நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கதை - 1
மஹா சக்தி - நிலா
'ஆண்டவா, எனக்கு முன்னாலே என் புள்ளய கூப்டுக்கோ... இதுக்கு மேலயும் அவன் கஷ்டப்படக் கூடாது' கோமதி டீச்சர் மனமுருகி தனது வழக்கமான கோரிக்கையை இறைவனிடம் வைத்தாள்.
அன்றைக்கு உடம்பு அசதியாக இருந்ததில் மனசும் பலவீனப்பட்டிருந்தது. 32 வயசுப் பிள்ளை தனக்கு முன் இறந்து விட வேண்டும் என்று பிரார்த்திப்பதில் ஒரு வித குற்ற உணர்வும் அப்படி பிரார்த்திக்கச் செய்துவிட்ட விதியின் மேல் கோபமும் தன் நிலைமையை எண்ணி சுய பச்சாதாபமுமாய் கண்ணில் நீர் கட்டியது.
சேகர் எப்படி இருந்திருக்க வேண்டிய பிள்ளை! எல்லாம் ஒழுங்காய் நடந்திருந்தால் ரோஷினியைக் கைப்பிடித்து சுவிட்சர்லாந்தில் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகி இருந்திருப்பான்... கல்யாணத்துக்கு 2 வாரம் முன்னர் பாழாய்ப்போன லாரிக்காரன் பைக்கில் போய்க்கொண்டிருந்த பிள்ளையை இடித்துவிட்டுப் போய்விட அவன் வாழ்க்கை இப்படி
அப்பளமாய் நொறுங்கிப்போனது.
பைக்கிலிருந்து விழுந்ததில் முதுகுத் தண்டில் பட்ட அடியைவிட ஏடாகூடமாய் அவனை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதில்தான் அதிக சேதம் என்றனர் மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழ் உணர்வே இல்லாத நிலையில் இனி வாழ்க்கையில் அவன்
நடப்பது சாத்தியமில்லை என்று அதிகம் உணர்ச்சியில்லாத முகத்தோடு அவர்கள் சொன்னதை என்று நினைத்தாலும் உயிரில் மின்னல் தாக்கியது போன்ற நடுக்கம் ஓடும் கோமதிக்கு.
இரண்டு வாரத்தில் திருமணம், நாலு வாரத்தில் சுவிட்சர்லாந்து வேலை என்பதெல்லாம் எட்டமுடியாத கானலாயிற்று. அடுத்தவர் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் போனதில் சேகரை விட அதிகம் துவண்டு போனது கோமதிதான். சேகருக்குப் பத்துவயதாகும்
போது கணவரைப் பறிகொடுத்தபின் கோமதியின் உயிர் மூச்சே அவன்தானென்றாகி இருந்தது.
அந்தப் பிள்ளை நடைப் பிணமாய்ப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் என்ன இருக்கிறது?
சேகருக்கும் அது பேரதிர்ச்சிதான். முதலிரண்டு மாதங்கள் நரகத்தில்தான் மீதி வாழ்க்கை என்ற பயமும் திகிலும் ஆட்டிப் படைக்கத்தான் செய்தன. என்றாலும் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே மனதால் மீண்டு வந்தான். அசாத்திய உறுதியோடு தன்னையும் தேற்றிக் கொண்டு அன்னைக்கும் ஆறுதல் சொல்லுமளவு அவன் முன்னேறியிருந்தது மருத்துவர்களுக்கே பெருவியப்பாய்தான் இருந்தது. இத்தனை கஷ்டத்திலும் அவன் வேலை செய்த நிறுவனம் கை கொடுத்ததில் பணம் பற்றிய கவலை இல்லாமல் சிகிச்சையில் அவனால் முழுக்கவனம் செலுத்த முடிந்தது ஒரு பெரிய வரம்தான். 'இந்தப் பிள்ளைக்கு எவ்வளவு மனபலம்' என கோமதியே பல சமயங்களில் வியந்திருக்கிறாள். இல்லை என்றால் மருத்துவர்களால் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் சாத்தியப்படுத்திக் கொண்டு வருவானா?
