நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, June 22, 2006

நம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1

நம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்

அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.

நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

வாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.


வங்கியில் பணம் சேமிக்கின்றோம், அந்த பணம் பதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் பயமின்றி இருக்க முடியும். நம்பிக்கை இல்லாவிட்டால் பணம் பற்றிய கவலை தான் மனம் முழுவதும் இருக்கும்.


கணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.


தொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.

ஒரு தத்துவம் நினைவுக்கு வருகிறது

சந்தேகம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது!
நம்பிக்கை இருக்கும் இடத்தில் நன்மைகள் இருக்கும்!

நம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்

1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை

2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை

ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.

நம்பிக்கையின் வலிமையை நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் நான் கற்ற சில சம்பவங்கள்.

ஒரு நாள் விட்டிற்கு பசியுடம் வந்தேன் விட்டில் எல்லோரும் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தேன் தோசை மாவும், சட்டினியும் இருந்தது. சரி தோசை சுடலாம் என்று முதல் தோசை ஊற்றினேன். அந்த தோசைக் தோசைக்கல்லின் மீது எப்படித்தான் காதல் வந்தது, கல்லை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக சுரண்டி எடுத்த பிறகு அடுத்த தோசை ஊற்றினேன். அதை தோசை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதை அதிசிய பொருட்களின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும், அப்படி இருந்தது. உணவகத்தில் போய் சாப்பிடலாமா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. ஆனால் கையில் பணம் இல்லை. அடுத்த தோசை ஊற்றினேன், அது அறையும் குறையுமாக இருந்தது. அடுத்த தோசை நன்றாக இருந்தன. வழக்கமாக 5 தோசை சாப்பிடும் நான் அன்று 7 தோசை சாப்பிட்டேன். ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் வந்தது. வயிறுடன் சேர்ந்து மனதும் நிறைந்தது. இதே போல் தான் நமது வாழ்க்கையும் நமது வேலைகள் ஆரம்பத்தில் கஷ்டமானதாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட்டால் அவைகள் சாதரணமானதாக மாறிவிடும்.

இன்னொரு சம்பவம் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விட்டார்கள். ஒருவனுக்கு சாதாரண காயம் இன்னொருவனுக்கு சற்று காயம் அதிகம். இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டனர். சற்று காயம் பட்டவன் ஒருவாரத்தில் இயல்பாக எங்களுடன் விளையாட வந்து விட்டான். சாதரணகாயம் பட்டவன் இரு வாரத்திற்கு பிறகுதான் இயல்பாக விளையாடுவதற்கு வந்தான். காரணம் விசாரித்ததில் ஒரு உண்மை புரிந்தது. அதிக காயம் பட்டவன் தன்னுடைய காயம் சாதரணமானது என்றும் எளிதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். சாதாரண காயம் பட்டவனோ தன்னுடைய காயம் பெரியது என்றும் அது சரியாவதற்கு இன்னும் நாளாகும் என்றும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறான். இதேபோலதான் நம் வாழ்க்கையும் பெரிய பிரச்சனைகளை இது சாதரணமானது எளிதில் சரி செய்யலாம் என்று நம்பினால் சரி செய்து விடலாம். சிறிய பிரச்ச்னையை இதை நம்மால் சரி செய்ய முடியாது என்று பயந்தால் அது கடினம்தான்.



நம்பிக்கையை பற்றி சொல்லும் போது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் "எதை நம்புவது? யாரை நம்புவது? எப்போது நம்புவது? எப்படி நம்புவது?" என்று நம்பத்தெரிய வேண்டும். நம்முடைய நம்பிக்கைகள் கண்முடித்தன நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆரோக்கியமான நம்பிக்கையாகவும் அறிவுபூர்வமான நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும்.

என் நண்பன் வீட்டின் அருகே ஒரு பையன் இருந்தான். ஒரு பெண்னை காதலித்தான். அந்த பெண் தன்னுடைய அத்தை பையனை காதலிப்பதால் மறுத்து விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் அந்த பெண்னை தொந்தரவு செய்தான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு எப்படியும் கடைசியில் அவள் என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக சொன்னான்! இதற்கு பெயர் நம்பிக்கையா? முட்டாள்தன்ம். இதே போல் தான் சிலர் தவறாக ஒன்றை சரி என்று நினைத்து, அதன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.

நம்பிக்கையை பற்றி திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து இது

" தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்"

ஒன்றைபற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் அதை நம்புவதும், நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒன்றை சந்தேகப்படுதலும் தீராத துன்பத்தை தரும் என்பது இதன் கருத்து.

எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.

எனவே நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்த பிறகே நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.

