நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Tuesday, May 23, 2006

கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை







கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை

எனது பெயர் Nick Vujicic . என்னை படைத்த இறைவனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக படைத்ததற்காக நான் பெருமைப்படுகின்றேன்.

இப்படி யாராவது சொல்லக்கூடுமா..? சொல்லக்கூடும் இறைவன் தனக்கு வளமான வாழ்வு கொடுத்து - நல்ல உடலமைப்பு கொடுத்திருந்தால்.ஆனால் பாருங்களேன் இந்த மனிதரை.


கைகள் மற்றும் கால்களின் பகுதிகள் எதுவும் இல்லாமல் பிறந்தாலும் இந்தக்குறை இறைவன் என் மீது அன்பு வைத்திருப்பதால்தான் என்று கூறுகின்றார்.
நாம் ஏதாவது சின்ன பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டால் கூட "அய்யோ எனக்கு மட்டும் இறைவன் இப்படி பண்ணிவிட்டானே" .." அப்படி பண்ணிவிட்டானே" என்று இறைவனை திட்டி தீர்த்துவிடுவோம்.

சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் மனம் தளர்ந்து ஒடிந்து போய் இருப்பவர்களுக்கெல்லாம் இந்த மனிதர் தன்னம்பிக்கை தருகின்ற பாடமாக இருக்கின்றார்.

தனது பிறப்பினை இத்தனை பேருக்கு சாட்சியாக - மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படி வைத்த இறைவன் தன்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கின்றான் என்று சொல்லும் அளவிற்கு பக்குவப்பட்டிருக்கும் மனிதர் இவர்

சமீபத்தில் கூட நான் பார்த்த டிஷ்யும் என்ற படத்தின் வசனத்தில்; உயரம் குறைவாக உள்ள மலையாள நடிகர் பற்றிய ஒரு காட்சி :

அந்த உயரம் குறைவான நடிகரின் கதாபாத்திரம் காணுகின்றவர்களிடமெல்லாம் கடன் வாங்குவார் ஒரு தடவை சிறுவர்களிடம் கடன் வாங்கி விட அந்தச்சிறுவனின் தந்தை வந்து அவரைத்திட்ட இதனைக்கண்ட கதாநாயகன்

"ஏண்டா இப்படி அவமானப்படுத்துற.. சின்னப்பையன்களையெல்லாம் ஏண்டா ஏமாத்துற..ச்சே எனக்கு வெட்கமா இருக்குடா" என்று கடிந்து கொள்வதைப் பார்த்து அவர் ஒரு வசனம் சொல்லுவார்

"டேய் ..நான் செய்வது தப்புதாண்டா..ஆனா நான் வெளியில் சென்றால் என் உருவத்தைக் கண்டு கிண்டல் செய்கின்றார்கள். அவர்கள் என்னை கிண்டல் செய்வதைத்தடுக்கத்தான் இந்த கடன் வாங்கும் முயற்சி.."

"என்னைக் கண்டு கிண்டலடிப்பவர்கள் எல்லாம் அய்யோ இவன் வந்தால் கடன் கேட்பான் என்று ஓடி ஒளிவதைக்கண்டு எனக்குள் ஒரு சந்தோஷம்..என்னை யாரும் கிண்டலடிக்க மாட்டார்கள் அல்லவா..

தப்பு செய்யாத மனுசனே இல்லைடா..ஏன் கடவுளே தப்பு செய்திருக்கான்..பின்னே என்னை இப்படி படைச்சது அவனோட தப்புதானே..?"

என்று சொல்லிவிட்டும் செல்லும் காட்சி மனசை உருக்குகின்ற காட்சி. இப்படி எல்லா மனிதர்களுமே தவறை கடவுள் மீது போட்டுவிடுவார்கள்.

தன்னை மட்டும் கடவுள் குறைகளோடு படைத்துவிட்டானே என்று இவரைப்போன்று குள்ளமாகப் பிறந்ததற்கு அல்லது உடல் ஊனமாய் பிறந்ததற்கு வருத்தப்படுபவர்களுக்கு மத்தியில் பாதி உடலே இல்லாமல் பிறந்தாலும் இதயம் முழுமையடைந்துப் பேசும் இவரை கண்டால் அதிசயமாகத்தான் இருக்கின்றது.


