதிரியே இருக்கான்'

'இல்லங்க உங்கள மாதிரிதான் இருக்கான் உங்கள மாதிரி இருக்கனும்னு தான் நான் ஆசைப்படறேன். இந்த ஒரு பாக்கியம் கிடைக்க லேட்டானதில் நா எவ்வளவு ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகினேன்.. கொஞ்சம் கூட இறக்கமில்லாம எனக்கு என்னவெல்லாம் பட்டம் கொடுத்தாங்க..' நூரியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

'ச்சீ..ஏன் பைத்தியக்காரத்தனமா பேசறே..புத்தியில்லாதவங்க ஏதாவது பேசிக்கிட்டுதான் இருப்பாங்க, அதையே நெனச்சிகிட்டு இருக்காதே..' உமர் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு ஆறுதலாக பேசினான். விளக்கும் அணைந்து கொண்டது. வீடு சகஜ நிலைக்கு திரும்பியது. குழந்தை உட்கார்ந்து தவழ்ந்து நின்று நடந்து மழலை பேசி வீட்டிற்கு வந்து செல்லும் எல்லோரையும் வசீகரித்துக் கொண்டது.

'என்னவோ தெரியல டாக்டர், காலைல இருந்து ஜொரம் அடிக்குது. எதுவும் சாப்பிடல. ஒழுங்கா இருந்த பிள்ளைக்கு ஏன் இப்படி திடீர்னுன்னு தெரியல.'

டாக்டர் செக் பண்ணி மருந்து மாத்திரை கொடுத்தார். 'இரண்டு நாள் கழிச்சி வாங்க' சொல்லி அனுப்பினார். இரண்டு நாட்களில் ஜூரம் கொஞ்சம்கூட குறையவில்லை. வீடு சோகத்தில் மூழ்கியது. படிப்பறிவு இல்லாதவர்கள் பலவித சடங்கு செய்ய வற்புறுத்தி சென்றனர். மீண்டும் டாக்டரிடம் சென்றதும் 'மெட்ராஸ் செல்லுங்கள்' என்ற கூறி விட்டார்.

'மிஸ்டர் உமர், நீங்களும் உங்க மனைவியும் உடனடியா இரத்த டெஸ்ட் பண்ணனும்..'

'ஏன் டாக்டர் என்ன பிராப்ளம்'

'ஸாரி உமர் உங்க குழந்தைக்கு ஹெச்-ஐ-வி கிருமி தாக்கியிருக்கு நீங்க கடவுளிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை'
உமர் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

'இது துர்பாக்கியமான நிலைதான், உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க வாழ்க்கையில் ஏற்பட்ட விபத்துக்களை சொல்லுங்க..'

'உண்மை தான் டாக்டர் நான் பிஸினஸ் சம்பந்தமா வெளியூரில் தங்கிய நேரங்களில் சில தடவை தவறியிருக்கேன் ஆனா நான் இதை எதிர்ப்பார்க்கல டாக்டர்.

'இன்னக்கி உலகில் இருக்கும் ஹெச்-ஐ-வி காரங்களெல்லாம் அதை எதிர்பார்த்து பெற்றுக் கொண்டவங்களல்ல.. கட்டுபாடற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் சீரழிவு இது. இந்த கட்டுப்பாடட்ற போக்கு தொடர்ச்சியா பல உயிர்கள பலி வாங்கி விடுகிறது. பாவம் உங்க மனைவியும் குழந்தையும்' **

உமர் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதான்.

'பதினாரு வருசம் குழந்த இல்லாம இருந்தேன். இந்த குழந்த கிடைத்த சந்தோசத்த இன்னும் முழுமையா அனுபவிக்கல அதற்குள் இப்படி ஒரு சோதனை...' முடிக்க முடியாமல் தேம்பி அழுதான்.

'முடிவு தெரிஞ்ச பிறகு அழுது பிரயோஜனமில்ல உமர், இருக்கும் காலத்தை சந்தோசமாகவும் இதன் விளைவுகளை மக்களுக்கு விளக்கும் விதமாகவும் அமைத்துக் கொள்ளுங்கள்.' டாக்டர் ஆருதல் சொல்லி விட்டு நகர்ந்தார்.