இப்போது ஒரு மூன்று மாதமாய் விரல்களில் அசைவு வந்திருக்கிறது - புத்தகத்தைப் புரட்டிப் படிக்க முடிகிற அளவுக்கு. உடம்பிலும் உணர்ச்சி வந்திருப்பதாய் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இதெல்லாம் போதுமா? இன்னும் ஒரு வயசுக் குழந்தை போல எல்லாக் காரியத்தையும் தாய் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் தன் பிள்ளை தனக்கு திடீரென்று ஏதாவதொன்று ஆகிவிட்டால் என்ன செய்வான் என்கிற அச்சம் கோமதியை ஒவ்வொரு நொடியும் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது. அப்படியே ஒன்றும் ஆகாவிட்டாலும் அதிகபட்சமாய் தான் வாழப்போகும் இருபது ஆண்டுகளுக்குப் பின் அவனுக்கு வேறு கதியில்லை என்ற நிதர்சனமும் அவளைத் துளித்துளியாய் இப்போதே கொல்ல ஆரம்பித்துவிட்டது.
விபூதியைக் கையில் எடுத்துக் கொண்டு சேகரின் அறைக்குள் நுழைந்தவளின் கண்ணில் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்த வளர்மதி பட்டாள். அவளைக் கண்டதும் கோமதிக்குத் தன்னையறியாமல் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 'இவளும் இவள் மூஞ்சியும்... இப்படி
இருக்கும் போதே மகாராணி போல நடந்துக்குது சனியன்... இதெல்லாம் கொஞ்சம் அழகா பொறந்து தொலைச்சிருந்துதுன்னா...'
வளர்மதி ஒரு பெரிய புதிர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் கோமதிக்குக் கோபமெல்லாம் அவள் வேலைக்காரியாய் நடந்து கொள்ளாமல் வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்கிறாள் என்பதுதான்.
அனிச்சையாய்க் குனிந்து கட்டிலின் கீழ் பார்த்தவளுக்கு ஆத்திரம் குப்பெனக் கிளம்பியது.
"கட்டிலுக்குக் கீழே குனிஞ்சு பெருக்க ஒடம்பு வளைய மாட்டங்குதா உனக்கு... மரமண்டையா?
எத்தனை தடவை சொன்னாலும் புரியாது?" பலவீனமான இடம் பார்த்து கோமதியின் மனசுக்குள்ளிருந்த அக்கினிக் குழம்பு வெடித்துக் கொப்புளித்தது.
வளர்மதி கவலைப்படாமல், "இந்தா பெருக்குதேன்" என்றபடியே கட்டிலுக்கடியில் சென்று பெருக்கினாள்.
"ஆமா, இப்பிடி தொண்டத் தண்ணி வத்த கத்தறதுக்கு நானே பெருக்கிறலாம். காசுக்குப் பிடிச்ச தண்டம்" என்றாள் கோமதி விபூதியை சேகரின் நெற்றியில் இட்டபடியே...
"இப்ப எதுக்கு இப்பிடி டென்சனாகுதீக டீச்சர்? அதாம் பெருக்கிட்டேம்ல" என்று வளர்மதி சற்றே குரலுயர்த்தியதும் கோமதி சட்டென அடங்கிவிட்டாள்
ஆனாலும் வேலைக்காரி தன்னிடம் குரலுயர்த்திப் பேசுகிறாளே என்ற ஆதங்கத்தில், "இந்தத்
திமிருனாலதான இப்பிடி வாழாவெட்டியாக் கெடக்க" என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்தபடியே வெளியேறினாள் கோமதி. எங்கே அவளுக்குக் கேட்கிறபடி சொல்லிவிட்டால் வேலையிலிருந்து நின்று விடுவாளோ என்ற பயம்! கிராமத்தில் சிறு தொழில்கள் வந்தபின் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது சுலபமா என்ன?
சேகருக்கு வளர்மதியை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமும் சேர்ந்தே கிளம்பும். வளர் அவனோடு 8வது வரை படித்தவள்தான். வயசுக்கு வந்ததும் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் மூன்று வருடத்தில் தனியாளாய் அவள் திரும்பி வந்த கதை அந்த ஜில்லாவெல்லாம் பிரபலம். குடித்துவிட்டுக் கணவன் அடித்ததில் தனது 2 வயதுக் குழந்தை இறந்து போக, போலீசில் புகார் செய்துவிட்டு பிறந்த ஊருக்குத் திரும்பிய அவளை அந்த கிராமம் ரசிக்கவில்லை.