உங்களுக்கு எத்தனை துன்பங்கள் அல்லது போராட்டங்கள் வந்தாலும் அதனை மறந்து விட்டு மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் இவரின் பிரச்சாரம்.

1982 ம் மாதம் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்தார் அவர். இவருடைய தந்தை ஒரு சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிபவர் .

கை - கால்கள் இல்லாமல் பிறந்த தங்களுடைய முதல் குழந்தையைக் கண்டு அதிரிச்சியுறற பெற்றோர்கள் பின்பு நிதானமாய் சொல்லியிருக்கின்றார்கள்; "கடவுளை வேண்டிக்கொள்வோம்" என்று.

மருத்துவர்கள் கூட இதற்கு மாற்று வழிதெரியாமல் திகைத்துப்போய் நின்று விட்டனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.


ஆனால் தற்பொழுது நிக்கிற்கு ஒரு தங்கையும் தம்பியும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் மற்ற குழந்தைகள் போல பிறந்திருக்கின்றார்கள்.

நிக்கின் குறைபாடுகளைக் கண்டு இவர் பிறந்தவுடன் இவருடைய தந்தைக்கு அனைவரும் துக்கம் சொல்ல வந்துவிட்டார்கள். அனைவருமே ஆதங்கப்பட ஆரம்பித்து விட்டார்கள் " அன்பின் உருவமாக - அன்பின் கடவுளாக இருக்கும் இறைவன் - இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தையை ஏன் இந்த அளவிற்கு மதப்பற்றுள்ள அவனையே நாள்முழுவதும் துதிக்கின்ற ஒரு பாதிரியாருக்கு கொடுக்க வேண்டும் என்று.

இப்படி கை - கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தை சீக்கிரத்தில் இறந்து விடும் என்றுதான் அவருடைய தந்தை நினைத்திருக்கின்றார்.ஆனால் நிக் உடல் குறைபாடே தவிர ஆரோக்கியமான குழந்தையாகதான் இருந்தார்.

"என்னுடைய பெற்றோர்கள் முதலில் அதிர்ச்சியுற்று எனக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமையுமோ என்று பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு மன - உடல் வலிமையைக் கொடுத்து தைரியத்தையும் கொடுத்திருக்கின்றான். " என்று கூறுகின்றார்.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் கை- கால்கள் இல்லாமல் அவரும் அவரின் சுய தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவருடைய பெற்றோர்களும் அவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று.

குழந்தைகள் என்றால் நாம் அதன் கையைப்பிடித்து அதன் மிருதுவான விரல்களை பிடித்து தடவுவோம். அதன் பிஞ்சு விரல்களை எடுத்து நம் கன்னத்தில் வைப்போம்.

அந்தக் குழந்தையும் நம்முடைய பெரிய கண்களை - மூக்கினை - வாயினை கண்டு ஆச்சர்யப்பட்டு தனது பிஞ்சு விரல்களால் நோண்டி நமக்கு இன்ப வேதனையைக் கொடுக்கும்.

குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் அந்த தத்தல்களின் முதன்நடைக்காக எத்தனை பெற்றோர்கள் ஏங்கியிருப்பார்கள். அதனைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

அட எம்பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான் பாரு..

வா..வா..வாடா..என்று தூரத்தில் அவனை நிற்கவைத்து அவனை தன் பக்கம் வரச்சொல்லி

அவன் தத்தி..த..த்..தி நடந்து நெருங்கும்பொழுது கீழே விழுந்து விடுவானோ என்ற ஆர்வ மிகுதியில் தாய் அவனைப் பாதி தூரத்திலையே பிடித்து அணைத்துக்கொண்டு
எம் பையன் நடக்க ஆரம்பிச்சுட்டான்..ஆரம்பிட்டான் என்று செல்லமாய் குதூகலிப்பார்களே..?

அதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் கொடுத்து வைக்காத பெற்றோர்களாக அவர்கள் போய்விட்டாலும் மனம் தளர்ந்து போகாமல் நிக்கை படிக்க வைத்திருக்கின்றனர்..

