நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2
வாழ்வியல் வேதம்! - இராகவன் (எ) சரவணன், பெங்களூர்
================
நம்பு தம்பி நம்பு!
முயன்றால் இயலாதது எதுவுமில்லை!!
வாழ்வியல் விதிகள் சில சொல்ல
விழைகிறேன்!
(1) ஆசைப்படு
------------------------
உலகில் உருவாக்கப்பட்ட
அத்துணை விஷயங்களுக்கும்
'ஆசைப்படுதல்' ஒன்று தான்
மூலிகை!!!
ஆசை மட்டுமே பட்டுக்
கொண்டிருந்தால் பூசை நடக்காது!
சோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி
முயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி
நம்பிக்கை என்னும் விளக்கு வைத்து
உழைப்பு என்னும் பூசை நடத்து!!
பூசையின் புனிதம் காக்கப்பட
அவ்வப்போது ஆசை என்னும்
எண்ணெய் ஊற்று!!
அது தான் உன்னை அடுத்தடுத்த
குறிக்கோள்களை அடைய வைக்கும்
ஆனந்த ஊற்று!!
வெற்றி என்னும் பிரசாதம் உன் கையில்!!
(2) கோபப்படு!!
---------------------
உன் சுயத்தை எது
எள்ளி நகையாடுகின்றதோ,
சுட்டெரிக்கிறதோ,
அங்கே நீ அக்கினியாய் மாறு.
நிதானத்தோடு கூடிய
கோபத்தீ உமிழ்! ஆனாலும்
உன் சுயம் உன்னால் அங்கே
காக்கப்பட வேண்டும் மறவாதே!
தன்மானம் இல்லாத மனிதன்
உயிரில்லா உடல்!
நீரில்லா மீன்!
காலில்லாச் செருப்பு!!!
வயிறில்லா உணவு!!
விக்கிரகமில்லாக் கர்ப்பக்கிரகம்!
பிரயோசனமில்லை எதற்கும்!!
(3) பொறாமை கொள்!!
-------------------------------
உடனொத்தவர்களின் திறமையை
மட்டும் உன்னிப்பாய்ப் பார்த்து
ஆரோக்கியமான முறையில்
பொறாமை கொள்.....
பொறாமையே உன்னை
அயர விடாது உழைக்க வைக்கும்
புனிதமான சஞ்சீவி!!
விளக்கிற்கும் திரிக்கும் சேதாரம்
விளைவிக்காத தூண்டுகுச்சியைப்
போலப் பொறாமையைக் கையாள்...
விளக்கு - நீ!
திரி - உன் திறமை!
ஒளி - உன் வளர்ச்சி!
பொறாமை - தூண்டுகோல்!!
பொறாமை ஒரு ஆகாரம்!
ஒவ்வொரு வேளையிலும் வேண்டும்!
ஒவ்வொரு வேலையிலும் வேண்டும்!
(4) அவமரியாதை செய் !
-----------------------------------
கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும்
வருகின்ற பின்னூட்டங்களைப்
புன்னகைப் பூக்களைப்
பரிசளித்து வாங்கு!!
ஏனெனில் உன்னையே
ஒழுங்காகச் செதுக்கிட
உதவும் கண்ணாடிகள் அவை!!
கண்ணாடிகள், பார்க்கும்
கண்களையே் கிழிக்குங்கால்
அவற்றை அகமகிழ்ந்து
அவமரியாதை செய்!!
தேவையில்லாமல் முடிவளர்த்துத்
தேம்பித் தேம்பி மொட்டை அடிப்பானேன்?
தலையே போன பிறகு
தலைப்பாகை எதற்கு?
(5) தட்டிப் பறி!!!
---------------------------
உரிமைகளை எக்கணமும்
நிரந்தரமாக யாரிடமும்
விட்டுவிடாதே!
விட்டுத் தராதே!!
அவையொன்றும் உன்னால்
மேற்பார்வையிட முடியாத அளவுக்குக்
கடினமானவையும் அல்ல!!
காரியதரிசிகள் கவனித்துக்
கொள்ளக் கூடிய செயலும் அல்ல!!!
தட்டிப் பறி!! எட்டிப் பிடி!!
முயற்சிகள் உடனே பயனளிக்காவிடில்
சற்றே விட்டுப் பிடி!!