"ஏதோ நடந்தது நடந்து போச்சு. அதுக்குப் போய் புருசன போலீசுல புடிச்சுக் குடுத்தான்னா இவ
என்ன பொம்பள?"
"பொம்பளைன்னா அடக்கம் வேணும். இப்பிடிச் செய்யத் துணிஞ்சவ வேற என்னென்ன
செய்தாளோ? புருசன் அடிக்காம என்ன செய்வான்?"
இது போல ஏகப்பட்ட விமரிசனங்கள்.
"கட்டிக் குடுத்தாச்சு. கஸ்டமோ நஸ்டமோ இனிம நீ அங்கதான் எல்லாத்தையும்
பாத்துக்கிடணும்." என்று அந்தப் பதினேழு வயதுப் பெண்ணிடம் கல்மனசாய் சொந்தங்கள்
சொல்லிவிட, வளர் அதற்கெல்லாம் மசிந்து கணவனிடம் திரும்பிவிடவில்லை.
"இந்தாருங்க... கொஞ்ச நஞ்ச அடியா வாங்கிருக்கேன்? புள்ளைக்காகத்தேன் எல்லாத்தையும்
பொறுத்துக்கிட்டிருந்தேன். அவனையும் கொன்னுப்புட்டான் அந்தப் படுபாவி. அவங்கிட்ட நான்
திரும்பப் போமாட்டேன். என் வயித்தக் கழுவிக்கதுக்கு எனக்கு முடியும். கஞ்சிக்குன்னு உங்க
வாசல் வந்து நிக்க மாட்டேன்" என்று வீராப்பாயச் சொன்னதைச் செயலிலும் காட்டிவிட்டாள்
வீட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது பெரிய கடைக்கு சொந்தக்காரியாகிவிட்டதாகச்
சொல்கிறார்கள். ஆனாலும் இன்னும் உறவு என்று அவளை யாரும் கொண்டாட மாட்டார்கள்;
ஊரில் விசேஷங்களுக்குக் கூப்பிட மாட்டார்கள்; பெற்றோர்கள் நினைத்திருந்தால் இந்தப்
பதினைந்து வருடத்தில் ஒரு மறுதிருமணம் செய்து வைத்திருக்கலாம்... பாவம்...
அவன் எண்ண ஓட்டத்தை இழுத்து நிறுத்தியது வளரின் குரல்.
"என்ன சேகரு, டீச்சர் வைதுட்டுப் போனத நெனச்சு பரிதாபப்பட்டுக்கிட்டிருக்கியாக்கும்?" குரலில் லேசான பரிகாசம்
"ம்... இல்லையே" சமாளிக்க முயன்ற சேகரின் முயற்சி ஜெயமாகவில்லை.
"ம்க்கும்... நீ ஐயோ பாவம்னு நெனக்கறதுதான் அப்படியே மூஞ்சில தெரியுதே." என்றவள்
தொடர்ந்து கண்டிப்பான குரலில், "என்னப் பாத்து பரிதாபப்படாத சேகரு. எனக்கு அது புடிக்காது" என்றாள்
அவளின் அந்த சுயமரியாதை அவனுக்குப் பிடித்திருந்தது. இன்னும் தனக்கு இந்தப் பக்குவம்
வரவில்லையே என்று தோன்ற சேகர் புன்னகைத்துக் கொண்டான்...
"ஏன் சேகரு, நீ கம்ப்யூட்டர் வேலதான பாத்த?"
"ம்"
"ஒரு கம்ப்யூட்டர் வாங்கியாரேன். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுக்கிறியா?"
அவள் கேட்டது அங்கு வந்த கோமதி காதில் விழ, "ஏண்டி என் புள்ளைய பாத்தா உனக்கு
எப்படி இருக்கு? நீ அவனுக்கு மொதலாளி ஆகணும்னு பாக்கியாக்கும்?" என்றாள் நறுக்கென்று.
