நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Wednesday, June 21, 2006

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1

எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.,பி.எட்.,டி.ஏ.,

"பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு"

நம் பாரதநாடு பழம்பெரும் நாடு; ஆன்மீக வாழ்வை உலகிற்கு நல்கிய நாடு; உலக நாடுகளுக்கெல்லாம் திலகமாகத் திகழ, எதிர்கால இந்தியா சிறந்து விளங்கிட , நம் நினைவில் கொள்ளவேண்டிய சில கருத்துக்களை இங்கே காண்போம்.

கல்வித் திட்டம்:
ஒரு நாட்டின் பண்பை அறிவதற்கு, அந்நாடு முழுவதையும் ஒருவர் சுற்றிப்பார்க்க வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் கல்விக் கூடங்களைச் சென்று பார்த்தாலே போதுமானது என்பர். அந்த அளவிற்கு ஒரு நாட்டின் தன்மையை அறிய கல்வி ஓர் உரைகல்லாக அமைகிறது எனலாம்.

ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று அறிவியல் தொழில்நுட்பக் கல்வி முதன்மை பெற்றுத் திகழ்வது சிறப்புடைத்து. அதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றமும் உலகையே வியக்க வைக்கிறது என்று கூறினால் மிகையாகாது. தொழில் நுட்பத்தில் சிறப்படைய உதவும் நம் கல்வித் திட்டம் மனத்திட்பத்திற்கு போதிய வாய்ப்பளிக்க வில்லை என்பது வருந்தத் தக்கது. "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் "பயிற்றுப் பல கல்வி தந்து" இந்த பாரை உயர்த்திட உதவும் கல்வித்திட்டம் அமைய வேண்டும்.

கல்வியின் பயன்:
சுவர் இன்றி சித்திரம் இல்லை. மரமின்றி மலர்களும் கனிகளும் இல்லை. கல்வியறிவு இல்லையேல் எதுவும் இல்லை என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

என்ற தெய்வப் புலவரின் கருத்தின்படி ஆன்மீகப் பயிற்சி இல்லாத கல்வி சிறந்த கல்வி ஆகாது. கல்வியானது மனிதனை பண்பட்டவனாக மாற்ற வேண்டும். பண்பற்ற கல்வி பயனற்ற கல்வியாகும். எத்தகைய சிறந்த அறிவைப் பெற்று இருப்பினும் மக்கட் பண்பு இல்லையெனில் அவர் பெற்ற அறிவால் யாதொரு பயனுமில்லை. அவர் மரத்திற்கு ஒப்பாவர் என்பது வள்ளுவர் கருத்து

"அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்."

அரசின் செயல்பாடு:

கேடில்லாத விழுமிய கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வண்ணம் அரசு திட்டங்களைத் தீட்டிச் செயலாக்கிட வேண்டும். சுவாசிக்கும் காற்றுக்கு , எப்படி எல்லார்க்கும் உரிமை உண்டோ , அங்ஙனம் தாங்கள் விரும்பிய வண்ணம் படிப்பதற்கு ஏற்ற வாய்ப்பைத் தருவது அரசின் கடமையாகும். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகின்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் உயர்ந்த மேற்படிப்பு படிக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவரின் பாடலை இங்கு நினைத்தல் சாலச் சிறந்தது.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
ஒளிருவாள் அருஞ்சமர் நீக்கிக் களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே."

மேற்கண்ட பாடல்வரிகளில் மூன்றாவது வரி, அரசு செய்ய வேண்டியச் செயலை வலியுறுத்துகிறது. வேல்வடித்துக் கொடுப்பது என்பது மாணவர்களுக்கு தகுந்த படிப்பையும், வேலை வாய்ப்பையும் கொடுத்திட வேண்டும் என்ற கருத்தை தெளிவாக்குகிறது.

மாணாக்கரின் நிலை:
எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே எண்ணுபவன் பொறுப்பற்ற மனிதனாவான். இப்படித்தான் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோனாவான் என்பதற்கு ஏற்ப இன்றைய மாணாக்கர்கள் உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பே உயர்வுக்கு வழி. "பெருக்கத்து வேண்டும் பணிதல்!" என்பது போல வாழ்வில் உயர உயர பண்புடையவனாக திகழ்வான்.

"அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உனைச் சங்கமம் ஆக்கு
பிரிவிலை எங்கும் பேதமில்லை"

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை இன்றைய மாணாக்கர்கள் பொன் போல் போற்ற வேண்டும், செயலாற்ற வேண்டும்:.

ஒளிபடைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவுபெற்ற மதி, சிறுமை கொண்டு பொங்கும் நெறி, எளிமை கண்டு இரங்கும் மனம், ஏறுபோல் நடை ஆகியன பெற்று உலகில் பாரதத்தை தலை சிறந்த நாடாக, வளர்ந்த நல்லரசாக மாற்றிட வேண்டும் என்பதை இன்றைய மாணாக்கர்கள் தங்களின் வாழ்க்கை இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும்.

பயிற்று மொழி:
மொழி என்பது உள்ளக்கருத்துக்களை வெளியிட உதவும் அற்புதக் கருவியாகும். தாய்மொழி வாயிலாகவே கருத்துகள் உருப்பெற்று செயலாக்கம் பெறுகின்றன. வளர்ந்த மேலை நாடுகள் எல்லாம் தங்கள் தாய்மொழிவாயிலாகவே கல்வி பயின்று, சிறந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுத் தலை சிறந்து விளங்குகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும் நிலமை தலைகீழாக இருக்கிறது. மேல்நிலைக் கல்வி(+2) வரை எல்லாப்பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.அதோடு மட்டுமல்லாது கல்லூரிக் கல்வியையும் தாய்மொழியில் பயிற்றுவிப்பதற்கு அறிஞர் பெருமக்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இப்படிக் கூறுவதால் ஆங்கிலம் வேண்டாம் என்பதில்லை. அதை நாம் உலகத் தொடர்பு மொழியாகக் கற்றுத் தெளிய வேண்டும்.

"அன்ன நடை கற்கப் போய் தன்நடையும் இழந்தாற்போல்" என்பது போல இன்றைய மாணாக்கர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் இருக்கின்றனர். இந்நிலை மாற அரசும், பெறோர்களும் தாய்மொழிக் கல்விக்கு போதிய ஆக்கமும் ஊக்கமும் அளித்திடல் வேண்டும்.

ஆசிரியர்கள் நிலை:
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்." இறைவன் நிலைக்கு உயர்ந்து நிற்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் - குற்றமற்றவர் என்று பொருள். நல்ல மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அதாவது படித்த கல்வி மட்டும் போதும் என்று கருதாது மறிவரும் நிலைக்கேற்ப மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அவர்தான் நல் ஆசிரியர். எதிர்கால இந்தியாவை நிர்மானிக்கும் சிற்பியாக இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆசிரியர்களும் எண்ணிப் பார்த்து செயலாற்றிட வேண்டும். பாடற்கருத்துக்களை புதிய கோணத்தில் மாணவர்கள் சிந்திக்கும் வண்ணம் கற்பிக்க வேண்டும். சுருங்கக்கூறின் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு சிற்ந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும்.

நிறைவுரை

என்னரும் பாரதத்தின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் , பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி பெற்று , இன்னுபுற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? அந்நாளே வாழ்வின் பொன்னாள் என்று கூறி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்! வெல்க பாரதம்!

நம்பிக்கையோடு வாழ்வோம்!

0 Comments:

Post a Comment

<< Home