சிங்கத்திற்குக் கர்ஜனை!
சூரியனுக்கு வெப்பம்!
குழந்தைக்கு மழலை!
பெண்மைக்குத் தாலி!!!
விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போகும்!
தன் நிலை கெட்டுப் போகும்!!
(6) எதிரிகளை வளர்த்துக் கொள்!!
-----------------------------------------------
உன்னைப் பற்றித் தவறுகள்
தெரிவிக்கப்பட்டால் தயங்காது கவனி!
உயர்வுக்கு வழிவகுப்பின்
தயைகூர்ந்து உட்புகுத்து!
அனைவருமே நண்பர்களாகிப் போனால்
என்றுமே ஒருவழிப் பாதை உன்னுடையது!
கீழே விழச்செய்யும் விசையின்
தரத்தைப் பொறுத்தே பந்து
மேலே எழும்பும் தோழா!
காயங்கள் வந்தால் மருந்தின் அருமை!
வெயில் வந்தால் நிழலின் மகிமை!
அரவு தீண்டினால் விஷமுறிவின் அருமை!
எதிரிகள் இருந்தால் வளர்ச்சியின் பெருமை!
அடித்துத் துவைக்காமல்
அழுக்கு அகலுமா?
கடித்துத் தின்னாமல்
கரும்பு இனிக்குமா?
என்றும் உன்னை எரிகின்ற
தீயாக வைக்க எதிரிகள் அவசியம்....!
(7) இழந்து பார்!!
--------------------------
வெற்றி வேண்டுமா?
வேட்கை இழந்திடு!!
நட்பு வேண்டுமா?
பிடிவாதம் இழந்திடு!!
தூக்கம் வேண்டுமா?
நினைவுச் சங்கிலி இழந்திடு!!
புதுப் பசி வேண்டுமா?
நேற்றைய உணவின் எச்சத்தை இழ!
ஆரோக்கியம் வேண்டுமா?
கவலை இழந்திடு!!!
வெற்றுச் சுதந்திரம் வேண்டுமா?
ஒழுக்கத்தை இழந்திடு!!
வெற்றிச் சுதந்திரம் வேண்டுமா?
வறட்டுக் கொள்கைகளை இழந்திடு!!!
சோர்வு வேண்டுமா?
சோம்பல் இழந்திடு!
தீர்வு வேண்டுமா?
விதண்டாவாதம் இழந்திடு!!
(8) வன்மம் கொள்!!
---------------------------
கண்ணெதிரே அநியாயம்!
கண்டிப்பாய்ப் பொறுமை இழ!!
புலன்களுக்கு மட்டுமல்ல உணர்ச்சி!
பிறர் நலன்களுக்கும் சேர்த்துத் தான்!
எங்கே முதுமை மிதிக்கப்படுகிறதோ
அங்கே உன் பொறுமையைப்
பொசுக்கிப் பொங்கி எழு!!
எங்கே தாய்மை தரந்தாழ்த்தப்படுகிறதோ,
எங்கோ பெண்மையின் புனிதம்
போற்றப்படவில்லையோ,
அங்கே நீ அகிம்சையின்
ஜென்ம விரோதியாகு!
தன்மானம் எங்கே தலைசாய்க்கப்படுகிறதோ
உன் தலைக்கனத்திற்குச் தயங்காது சூட்டு
ஒரு தங்கக்கிரீடம்!
இடித்தால் தான் இடிக்கு மதிப்பு!
கடித்தால் தான் தேளுக்கு மதிப்பு!
சுட்டால் தான் சூரியனுக்குச் சிறப்பு!
சினங்கொண்டால் தான் மனிதனுக்கு மதிப்பு!
உண்மைக்குப் புறம்பான
விஷயங்கள் உன்னைச் சுற்றி நடக்கையில்
உனக்கான ஒற்றை வரி வேதம்!!
"நீ கொண்ட மிகப்பெரிய பொறுமை
உன் வாழ்நாளில் முதல் பத்து மாதம்!"
காற்றைக் கிழித்துத் தான் பேசுகிறாய்!
தசைகளை இறுக்கித் தான் உண்ணுகிறாய்!
(9) காதல் செய்!