வளர் பதிலொன்றும் சொல்லாமல் சேகரிடம் அர்த்தமுள்ள பார்வையொன்றை வீசிவிட்டு அடுத்த அறையைச் சுத்தம் செய்யப் போய்விட்டாள். கையிலிருந்த காபியை சேகரிடம் கொடுத்துவிட்டு கோமதி அரற்ற ஆரம்பித்தாள்:
"நம்ம தாத்தாவுக்குத் தாத்தா காலத்திலருந்தே இந்த வளரோட குடும்பம் நம்ம வயல்ல வேலை செஞ்சதுதான். இன்னைக்கு என்னமோ கொஞ்சம் சூட்டிகையா கையில பணம் சேத்துட்டதும் நமக்கே மொதலாளி ஆகணும்னு நெனக்குது பாரு. ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வச்சிருக்கான்னு சும்மாவா சொல்றாங்க?"
"நிறையா பணம் வச்சிருந்தா ஏம்மா அவ வீட்டு வேலைக்கு வர்றா?"
"ம்... யாருக்குத் தெரியும்? நம்ம குடுக்கற இருநூத்தம்பதையும் ஏன் விடணும்னு நெனக்கிறா
போல. இப்பிடி பேய் கணக்கா பணம் சேத்து ஒத்தையா என்னதான் செய்யப் போறாளோ!"
"எட்டாவதுதான் படிச்சிருக்கா... பின் எப்படி..." அவளின் வெற்றியின் ரகசியம் அறியும்
ஆர்வத்தில் சேகர் ஆரம்பிக்க அவன் முடிக்குமுன் கோமதி, "அதான் தம்பி தெரியலை. என்ன
மாயம்தான் செய்றாள்னு... டவுனுக்கு அடிக்கடி போறா... யாருக்கென்ன தெரியும் என்ன
நடக்குதுன்னு" என்று வயிற்றெரிச்சலோடு சொன்னவள், "ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.
அவளுக்குச் சொல்லிக் குடுக்கவன் பெரிய ஆளாத்தான் இருக்கணும் - என்ன ஆரம்பிச்சா நம்ம ஊருல எடுபடும்னு தெரிஞ்ச மாதிரிதான் ஆரம்பிக்கிறா... ஒரு பத்து பன்னெண்டு வருசம்
முன்னால மொதல்ல ஒரு சின்ன பெட்டிக்கடைதான் தொறந்தா... ரெண்டு நாள் முன்னால
அந்தப்பக்கம் போம்போது பாக்கேன் அந்த எடத்தில மாடி கட்டடம் கட்டி ஃபேன்சி ஸ்டோர்,
டெலிபோன் பூத், ஐஸ்க்ரீம் பார்லர்னு ஒரு நாலஞ்சு கடை இருக்கு. பத்து பன்னெண்டு பேரு
அவகிட்ட வேலைக்கிருக்காங்கன்னு ராமசாமி வாத்தியார் சொன்னாரு. பக்கத்து ஊர்லருந்தெல்லாம் இவ கடைக்கு வாராங்களாம்... ஹூம்... ஒழுங்கா படிக்காத அந்தக் கழுதைக்கு தலைல அப்படி எழுதியிருக்கு. நல்லாப் படிச்ச பையன் நீ... உனக்கு எப்படி எழுதிருக்கு பாரு... அசையக் கூட முடியாம கெடக்கற... போன ஜென்மத்தில நம்ம ஏதோ பாவம் செஞ்சிருக்கோம் போலருக்கு. எப்பப் பாத்தாலும் கஷ்டத்தையே பாத்தா வாழ்க்கையே
வெறுத்துப் போகுதில்ல" என்று ஆழ்ந்த பெருமூச்சோடு முடித்தாள்
சில நாட்களாய் எங்கே ஆரம்பித்தாலும் இந்தப் புலம்பலில்தான் முடிக்கிறாள் கோமதி. சேகர் என்னதான் முயன்றாலும் அம்மாவின் அயர்ச்சியில் மனது சுணங்கிப் போவதைத் தவிர்க்க
முடியவில்லை. அதிலும் கோமதி சமீபத்தில் அதிகமாய்ப் புலம்ப ஆரம்பித்து விட்டதில் அவளுக்குத் தான் பாரமாய் இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு வலுப் பெற்றுக் கொண்டே வந்தது. அந்த விபத்தில் இறந்திருந்தால் எவ்வளவோ நலமாய் இருந்திருக்கும் என்ற பழைய எண்ணம் அடிக்கடி தலைகாட்டிக் கொண்டுதானிருக்கிறது. தாய் தனக்குப் பணிவிடைகள் செய்து அலுத்துப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற கையாலாகாத்தனம் அவனை வெகுவாய் வதைத்தது. எதற்கும் பிரயோசனமில்லாமல் எதற்கு இந்த வாழ்க்கை என்ற கேள்வி அவனை இப்போதெல்லாம் அதிகமாய்த் துரத்திக் கொண்டிருக்கிறது.