தன் உயிரோடு விளையாடும் ஹெச்-ஐ-வி பற்றி தெரியாமல் குழந்தையின் மீது கவிழ்ந்து கிடந்தாள் நூரி.


--------------------------------------------------------------------------------

எயிட்ஸ் பற்றிய ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தகாத உறவுகள் வியாபித்து நீடிக்கின்றன. தகாத உறவால் சம்பந்தமே இல்லாத உறவுகள் கூட வாழ்க்கையை தொலைக்கும் நிலையை மீண்டும் தமிழ் இதயங்களுக்கு நினைவுறுத்தவே இந்த சிறுகதை.

7 Comments:

At 3:24 PM, Blogger இப்னு ஹம்துன் said...

Congrats to the Author & 'Nambikkai' Group.

Useful message. Great Job.

 
At 3:37 PM, Blogger நம்பிக்கை said...

எயிட்ஸ் எச்சரிக்கைக்கு அருமையாக எழுதிய இந்த அன்பருக்கு நம்பிக்கையின் பாராட்டுக்கள்!

 
At 3:39 PM, Blogger Bharaniru_balraj said...

பெற்றவர் பாவம் பிள்ளைக்கு. ஆணால் ஒருவரின் தவறுக்கு சம்பந்தமில்லா இருவருக்கு மரணதண்டனை அல்லவா கிடைக்கிறது.

இக்கதை தவறு செய்பவர்களுக்கு அறிவுரையாக் இருக்கட்டும்.

குறிப்பு: நான் கல்லூரியில் படிக்கும் பொழுது எயிட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் கன்யாகுமரியிலிருந்து சென்னை வரை பாண்டிச்சேரி வழியாக ப்ரச்சாரம் மேற்கொண்டேன். இதற்காக் இரு அரசாங்கத்தினாலும் பாராட்டுக்கடிதம் வழங்கப்பட்டேன். உங்கள் விழிப்புணர்வு முற்சியும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

 
At 10:49 AM, Blogger ப்ரியன் said...

கதையின் கருத்தும் ஆழமும் அருமை...ஒரு பாவமும் அறியா தாய் சேய் மூலம் மனதை பாரமாக்கியது உண்மை..கதாபாத்திரங்களின் பெயர்களை வெறும் அலி,நூரி என தராமல் இன்னும் முகமது அலி...அந்தமாதிரி தந்திருக்கலாம் என்பது என் கருத்து வாழ்த்துக்கள் படைப்பாளிக்கு

 
At 10:54 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க இப்னு ஹம்துன் அவர்களே!

நீங்களே சிறந்த எழுத்தாளர் தானே, உங்களிடமிருந்து கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எதிர்பார்க்கிறோம், தவறாமல் அனுப்பி வையுங்க.

அன்புடன்
பரஞ்சோதி

 
At 10:16 PM, Anonymous Anonymous said...

எயிட்ஸ் பயம் மறைந்துப் போய்விட்டது என்று கதையின் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ளது நிஜத்திலும் நிஜம். அதை மீண்டும் நினைவுபடுத்தும் விதத்தில் தமிழ் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

கதையின் கடைசி வரிகள் கண்கலங்க வைத்து விட்டது. படைப்பாளர் இது போன்ற இன்னும் சத்தான சிந்தனைகளை வெளிபடுத்த வேண்டும்.

 
At 4:04 PM, Blogger இப்னு ஹம்துன் said...

//வாங்க இப்னு ஹம்துன் அவர்களே!

நீங்களே சிறந்த எழுத்தாளர் தானே, உங்களிடமிருந்து கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எதிர்பார்க்கிறோம், தவறாமல் அனுப்பி வையுங்க.//

அன்பின் பரஞ்சோதி அண்ணா,

நீங்களும் பாஸிட்டிவ்ராமா அண்ணன் அவர்களும் விடுத்துள்ள அன்பு கோரிக்கைக்கு நன்றி.

மிகுந்த பணிப்பளுவினூடே தங்களின் அன்புஅழைப்புக்கு விடையாக ஆக்கங்கள் அனுப்ப முயல்கிறேன்.

என் இந்த தாமத மறுமொழிக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

 

Post a Comment

<< Home