நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின் முன்னேற்றத்திற்கான தளம்.

Saturday, February 10, 2007

நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்

நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.


நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101

உன்னிலும் என்னிலும்


உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்

என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

(நண்பர்களே! உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).

நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி

நண்பர்களே!

போட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.

உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1. பாஸிடிவ்ராமா - positiverama@gmail.com

2. பரஞ்சோதி - paransothi@gmail.com

3. விழியன் - umanaths@gmail.com

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

நன்றி!

இவண்,

நம்பிக்கை கூகுள் குழுமம்.

http://groups.google.co.in/group/nambikkai

Monday, February 05, 2007

"நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா" கவிதைப் போட்டி அறிவிப்பு

இணையத்தின் இனிய நண்பர்களே!
வணக்கம்!
உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது.
நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.

கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..

என்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா? ஆ! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.

சின்ன விளக்கம் இங்கே..

காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.
ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர். உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.

நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.
பரிசுத்தொகை விபரம்
முதல்பரிசு ரூ 1500/-

இரண்டாம் ரூ 1000/-

மூன்றாம் பரிசு ரூ 500/-

ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.


போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:

1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.

2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.
3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.

4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)
5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!
6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.
7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.
உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும்.
பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.
தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
1.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
2.பரஞ்சோதி umanaths@gmail.com
மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!
உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!
இவண்,
நம்பிக்கை கூகுள் குழுமம்.
http://groups.google.co.in/group/nambikkai

Thursday, June 22, 2006

நம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1

நம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்

அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.

நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

வாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.


வங்கியில் பணம் சேமிக்கின்றோம், அந்த பணம் பதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் பயமின்றி இருக்க முடியும். நம்பிக்கை இல்லாவிட்டால் பணம் பற்றிய கவலை தான் மனம் முழுவதும் இருக்கும்.


கணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.


தொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.

ஒரு தத்துவம் நினைவுக்கு வருகிறது

சந்தேகம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது!
நம்பிக்கை இருக்கும் இடத்தில் நன்மைகள் இருக்கும்!

நம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்

1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை

2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை

ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.

நம்பிக்கையின் வலிமையை நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் நான் கற்ற சில சம்பவங்கள்.

ஒரு நாள் விட்டிற்கு பசியுடம் வந்தேன் விட்டில் எல்லோரும் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தேன் தோசை மாவும், சட்டினியும் இருந்தது. சரி தோசை சுடலாம் என்று முதல் தோசை ஊற்றினேன். அந்த தோசைக் தோசைக்கல்லின் மீது எப்படித்தான் காதல் வந்தது, கல்லை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக சுரண்டி எடுத்த பிறகு அடுத்த தோசை ஊற்றினேன். அதை தோசை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதை அதிசிய பொருட்களின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும், அப்படி இருந்தது. உணவகத்தில் போய் சாப்பிடலாமா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. ஆனால் கையில் பணம் இல்லை. அடுத்த தோசை ஊற்றினேன், அது அறையும் குறையுமாக இருந்தது. அடுத்த தோசை நன்றாக இருந்தன. வழக்கமாக 5 தோசை சாப்பிடும் நான் அன்று 7 தோசை சாப்பிட்டேன். ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் வந்தது. வயிறுடன் சேர்ந்து மனதும் நிறைந்தது. இதே போல் தான் நமது வாழ்க்கையும் நமது வேலைகள் ஆரம்பத்தில் கஷ்டமானதாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட்டால் அவைகள் சாதரணமானதாக மாறிவிடும்.

இன்னொரு சம்பவம் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விட்டார்கள். ஒருவனுக்கு சாதாரண காயம் இன்னொருவனுக்கு சற்று காயம் அதிகம். இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டனர். சற்று காயம் பட்டவன் ஒருவாரத்தில் இயல்பாக எங்களுடன் விளையாட வந்து விட்டான். சாதரணகாயம் பட்டவன் இரு வாரத்திற்கு பிறகுதான் இயல்பாக விளையாடுவதற்கு வந்தான். காரணம் விசாரித்ததில் ஒரு உண்மை புரிந்தது. அதிக காயம் பட்டவன் தன்னுடைய காயம் சாதரணமானது என்றும் எளிதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். சாதாரண காயம் பட்டவனோ தன்னுடைய காயம் பெரியது என்றும் அது சரியாவதற்கு இன்னும் நாளாகும் என்றும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறான். இதேபோலதான் நம் வாழ்க்கையும் பெரிய பிரச்சனைகளை இது சாதரணமானது எளிதில் சரி செய்யலாம் என்று நம்பினால் சரி செய்து விடலாம். சிறிய பிரச்ச்னையை இதை நம்மால் சரி செய்ய முடியாது என்று பயந்தால் அது கடினம்தான்.