சேகர் மாலைக் காபியைக் குடித்து முடிக்கும் வரை தாயும் மகனும் இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இன்றைக்கு ஏனோ சேகருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மேகக் கூட்டத்தில் பார்வையைப் பதித்தான். சில நேரங்களில் மௌனம் தருகிற நிம்மதி அலாதி.
தரை துடைக்க வந்த வளர்மதியின் வருகையில் அந்த சோகமான மௌனம் உடைபட்டது.
"கட்டில் காலையும் அப்படியே தொடச்சிவிட்டுரு, வளரு. ஏதோ எண்ணைக் கறை தெரியுது பாரு" என்றாள் கோமதி ஒன்றும் நடக்காத பாவனையில்
"சரி, டீச்சர்" என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் வளர் அதையே பிரதிபலித்து.
சேகர் காலிக் கோப்பையைத் தாயின் கையில் தந்ததும் பெருமூச்சோடு எழுந்த கோமதி ஏதோ நினைவு வந்தவளாய், "நாளைக்கு புரட்டாசி முதல் சனி. காலையில சீக்கிரமே பெருமாள் கோயிலுக்குப் போகணும் தம்பி. போயிட்டு வந்திட்டு எழுப்புறேன், என்ன?" என்றாள் சேகரிடம்
"நீங்களும் மிஸ்டர் பெருமாளை அடிக்கடி பாத்துட்டு வர்றீங்கம்மா. ஆனா அவர்தான் அதிசயம் எதுவும் செய்து என்னை நடக்க வைக்க மாட்டேன்னு அடம் புடிக்கறார்" என்றான்
சேகர் வலிய வரவழைத்துக் கொண்ட நகைச்சுவையோடு
"எனக்கு அப்படி ஒரு அதிசயம் நடந்து நீ பழையபடி ஆயிருவேங்கற நம்பிக்கை எல்லாம் போயிருச்சி தம்பி. இப்ப நான் கும்பிடறதெல்லாம் எனக்கு முன்னால நீ போய் சேர்ந்திடணும்கறதுக்குத்தான்" மனதிலிருந்தது வார்த்தைகளாக வெளிவந்துவிட சட்டென அங்கே ஏதோ மரணித்துவிட்டது போன்றதொரு கனமான துக்கம் திடமாய்ப் பரவிற்று.
கோமதி தன் தவறை உணர்ந்தவள் போல் சேகரைப் பரிதாபமாய்ப் பார்க்க, சேகரின் முகம் இருண்டு போய்விட்டிருந்தது. முகத்தில் அடர்த்தியாய் அப்பிக் கொண்ட சோகம் வெளியே தெரியாவண்ணம் சேகர் தலையைத் திருப்பிக் கொண்டான்.
சில வினாடிகள் இருவரையும் மாறி மாறிப்பார்த்த வளர், பின் கோமதியை நேராய்ப் பார்த்து, "டீச்சர், சேகருக்கு இஸ்டமிருந்தா நான் அவரைக் கலியாணம் கட்டிக்கிடுதேன். அவர் செத்துப் போணுமுன்னு சாமி கும்புட வேண்டாம் டீச்சர்" என்றாள் தயக்கத்தின் சாயல் துளியும் ஒட்டாமல்
இதைச் சற்றும் எதிர்பாராத கோமதியும் சேகரும் வார்த்தை வராமல் உறைந்து போக, அவளே
மீண்டும் தொடர்ந்தாள்:
"சேகரு மேல அனுதாபப்பட்டு இதக் கேக்கேன்னு நெனச்சிறாதீக... அவர் மேல ஆசப்பட்டுதேன் கேக்கேன். நீங்க குடுக்க எறநூத்தம்பது ரூவாக்காக இங்க வேலைக்கு வரலை டீச்சர். இந்தா இந்த மொகத்தையும் அந்தக் கண்ணுல தெரியற வெளிச்சத்தையும் பாக்கதுக்குத்தேன்.. என்ன வேல கெடந்தாலும் போட்டுப்புட்டு இங்கிட்டு ஓடியாறேன்..."
