நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Friday, April 21, 2006

நம்பிக்கை ஆண்டு விழா போட்டி - அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா கதை , கவிதை மற்றும் கட்டுரை போட்டி அறிவிப்பு மடல் இணையத்தின் இனிய நண்பர்களே! வணக்கம்!

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:

1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.

2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.

போட்டி விதி முறைகள்:

1. படைப்பாளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் போது படைப்பின் தரம் குறைகிறது. அதனால் இது தான் தலைப்பு என்று தருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தலைப்பை படைப்பாளிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் படைப்பைப் பிறர் படிக்கும் போது இப்படிக் கூட ஒரு பார்வை இருக்க முடியுமா என்று பிரமிக்க வைப்பதாக இருப்பது அவசியம்.

2. உங்கள் படைப்பு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ அல்லது இலக்கியங்களை நயம் படச் சொல்லும் ஆய்வாகவோ இருக்கலாம். மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட அல்லது தத்துவம் சார்ந்ததாய் இருத்தல் மிகச் சிறப்பு.

3. சாடலாக இருந்தாலும், தன் கருத்தை ஆணித்தரமாக கூறினாலும் அது நாகரீக எல்லையைத் தாண்டாதவாறு பார்த்துக் கொள்வது குழும நட்பிற்கு நல்லது.

4. கட்டுரையில், கவிதையில், கதையில் ஏதாவது முக்கிய விஷயங்களைக் கூறுகையில் ஆதாரம் இருந்தால், * புள்ளியிட்டு அதனை படைப்பின் முடிவில் தருதல் நலம்.

5. குறைந்த வார்த்தைக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் படைப்பு சிறந்ததாகக் கருதப்படும்.

6. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்

தேர்வுக் குழு : படைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள். உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.

பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்கள் கட்டுரையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தங்களது படைப்பைப் பற்றி உண்மையாகத் தெரிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை. கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.

ஆன்மிகம் சம்பந்தமாய் வரும் படைப்பிற்கு சிறப்பு பரிசாக பொற்காசு பரிசளிக்க இனிய ஆன்மீக நண்பர் ஆவல் கொண்டு உள்ளார்.

அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம். தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள். மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

முக்கியக் குறிப்பு : தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!

இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/

10 Comments:

At 11:54 PM, Blogger Ram.K said...

நல்ல முயற்சி.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

ராம்.கே

 
At 12:02 AM, Blogger Ram.K said...

இந்தப் பதிவு ஏன் நகைச்சுவை/நையாண்டி - ல் இருக்கு?

 
At 9:42 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க ராம்,

உங்க வாழ்த்துகள் எங்களை உற்சாகப்படுத்துகிறது.

உங்களிடமிருந்து அருமையான படைப்புகள் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இதைப் பற்றி சொல்லுங்கள்.

அப்புறம், நிலாச்சாரலில் குழந்தைகளுக்கான போட்டி நடக்குது, உங்கள் குழந்தைகளை அதில் பங்கேற்க சொல்லுங்கள்.

 
At 4:47 PM, Blogger Radha N said...

மிகவும் நல்ல குழுசேவை. தொடரட்டும் பணி. வாழ்த்துக்கள்.

 
At 12:45 AM, Blogger பரஞ்சோதி said...

வாங்க நாகு,

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்களும் கட்டாயம் உங்கள் படைப்பை அனுப்பி வையுங்க, உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

 
At 4:01 PM, Blogger ENNAR said...

நல்ல போட்டி தொடருங்கள் வாழ்த்துக்கள்

 
At 5:23 PM, Blogger யோசிப்பவர் said...

அன்புக்குரிய பரஞ்சோதி,
Sci-Fi வகை கதைகள் அனுப்பலாமா? எனக்கு அந்தமாதிரிதான் எழுத தெரியும்!?!?

 
At 10:47 AM, Blogger Karthikeyan said...

ஐய்யா ஜாலி...

ஆனா ஒரு சந்தேகம்...
யோசிப்பவர் கேட்பதுபோல அறிவியல் புனைக்கதைக்கு அனுமதி உண்டா?

அன்புடன்
கார்த்திகேயன்

 
At 10:49 AM, Blogger நம்பிக்கை said...

//ஆனா ஒரு சந்தேகம்...
யோசிப்பவர் கேட்பதுபோல அறிவியல் புனைக்கதைக்கு அனுமதி உண்டா?//

தாராளமாக அனுப்பலாம் அன்பரே!

 
At 10:50 AM, Blogger நம்பிக்கை said...

யாரோ நமக்கு ரொம்ப வேண்டியவங்கதான் நகைச்சுவையில் சேர்த்திட்டாங்க. ஹா ஹா ஹா ஹா

 

Post a Comment

<< Home