அதற்கும் அவர்கள் போராட வேண்டியதிருக்கின்றது. நிக் பள்ளிக்கு செல்லுகின்ற பருவம் வந்ததும் Main Stream பள்ளியில் சேர்ப்பதற்காக முயன்றபொழுது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி உடல் ஊனமுற்ற குழந்தையினை சேர்க்க அந்தப்பள்ளி மறுத்துவிட அவனது தாய் அந்த நாட்டின் சட்டத்திற்கு எதிராக போராடி நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி நாட்டின் சட்டத்தை மாற்ற வைத்து நிக்கை பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். அந்தப்பள்ளியில் படிக்கின்ற முதல் ஊனமுற்ற மாணவன் நிக் மட்டுமே..

பாருங்களேன் நிக்கின் தெளிவான பக்குவப்பட்ட உரையினை :






"இப்படி போராடுவதற்கான முயற்சிகளை இறைவன் எனது தாய்க்கு தந்ததற்காக நான் இறைவனுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

முதலில் நான் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானேன். என்னால் மற்ற மாணவர்கள் போல இருக்க முடியவில்லை. நான் மற்றவர்களால் வெறுக்கப்பட்டு, ஒரு விநோத பிராணியைப்போல பார்க்கப்பட்டு, மூன்றாம் தரமாய் நடத்தப்பட்டு உடன் படிக்கின்ற மாணவர்களால் கேலி , கிண்டலுக்கு உள்ளானேன். அப்பொழுதெல்லாம் எனது பெற்றோர்கள் தந்த ஊக்கமும் ஆதரவும்தான் எனக்கு ஆறுதலாய் இருந்தது

சில சமயங்களில் சக மாணவர்களின் அதிகமான கேலி , கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் இருந்தபொழுது எனது பெற்றோர்கள்தான் என்னைச் சமாதானப்படுத்தி மற்ற மாணவர்களோடு நண்பர்களாக உன்னை மாற்ற முயற்சி செய்யச் சொன்னார்கள் .

நானும் அவர்களுடன் கிண்டலாக பேசிக்கொண்டும் சில வேடிக்கையான செயல்களை அவர்களுக்கு முன்னால் செய்து காட்டி அவர்களை சிரிக்க வைத்து கலகலப்பு ஊட்ட ஆரம்பிக்க. நானும் அவர்களைப்போன்ற உணர்வுகள் உள்ளவன்தான் என்று அவர்களும் நாளடைவில் உணர ஆரம்பித்தார்கள்.
இறைவனின் அருளால் என்னைச் சுற்றி புதிய புதிய நண்பர்கள் நல்ல நட்போடு பழக ஆரம்பித்தார்கள்.

எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று யாரையும் இதற்கு குற்றம் சொல்ல முடியவில்லையே என்ற வேதனையில் நாட்கள் செல்ல ஆரம்பிக்க எனக்கே என்மீது வெறுப்பு ஆரம்பித்தது கோபம் வர ஆரம்பித்தது . சண்டே பள்ளியில் சேர்ந்த பிறகு நான் கற்றுக்கொண்ட விசயம் கடவுள் எல்லாரையும் விரும்புகின்றான் ஆனால் என்மீது மிகுந்த அக்கறையாக உள்ளான் என்று.

ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இறைவன் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்றால் ஏன் என்னை இப்படி படைக்க வேண்டும் ?. நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா? என்று கேட்டுக்கொண்டே சில சமயம் என்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தீர்மானித்தேன். ஆனால் என்னுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு வாழவேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

சுற்றியுள்ளவர்களின் வார்த்தை பிரயோகங்களிலிருந்தும் முகச்சுளிப்புகளிலிருந்தும் வித்தியாசமான பார்வைகளின் கொடுரங்களிலிருந்தும் தனிமையில் கழித்த பொழுதுகளிலிருந்தும் வாழ்க்கையில் போராடுவதறகான அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.

இறைவன் எனக்குண்டான இந்த குறைபாடுகளிலிருந்து மற்றவர்கள் சின்ன சின்ன விசயங்களுக்கு கூட கவலையில் மூழ்கி விழுந்து விடக்கூடாது . ஏதாவது ஒரு வகையில் சோகங்களை கொடுத்து ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுப்பான் இறைவன்.

உங்களுக்கு இதனை உணர்த்தவே என்னைத்தேர்ந்தெடுத்துள்ளான் இறைவன்.

