நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, May 27, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 109

உலகின் புதிய கடவுள்

சுந்து சாமியாராகி விடும் முடிவில் இருந்தான்.இதற்கும் அவனுக்கு அப்போது தான் சூப்பர்வைசராக பதவி உயர்வு கிடைத்திருந்தது.சுந்துவுக்கு தொழிலாளிகளை மேற்பார்வை இட்டு போரடித்து போயிருந்தது.வீட்டில் சம்சாரத்தோடும் சண்டை.அதனால் சாமியாராகிவிடலாம் என்று யோசித்துக்கொண்டே போனான்.

வழியில் பஸ்ஸ்டாண்டில் ஒரு இளைஞன் சுந்துவின் ஆபிஸ் வரவேற்பாளர் புனிதவதியை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான்.அவனை பார்த்ததும் சுந்துவுக்கு ஏதோ பொறி தட்டியது.சுந்து அவனை வித்யாசமாக உற்றுப்பார்ப்பதை அறிந்த அந்த இளைஞன் சுந்துவுக்கு விஷயம் புரிந்துவிட்டது என்பதை அறிந்தான்.ஓடத்துவங்கினான்.

"நில்.நில்.." என கத்திக்கொண்டு சுந்து அவன் பின்னால் ஓடினான்.அவனை பிடித்துவிட்டான்.

"யார் நீ" என கேட்டான் சுந்து.ஆந்தை போல் விழித்தான் இளைஞன்.

"இங்கே என்ன செய்கிறாய்" என கேட்டான் சுந்து.அவனால் பிரமிப்பை அடக்கவே முடியவில்லை.ஆன்மிகத்தில் ஊறி திளைத்த சுந்துவுக்கு அந்த இளைஞனை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமமே ஏற்படவில்லை.

அந்த இளைஞன் தான் கடவுள்.

சர்வவல்லமை படைத்த கடவுள் புனிதவதியிடம் ஜொள் விட்டுக்கொண்டு நிற்பதை கண்டால் சுந்து அதிர்ச்சி அடைவானா மாட்டானா?

"பசிக்குதுப்பா சுந்து.ஒரு டீ வாங்கித்தரப்படாதா" என கேட்டார் கடவுள்.

இருவரும் டீகடைக்கு போனார்கள்.டீ குடித்தார்கள்.

"உங்கள் பெயர் என்ன?" என்று தயங்கி தயங்கி கேட்டான் சுந்து.

"விருமாண்டி" என்றார் கடவுள்.

"தெற்கத்தி பெயராக இருக்கிறதே" என தயங்கினான் சுந்து.

"ஆமாம்பா சுந்து.நான் தெற்கத்திக்காரன் தான்.சொந்த ஊர் மதுரை" என்றார் கடவுள்.

"இங்கே எதற்கு வந்தீர்கள்?" என கேட்டான் சுந்து."புனிதா.."என இழுத்தான்.

"அது ஒரு பெரியகதை" என்று பெருமூச்சு விட்டார் கடவுள்."நான் பிறந்தது மதுரை,ஒரு ஆச்சாரமான குடும்பத்தில்.உன்போலவே நானும் பயங்கர கடவுள் நம்பிக்கை கொண்டவன்.கல்யாணம் செய்துகொள்ளாமல் கடவுளுக்காகவே என்ன் வாழ்வை அர்ப்பணித்தேன்.அப்போது என் கண்முன் கடவுள் தோன்றினார்.அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சொன்னார்.வேண்டுமானால் என்னை அந்த பதவியை ஏற்கச்சொன்னார்.நான் ஏற்றேன்.ஒரே வருடம்.ராஜினாமா செய்துவிட்டேன்..."என பெருமூச்செறிந்தார் கடவுள்.

"என்ன சொல்கிறீர்கள்?அப்போது கடவுள் என்பது ஒரு ஆள் கிடையாதா?ஒரு பதவியா?"என குழப்பத்துடன் கேட்டான் சுந்து.

"ஆமாம்பா சுந்து.இப்ப நீ விரும்பினால் கூட கடவுளாகலாம்.அந்த பதவி காலியாகத்தானிருக்கிறது" என்றார் கடவுள்.

"எனக்கு கடவுளாக வேண்டும்.என்ன செய்வது?" என கேட்டான் சுந்து.

*******

கண்விழித்தான் சுந்து. பகீறென்ராகிவிட்டது அவனுக்கு.

அண்டவெளியில் மிதந்துகொண்டிருந்தான் அவன்.

"பூமி உருவாகட்டும்" என்றான் சுந்து

பூமி உருவானது.சுந்து அதில் இறங்கினான்.மேலே பார்த்தான்.ஒன்றுமே இல்லை.

"சூரியன்,நட்சத்திரம்,நிலா உருவாகட்டும்" என்றான் சுந்து

மூவரும் உருவானார்கள்.

"மரம்,செடி,கொடி உருவாகட்டும்" என்றான் சுந்து.

மரம்,செடி,கொடிகள் உருவானது

சுந்துவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது.தான் கடவுளாகிவிட்டதை அவன் அறிந்தான்.மிக நல்ல உலகை படைத்து காட்டுவது என முடிவு செய்தான் சுந்து.

"ஆணும் பெண்ணும் உருவாகட்டும்" என்றான் சுந்து.