நமக்கு நிறைய நன்மைகளை தரும் நம்பிக்கையில் முக்கியமான ஒன்று கடவுள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் தான் பலரது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருக்கிறது. நிறைய மதங்களும், நிறைய கடவுள்களும் இருக்கின்றன. பாதைகள் வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றை நோக்கிதான். எனவே எந்த கடவுளை வண்ங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவிற்கு உண்மையாகவும் நம்பிக்கையுடனும் வண்ங்குகிறோம் என்பதை பொறுத்தும் தான் கடவுள் அருள் புரிகிறார்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! பிறகு கடவுளிடத்தில் நம்பிக்கை! என்று சொல்கிறார் விவேகானந்தர். உழைப்பதற்கு முன்னால் தன்னம்பிக்கை வேண்டும் உழைப்புக்கு பின் கடவுள் நம்பிக்கை வேண்டும்.

உலகில் எல்லா மதங்களும் வழியுறுத்தும் கருத்து "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்"

பிரச்சனை யாருக்குதான் இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது. ஒரு சிறிய கதையின் மூலம் இதை எளிதாக புரியவைக்கலாம்.

ஒரு சிறிய நாடு ஆனால் மிகவும் சொழிப்பான வளமிகுந்த நாடு. அருகே உள்ள பெரிய நாட்டின் மன்னனுக்கு அந்த வளமான சிறிய நாட்டை பிடிக்க வேண்டும் என்று போருக்கு தயாரானான். சிறிய நாட்டின் மன்னனோ, மிகவும் கவலை அடைந்தான். நமது படை சிறியது. போர் வந்தால் தோல்வி நிச்சயம்.எனவே அடிபணிந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் மன்னின் மகள் இளவரசியோ அதை மறுத்தாள். முடிந்த வரை போராடுவோம், நேர்மையும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது. போருக்கு தயாராகுங்கள் நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி நம்பிக்கையுடன் யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு யோசனை பிறந்தது. அந்த காலாம் முதலே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு பெண் ராக்கி என்று சொல்லப்படும் பலவண்ண கயிற்றை ஒரு ஆணிடம் கொடுத்தால் அவனை தன்னுடைய அன்பிற்குரிய சகோதரனாக ஏற்றுகொண்டு விட்டாள் என்று அர்த்தம். உடனடியாக அருகில் இருக்கும் மற்ற நாட்டு மன்னர்களுக்கெல்லாம் ராக்கி சகோதர கயிறை அனுப்பி, அதனுடன் ஆபத்தில் இருக்கிறோம் உதவுமாறு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பினாள். சகோதரிக்கு ஒரு ஆபத்தென்றால் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா? எல்லா மன்னர்களும் உதவிக்கு வந்தார்கள். பெரிய நாட்டின் மன்னன் தோற்று ஓடிப்போனான். இக்கதையில் நமக்கு புரிவது பிரச்சனைகளை கண்டு பயப்படுவதை விட அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை நம் மனதிற்குள் ஏற்பட்டு விட்டால் அதை தீர்ப்பதற்கு வழியும் தானாகவே கிடைத்து விடுகிறது.

ஒரு நாட்டின் மன்னன் பக்கத்து நாட்டு மன்னனை மட்டும் நண்பனாக்கி கொண்டால் போதும். போர் என்றால் மன்னனுடன் சேர்ந்து அவனது வீரர்படை, யானைபடை, குதிரபடை, அனைத்தும் உதவிக்கு வந்துவிடும். அது போல நாமும் நல்லநம்பிக்கையை மட்டும் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அதனுடன் சேர்ந்து உழைப்பும் ஆர்வம், திட்டம், சந்தோஷம், மனப்பக்குவம் எல்லாமே நமக்கு வந்துவிடும்.

நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:

வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.

நம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.

நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.

நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல் அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி பரக்கிறது.

ஊழியர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால் தான் திருட்டு தனமும் சுயநலமும் அதிகறிக்கிறது.

படிக்கவும் வேலைக்கும் செல்லும் தங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.

நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால் கலச்சாரம் சீரழிகிறது.

இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி அமைத்து விடுகிறது.

உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு. இறுதியாக நம்பிக்கையை பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.

படிப்பில்
நம்பிக்கையை இழந்தால்
பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

காதலில்
நம்பிக்கையை இழந்தால்

கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
நட்பில்
நம்பிக்கை இழந்தால்
பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்
கடமையில்

நம்பிக்கை இழந்தால்
கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்
கட்டுப்பாடுகளில்
நம்பிக்கை இழந்தால்
கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்
நிகழ்காலத்தில்
நம்பிக்கை இழந்தால்
எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்
எதிலும்
நம்பிக்கையோடு இருந்தால்
வாழ்வில் எல்லாமே சிறக்கும்.


உன்னுடைய பாதை நேர்மையானதாகவும்! உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம் வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு நம்பிக்கையுடன் செயல்படு! வெற்றி நிச்சயம்! என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக

0 Comments:

Post a Comment

<< Home