எனக்கு தற்பொழுது 21 வயதாகிறது . நான் Bachelor of Commerce majoring in Financial Planning and Accounting முடித்துள்ளேன். எனக்கு இறைவன் பேச்சுக்கலையை கொடுத்திருக்கின்றான்.

அதன் மூலம் எல்லா இடங்களுக்கும் சென்று என்னுடைய கதையை மற்றவர்களுக்கு சொல்லி சின்னச் சின்ன சோகங்களில் மூழ்கிக்கிடப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்போகின்றேன்.


எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற கணவுகளும் லட்சியங்களும் இருக்கின்றது. நான் கடவுளின் அன்பைப்பெற்றவன் என்று மற்றவர்களுக்கு சாட்சியாக இருக்கின்றேன் என்பதில் பெருமை.

என்னுடைய கதையை நான் புத்தகமாக வெளியிடப்போகின்றேன். அதன் தலைப்பு
கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலையும் இல்லை..

"No Arms, No Legs, No Worries!"

கை - கால்கள் இல்லாமலையே தான் சாதிக்க வேண்டும் என்ற வெறியோட இருக்கும் நிக் பேன்றோர்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு.

உணவு உண்பதற்கும் எழுதுவதற்கும் - நடப்பதற்கும் - தண்ணீர் குடிப்பதற்கும் - ஏன் தன் இயற்கைக்கடன்களை நிறைவேற்றுவதற்கு கூட இன்னொருவரின் உதவி வாழ்நாள் முழுவதும் இவருக்கு தேவைப்படுகின்றது.

இன்னொருவரின் சார்பு இல்லாமல் இவரால் வாழ்நாளைக் கழிக்க முடியாத போதிலும் இவர் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் என்றால் இவர் நம்பியிருக்கும் அந்த இன்னொருவர் இறைவன் தான். அவர் சாதிப்பதற்காக நாமும் பிரார்த்திப்போம்.

ஆகவே பரிட்சை தோல்வி - காதல் தோல்வி - கடன் பிரச்சனை - சொந்தங்களோடு பகை - மனைவியுடன் சண்டை - வேலையின்மை - அவமானங்கள் இதுபோன்ற சின்னச் சின்னத் துன்பங்களுக்கெல்லாம் மனம் வருந்தி முடங்கிப்போய்விடாமல் தன்னம்பிக்கையோடு போராடுவோம்.

மனித வாழ்க்கையில் தோல்வி வெற்றிகள் - இன்ப துன்பங்கள் அடுத்தடுத்து வருகின்ற ஒரு சுழற்சிதான்.

தோல்வி வருகின்ற நேரத்தில் அதிக அளவு சோகப்படாமலும்
வெற்றி வருகின்ற நேரத்தில் அதிக அளவு மகிழ்ச்சிபடாமலும் வாழ்க்கையை அனுபவிப்போம்.

வாழுகின்ற இவ்வுலக வாழ்க்கை என்பது கொஞ்சகாலம்தான். யாரும் இறைவன் விதித்துவிட்ட நாட்களுக்கு ஒரு நாள் அதிகமாகவே அல்லது குறைவாகவோ வாழப்போவதில்லை.

(நன்றி: முத்தமிழ் & 'நிலவுநண்பன்' ரசிகவ் ஞானியார்)

2 Comments:

At 11:46 AM, Blogger சிவமுருகன் said...

//கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலை இல்லை//

நம்பிக்கை இருந்து விட்டால் எதுவும் தேவையில்லை.

//வாழுகின்ற இவ்வுலக வாழ்க்கை என்பது கொஞ்சகாலம்தான். யாரும் இறைவன் விதித்துவிட்ட நாட்களுக்கு ஒரு நாள் அதிகமாகவே அல்லது குறைவாகவோ வாழப்போவதில்லை.//

பக்குவப்பட்ட வார்த்தைகள்,

தமிழில் தந்த சேவைக்கு மனமார்ந்த பாராட்டும், நன்றியும்.

 
At 12:06 PM, Blogger மஞ்சூர் ராசா said...

அருமையான நம்பிக்கை தரும்
நம்பிக்கை வலைப்பதிவில் வருவது இன்னும் அழகு. ரசிகவ் மேலும் இதுபோல நல்ல கட்டுரைகளை தேடி எடுத்து நமக்கு அளிக்க வாழ்த்துகிறேன்.

 

Post a Comment

<< Home