இரு எறும்புகள் உருவாயின.

குழம்பினான் சுந்து."என்ன இது?" என உரக்க கேட்டான்.

"கடவுள் முன் மனிதன் எறும்பு போல்தான்.நீ கடவுள் என்பதால் அவர்கள் இருவரும் உனக்கு எறும்பு போல் அற்பமாக தெரிகிறார்கள்.உண்மையில் அவர்கள் மனிதர்களே" என அசரீரி ஒலித்தது.

ஆணையும் பெண்ணையும் சுந்து உற்றுப்பார்த்தான்.'சென்று மானுட இனத்தை பெருக்குங்கள்" என்றான் சுந்து.அவர்கள் விரைந்தோடினார்கள்.

******

சுந்துவுக்கு போரடித்தது.எப்படி பொழுதுபோக்குவதென்றே தெரியவில்லை.பசி இல்லாததால் எதையும் படைத்து உண்ண முடியவில்லை.டீவி பார்க்கலாமென்றால் அதில் வெறும் எறும்புகளாகவே நிகழ்ச்சிகள் வந்தன.அவனுக்கு சமாமானவர்கள் யாரியும் அவனால் படைக்க முடியாதென்பதால் பேச்சுதுணைக்கு கூட ஆள் இல்லை.

எறும்பு உலகில் ஓயாத சண்டையாக இரூந்தது.இவன் போனால் அவை சண்டையை நிறுத்தின.

"மூவரும் நீயே,முதல்வரும் நீயே,ஆதியும் நீயே,அந்தமும் நீயே"என கவிதை பாடத்துவங்கின.

முதலில் கேட்பதற்கு நன்றாகத்தானிருந்தது,பிறகு சுந்துவுக்கு போரடித்து விட்டது.முகத்துக்கு நேரே புகழ்ச்சியை எத்தனை நேரம் கேட்பது?

சுந்து எழுந்துபோனான்.சுந்து போனதும் எறும்பு உலகில் சண்டை மீண்டும் துவங்கியது.

"சனியன்களா"என சுந்துவுக்கு கோபம் வந்தது.எறும்புகூட்டத்தின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி அழித்தான்.

"அடடா என்ன செய்துவிட்டோம்?" என அதன்பின் தோன்றியது.

மரத்தடியில் அமர்ந்து யோசித்தான்.

கடவுள் பதவி வரமல்ல,சாபம் என அவனுக்கு தோன்றியது.

பேச்சுதுனைக்கு கூட ஆள் கிடையாது.பொழுதுபோக்கு எதுவும் கிடையாது.காலாகாலத்துக்கும் தனிமையே துனைவனாக வாழவேண்டியதுதான்.எறும்புகள் தான் துணை.அவையும் வெறும் முகஸ்துதி மட்டுமே செய்யும்.

எறும்பை மேற்பார்வை செய்யவா நான் இருக்கிறேன்?என் பழைய கம்பனியிலாவது தொழிலாளிகளை மேற்பார்வை செய்தேன்.இங்கு ஒரு எறும்புபுற்று,அதன் மேனேஜராக நான்.என்ன வேலை இது?

கடவுள் என்பவர் எறும்புப்புற்றின் நிரந்தர மேனேஜரா என்ன?

எனக்கு வேண்டாம் இந்த வேலை.

"ராஜினாமா" என அலறினான் சுந்து

***************

சுந்து தன் வீட்டுமுன் நின்றிருந்தான்.அசாத்தியமான தெளிவு அவன் மனதில் ஏற்பட்டிருந்தது.வீட்டுக்கு உள்ளே போனான்.

"ஏங்க லேட்டு" என ஆசையோடு அவன் மனைவி ஓடிவந்தாள்."நான் சண்டை புடிச்சது தப்புதாங்க.உங்க கிட்ட சண்டை புடிக்காம யார் கிட்ட பிடிப்பதாம்" என செல்லமாக கொஞ்சினாள்.

"அறிவிருக்கா உனக்கு?என் பின்னாடியே வர்ரே?வெக்கமா இல்லையா" எனும் சத்தம் கேட்டு சுந்து கதவை திறந்து பார்த்தான்.

விருமாண்டி கடவுள் புனிதாவிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தார்.சுந்துவை பார்த்ததும் லேசாக சிரித்தார்.

'அரேஞ்சுட் மேரேஜ் தாங்க கரெக்ட்" என்று கத்தினான் சுந்து.

கதவை சாத்தினான்.

"உனக்கு புருஷனா இருப்பது கடவுளாக இருப்பதை விட மேலானது தெரியுமா" என மனைவியிடம் சொன்னான் சுந்து.

"பொய்யி புளுகா" என அவன் கன்னத்தில் செல்லமாக இடித்தாள் அவன் மனைவி.

3 Comments:

At 1:15 PM, Blogger சேகு said...

ஜாலியான,உற்சாகமான சிறுகதை.பாராட்டுக்கள்

 
At 1:15 PM, Blogger சேகு said...

ஜாலியான,உற்சாகமான சிறுகதை.பாராட்டுக்கள்

 
At 1:16 PM, Blogger சேகு said...

ஜாலியான,உற்சாகமான சிறுகதை.பாராட்டுக்கள்

 

Post a Comment

<< Home