--------------------------
உண்மையாகவும் நேர்த்தியாகவும்
இருந்தால் மட்டுமே இனிக்கும்!
உன்னைப் பெற்றெடுத்த தெய்வங்களைப்
பேணிப் பாதுகாக்கும் பண்பின் மீது
பாரபட்சமில்லாது காதல் கொள்!!
உன்னை நேசிக்கும் ஒவ்வொரு
உயிருக்கும் பரிசுத்தமான பாசத்தைப்
பரிசளிக்கும் பாங்கின் மீது
பாகுபாடில்லது காதல் கொள்!!
தக்க தருணத்தில் செய்த
உதவிகளுக்கு உயிரின் கடைசிச் சொட்டு
ஊறும் வரை உண்மையான நன்றி காட்டும்
அந்த உயரிய பண்பின் மீது காதல் கொள்!
உன்னதமான நெறியில் நல்வழிப்படுத்தும்
ஆன்மிகத்தின் மீது ஆறாத காதல் கொள்!!
முடிந்தளவு சிறு சிறு உதவிகளைச் செய்ய
உன்னை ஒப்புக்கொடுக்க ஒத்துழைக்கும்
அந்த தன்னலமற்ற தன்மையின் மீது
தளர்வில்லாக் காதல் கொள்!!!
கொண்ட நம்பிக்கைகளைக் காப்பாற்ற
சில சமயங்களில் இழப்புக்களை ஏற்றுக்
கொள்ளும் அந்தத் தியாகத்தின் மீது
திடமான காதல் கொள்!!
(10) பொய் பேசு!
------------------------
திட்டவட்டமான வாழ்க்கையை விட்டுத்
எட்டிப் போகச் செய்யும் எந்தவொரு
கொள்கையிடமும் நீ அதற்கு இணங்க
முடியாதென்று முழுமூச்சோடு பொய்பேசு!
இழந்ததற்கெல்லாம் வருந்த மட்டுமே
வைக்கும் எண்ணங்களுக்கு நான் உங்கள்
அழுகுரலுக்குக் காது கொடேன் என்று
கண்ணியமாய்ப் பொய் பேசு!!!
நடைமுறைப் படுத்த முடியாத
சிந்தனைகள், ஊருக்கு மட்டுமே போதிக்கும்
உபாசனைகள், முகத்திரை அணிவிக்கும்
பாராட்டுக்கள் இவை அனைத்திற்கும்
இனி நான் இறங்கி வர மாட்டேன் என்று
இன்முகத்தோடு் பொய் பேசு!!!
உன்னால் முடிந்த நன்மைகளைச்
செய்ய விடாமல் தடுக்கும் கயமைகளுக்கு
நீ சுயநலவாதி என்று சூசகமாய்ப்
பொய் சொல்!!
கடமையைச் செய்யவிடாது தட்டிக்கழிக்க
வைக்கும் சோம்பேறி இயல்புகளிடம்
நான் தலைசாய்க்க மாட்டேன் என்று
தயங்காது பொய் சொல்!!
நன்றி!
8 Comments:
Hearty congrads Ragavaan!!
Hi Raghavan...it was very good da...it gave good thoughts of life and success,perservence...Keep going
Regards
Sakthikumar
Dear Raghav,
It was nice to go through your poem and also you have distributed the most important things necessary for lif in an artistic, beautiful and colorful manner.
Hearty wishes for your happiness to continue all throught your life.
With Love & Care,
Ramya...
Vaalthukkal. Nalla Irukku Ragavan :-)
Really Good one.
Congrats Raghavan.
superb na ...
a good thing..
mellum valara valthukkal..
gkd
hi prema,
thanks for the kind wishes..
@sakthi,
//it gave good thoughts of life and success,perservence
thank you sakthi...
@v.ramya moorthy
//It was nice to go through your poem and also you have distributed the most important things necessary for lif in an artistic, beautiful and colorful manner.//
thank you ramya.. yeah you have well described...
@anonymous(1)
//Vaalthukkal. Nalla Irukku Ragavan :-) //
Thanks anonymous!
@anonymous(2)
//Really Good one.
Congrats Raghavan//
thanks for the wishes anonymous(2).
@gkd
deai, thanks da thambi..
Regds,
Raghavan alias Saravanan M.
Post a Comment
<< Home