நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, April 13, 2006

நம்பிக்கை பாடல்கள்!

விழியனின் கடிதம் :
நம்பிக்கை நெஞ்சங்களே,

அடியேனின் ஒரு சின்ன வேண்டுகோள். சில வாரங்கள் முன்னர் வேலூரில் ஒரு நிர்வாகியை சந்திக்க நேரிட்டது, அவர் பல ஊனமுற்றோர் ,அனாதை இல்லங்களோடு தொடர்பு கொண்டு தொண்டாற்றி வருகின்றார். அவர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை உங்களிடம் வைக்கின்றேன்.

இது போன்ற இல்லங்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவு உணவின் போதும், நாளை துவங்கும் பழைய போதும் பாடல்களை பாடிவருகின்றனராம்.புதிய சிந்தனையோடும், நம்பிக்கையோடும் சில பாடல்கள் அவர்களுக்கு வேண்டுமாம்.

நம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல நல்ல பாடல்களை இயற்றுவோம். அனைவரையும் ஆர்வமுடன் பங்கோற்க அழைக்கிறேன். எழுத்துக்கள் ஏட்டிலும் நெட்டிலும் இருப்பதை காட்டிலும் மாணவர்கள் மனதில், அன்புக்கு ஏங்குவோருக்கு உறுதுணையாக இருப்பின் அதுவே நம் உண்மையான வெற்றி என்று கருதுகின்றேன்.

ஏற்கெனவே மற்ற கவிஞர்களின் பாடல்களையும் இங்கே இடலாம். நாம் அனைவரும் சேர்ந்து சரி செய்து ஒரு பத்து பாடல்களை தேர்வு செய்வோம். நிச்சயம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒரு ஊரில் ஒலிக்க துவங்கினால் அது தமிழகம் எங்கும் ஒலிக்கும். நம் நம்பிக்கை குழுவிற்கு பெருமை சேர்க்கும்.

மேலும் கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றது. வார்த்தைகள் எளிமையாக இருத்தல் நலம்.

வாருங்கள் நம்மால் முடிந்த நம்பிக்கையை பிஞ்சுகளின் உள்ளத்தில் விதைப்போம்.

நன்றியுடன்
உமாநாத் (எ) விழியன்


முதல் பாடல் தருபவர் ஆன்மீக அன்பர் காழியூரான் சம்பந்தன் அவர்கள்!

இரவின் முடிவில் விடியல் இருக்கும்!
விடியும் 'பொழுது' ஒளியின் துவக்கம்!
ஒளிக் கம்பியிலே சுருதியை கூட்டு!

ஒவ்வொரு மூச்சிலும் ஆனந்தம் காட்டு!

வைத்திடும் அடி ஒவ்வொன்றிலும் உறுதி
தோல்வியைப் பொசுக்கும் ஊழிப் பெருந்தீ
உலகோர் அனைவரும் எம்முடையோரே!
நன்றே செய்ய அருள்வாய் சக்தீ!

சிந்திடும் வியர்வையும் நிலந்தனில் உரமாய்
இரேசிக்கும் காற்றும் மரத்திற்கு வாழ்வாய்
செய்திடும் செயலும் பிறர்கொரு பலனாய்
ஆகிட அருள்வாய்! கேட்டேன் தருவாய்!


பயமது பொடிபட தயக்கம் இடிபட
தொடர்ந்து நடப்பேன் வாழ்வை வழிபட!
என்னுடன் இருப்போர் பலருண்டு
நான் தனியில்லை பெரும் படையுண்டு!

- காழியூரான்இரண்டாவது பாடல் தருபவர் கனடா திருமதி. விஜிசுதன் அவர்கள்

துணிவாய் இரு! துடிப்பாய் எழு!
எதுவும் நடக்கலாம்
விழிப்புடன் இரு!

வீண் கனவுகள் தகர்த்து!
இளமையை நகர்த்து!
நாளைய உலகம்
உன் நம்பிக்கை விதைப்பு!

கல்விகள் சொல்லும்
பாடங்கள் கொஞ்சம்!
காலமே உணர்த்தும்
வாழ்க்கையில் மிச்சம்!

உந்தன் விரல்கள்

உளியின் நகல்கள்!
உண்மையோடு உன்னைச் செதுக்க
மிளிரும் நிஜங்கள்!

தோல்வி என்பது

வெற்றியின் தொடக்கம்!.
துணிந்தால் மலையும்
கடுகாய் சிறுக்கும்!.

எந்த இடரும்

தகர்த்து நிறுத்து!
நம்பிக்கைகளின்
கரங்கள் கோர்த்து!!...

உந்தன் வாழ்க்கை

உந்தன் கைகளில்!
உன்னை அறிந்தால்
வெற்றி உன் தோள்களில்!.

-- சுதனின்விஜி

மூன்றாவது பாடலைத் தருபவர் பாஸிடிவ் ராமா

சாதிக்கப் பிறந்தோம்!

சாதிக்கப் பிறந்தோமே நாமடா - இதை
சந்தோஷ மாகக் கொண் டாடடா!
வீதியிலே வரும் கேலிப்பேச்சை எல்லாம்
எச்சமாய் துச்சமாய் தள்ளடா!

( சாதிக்கப் பிறந்தோமே...)

சாதிமதம் என்ற பாகுபாடு - இங்கு
ஏதும் நமக் கில்லையே
நீதி தேவனே உன்தாழ் பணிந்தோம்
நிம் மதியே அடைந் தோம்!

( சாதிக்கப் பிறந்தோமே...)

வானம் வசப்படும் தூரமே - நம்
வாழ்வினில் வசந் தம் வீசுமே!
ஊனம் மனதினில் இல்லையே - மன
ஊக்கம் நம் வெற்றியைச் சொல்லுமே!

( சாதிக்கப் பிறந்தோமே...)

அன்னை பாரதம் தந்தை வான்வெளி
தாயகம் போற்றித் தான் வாழுவோம்!
யாதும் ஊர் எனப் பாடுவோம்
யாவரும் கேளிர் என் றாடுவோம்!

(வானம் வசப்படும் ...)

சிந்தை அனைத்தையும் கல்வியில் சேர்த்து
சீரிய வெற்றியைக் காணு வோம்!
நற்குணம் கொண்டு அல்லவை வென்று
கற்புடை வாழ்வுதான் வாழு வோம்!

(வானம் வசப்படும் ...)

சாதிக்கப் பிறந்தோமே நாமடா - இதை
சந்தோஷ மாகக் கொண் டாடடா!
வீதியிலே வரும் கேலிப்பேச்சை எல்லாம்
எச்சமாய் துச்சமாய் தள்ளடா!

- பாஸிடிவ் ராமா

0 Comments:

Post a Comment

<< Home