சேகருக்குக் கூச்சமாய் இருந்தது. 'என்ன சொல்ல வருகிறாள் இவள்? வளர் என்னைக் காதலிக்கிறாளா என்ன?' அடிவயிற்றில் ஏதோ பறப்பதாய் ஒரு மெல்லிய உணர்வு. அன்பு சுகம்தான் - அது எவரிடமிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும்.
சற்று பரிச்சயமான இந்த உணர்வு, நிச்சயம் செய்திருந்த ரோஷினியின் முகத்தை நினைவில் கொண்டு வந்தது. யதார்த்தம் உறைக்கவும் சேகர், "வளரு, இதென்ன பொம்மைக் கல்யாணமா?
என்ன பேசற நீ?" என்றான் சற்று அதட்டலான குரலில்
"நீ என்னத்துக்கு இப்படிப் பேசுதன்னு தெரியும் சேகரு. நெதமும் மாடுகணக்கா வேல பாத்திட்டு ராத்திரி படுக்கப் போம்போது என்னத்துக்கு இந்த வாழ்க்கைனு வெசனமா கெடக்கு. நமக்குன்னு அழுகவும் சிரிக்கவும் யாராது இருந்தா உசுரோட இருக்கதுக்கு ஒரு அர்த்தம் கெடைக்குமில்ல? அப்பிடி ஒரு சீவனா உன்னால இருக்க முடியுமில்ல சேகரு? பாசாங்கில்லாம நானு ஒரு நாலு வார்த்தை உங்கிட்ட பேசமுடியுமில்ல? எனக்கு அதாம் வேணும்"
கோமதியின் புலம்பல்களில் சேகரின் தன்னம்பிக்கை வெகுவாய்க் கரைந்து போயிருந்தது.
அவனால் மற்றொருவருக்கு உதவியாக இருக்கமுடியும் என்ற எண்ணம் அவனுக்கு சாத்தியமாய்த் தோன்றவில்லை. அழுத்தமாய்க் கண்மூடித் திறந்தான்.
"அம்மாவுக்கே என்னைப் பாத்துக்கறதுக்குக் கஷ்டமாயிருக்கு. வேற யாருக்கும் பாரமாயிருக்க நான் விரும்பல, வளரு" என்றான் உடைந்த குரலில்.
"நீ எனக்கு பாரமில்ல சேகரு, பிடிப்பு. புரிஞ்சிக்கோ." என்றவள் சற்று இடைவெளிவிட்டு உணர்ச்சி மேலிட, "சேகரு, உன் மூளை இன்னும் நல்லாத்தான இருக்கு? அதை வச்சி என்ன செய்யலாம்னு ரோசிப்போம். இப்பத்தேன் கை லேசு லேசா வருதில்ல... புள்ளைகளுக்குக் கம்ப்யூட்டர் சொல்லித்தா. புத்தகம் கூட எழுதலாமாமே... டவுண்ல ஒரு காலேஜு டீச்சரக்
கேட்டனே..."
அவள் குரலிலிருந்த நம்பிக்கை மனதுக்கு இதமாய் இருந்தாலும் என்ன சொல்வதென்று தெரியாமல் தாயைப் பார்த்தான் சேகர்.
அவ்வளவு நேரம் அந்த உரையாடலை இறுக்கமாய்க் கேட்டுக் கொண்டிருந்த கோமதியை அவன் பார்வை உசுப்பிவிட்டது. "வெளில போடி நாயே" என்றாள் வளர்மதியைப் பார்த்து.
வளர் அசையாமல் சேகரைப் பார்க்க, "அவன என்னடி பாக்கற? என்ன திமிரு இருந்தா என் புள்ளைகிட்ட இப்படிப் பேசுவே நாயே! உன் சாதி என்ன, தரம் என்ன, தகுதி என்ன?
வெக்கமாயில்ல இப்படிப் பேச?" என்று ஆங்காரமாய்க் கேட்க, சேகர் செய்வதறியாமல் மன்னிப்புக் கோருகிற தோரணையில் வளரைப் பார்த்தான்
"இதில வெக்கப்பட என்னருக்கு டீச்சர்?" என்றாள் வளர் அசராமல் அவளின் வழக்கமான கம்பீரத்தோடு.
"உன் முகத்தைக் கண்ணாடியில பாத்திருக்கியாடி, நாயே? பாரு... நல்லா பாரு..." என்று
அவளைக் கண்ணாடி முன் தள்ளி நிறுத்தினாள் கோமதி
"இது நெதம் பாக்குத மூஞ்சிதான, புதுசா பாக்கதுக்கு என்னருக்கு? நீங்க சொன்னீங்கன்னு பாத்தாச்சு... இப்பவும் சேகரைக் கலியாணம் கட்டிக்க ஆசைப்படுதேன் டீச்சர். " என்றாள் சற்றும் பிடிதளராமல், கொஞ்சமும் கலைந்துவிடாமல் சேகர் மலைப்பாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சனியனே... அப்படிச் சொல்றத நிறுத்துடி முதல்ல... என் பையனப் பாருடி... எப்படி ராஜா கணக்கா இருக்கான்... உன் மூஞ்சியையும் பாரு... தேங்காத் துருவி மாதிரி பல்லு. அய்யனார் சாமி மாதிரி கண்ணு... பனை மரத்தில தண்ணி ஊத்தின மாதிரி நிறம்... அவன் பக்கத்தில நிக்கவாவது உனக்குத் தகுதி இருக்காடி?" கோமதி ஆத்திரத்தில் நிலை மறந்தாள் .
வளர் கோமதியின் கேள்விகளை முற்றிலுமாய்ப் புறக்கணித்துவிட்டு சேகரைப் பார்த்து,
"ரோசிச்சுப் பாரு, சேகரு. நம்ம ரெண்டு பேரு வாழ்க்கையும் காஞ்சுதேன் கெடக்கு. ரெண்டு பேரும் சேந்தமின்னா நம்மள மாதிரி கஸ்டப்படுத இன்னொரு சீவன எடுத்து வளக்கலாமில்ல. நீ புத்தியக் குடு; நான் உழைக்கச் சொல்லித் தாறேன். ஊருக்கு உதாரணமா ஒரு புள்ளைய வளப்போம்..." முகம் விகசிக்க, கண்கள் பளபளக்க, குரலில் உறுதி தொனிக்க அவள் சொன்ன
விதம் அவனுக்குள் புதிதாய்க் கனவு விதைகளைத் தூவியது.
சேகர் முதல் முறையாய் வளர்மதியை உன்னிப்பாய் கவனித்தான். கோமதி பட்டியலிட்ட குறைகள் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. மாறாக, அவனுக்கு விடியலைக் கொணரும் விடிவெள்ளியாய், வாழ்க்கையை மீட்டுத் தரும் மஹா சக்தியாய்த் தெரிந்தாள் வளர்மதி .
"கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு, வளரு" என்றான் சேகர் மெல்லிய புன்னகையோடும் அவள் புதிதாய் விதைத்த கனவுகளோடும்
3 Comments:
இதை நிலா அவர்களின் பதிவில் படிக்கவில்லை.
மனித உணர்வுகளை வரிகளில் காட்டியிருப்பதும், தன்னம்பிக்கை எனும் கருத்தை கொடுத்த விதமும் பிடித்திருக்கிறது.
பொற்காசு என்ன பொற்கிழியே கொடுக்கலாம்!
பிரபு ராஜா,
தங்கள் கருத்துக்கு நன்றி.
மஹாசக்தியின் கதை அமைப்பில் சற்று மாறுதல் தேவை என நினைப்பதால் நம்பிக்கை அமைப்பின் அனுமதியுடன் மாற்றி எழுத இருக்கிறேன் (போட்டிக்காக கடைசி நிமிடத்தில் எழுதியது). மாற்றி எழுதிய பின்னரே எனது வலைப்பதிவில் இட வேண்டும்
நிலா. இந்தக் கதை என் துணைவியாருக்கு ரொம்பப் பிடிச்சது. அவங்க படிச்சுட்டு என்னையும் படிக்கச் சொன்னாங்க. எதுக்கு இதை மாத்தி எழுதணும்? இப்பவே நல்லாத் தானே இருக்கு?
Post a Comment
<< Home