நம்பிக்கையை பற்றி சொல்லும் போது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் "எதை நம்புவது? யாரை நம்புவது? எப்போது நம்புவது? எப்படி நம்புவது?" என்று நம்பத்தெரிய வேண்டும். நம்முடைய நம்பிக்கைகள் கண்முடித்தன நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆரோக்கியமான நம்பிக்கையாகவும் அறிவுபூர்வமான நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும்.

என் நண்பன் வீட்டின் அருகே ஒரு பையன் இருந்தான். ஒரு பெண்னை காதலித்தான். அந்த பெண் தன்னுடைய அத்தை பையனை காதலிப்பதால் மறுத்து விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் அந்த பெண்னை தொந்தரவு செய்தான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு எப்படியும் கடைசியில் அவள் என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக சொன்னான்! இதற்கு பெயர் நம்பிக்கையா? முட்டாள்தன்ம். இதே போல் தான் சிலர் தவறாக ஒன்றை சரி என்று நினைத்து, அதன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.

நம்பிக்கையை பற்றி திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து இது

" தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்"

ஒன்றைபற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் அதை நம்புவதும், நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒன்றை சந்தேகப்படுதலும் தீராத துன்பத்தை தரும் என்பது இதன் கருத்து.

எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.

எனவே நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்த பிறகே நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.

நமக்கு நிறைய நன்மைகளை தரும் நம்பிக்கையில் முக்கியமான ஒன்று கடவுள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் தான் பலரது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருக்கிறது. நிறைய மதங்களும், நிறைய கடவுள்களும் இருக்கின்றன. பாதைகள் வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றை நோக்கிதான். எனவே எந்த கடவுளை வண்ங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவிற்கு உண்மையாகவும் நம்பிக்கையுடனும் வண்ங்குகிறோம் என்பதை பொறுத்தும் தான் கடவுள் அருள் புரிகிறார்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! பிறகு கடவுளிடத்தில் நம்பிக்கை! என்று சொல்கிறார் விவேகானந்தர். உழைப்பதற்கு முன்னால் தன்னம்பிக்கை வேண்டும் உழைப்புக்கு பின் கடவுள் நம்பிக்கை வேண்டும்.

உலகில் எல்லா மதங்களும் வழியுறுத்தும் கருத்து "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்"

பிரச்சனை யாருக்குதான் இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது. ஒரு சிறிய கதையின் மூலம் இதை எளிதாக புரியவைக்கலாம்.

ஒரு சிறிய நாடு ஆனால் மிகவும் சொழிப்பான வளமிகுந்த நாடு. அருகே உள்ள பெரிய நாட்டின் மன்னனுக்கு அந்த வளமான சிறிய நாட்டை பிடிக்க வேண்டும் என்று போருக்கு தயாரானான். சிறிய நாட்டின் மன்னனோ, மிகவும் கவலை அடைந்தான். நமது படை சிறியது. போர் வந்தால் தோல்வி நிச்சயம்.எனவே அடிபணிந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் மன்னின் மகள் இளவரசியோ அதை மறுத்தாள். முடிந்த வரை போராடுவோம், நேர்மையும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது. போருக்கு தயாராகுங்கள் நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி நம்பிக்கையுடன் யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு யோசனை பிறந்தது. அந்த காலாம் முதலே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு பெண் ராக்கி என்று சொல்லப்படும் பலவண்ண கயிற்றை ஒரு ஆணிடம் கொடுத்தால் அவனை தன்னுடைய அன்பிற்குரிய சகோதரனாக ஏற்றுகொண்டு விட்டாள் என்று அர்த்தம். உடனடியாக அருகில் இருக்கும் மற்ற நாட்டு மன்னர்களுக்கெல்லாம் ராக்கி சகோதர கயிறை அனுப்பி, அதனுடன் ஆபத்தில் இருக்கிறோம் உதவுமாறு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பினாள். சகோதரிக்கு ஒரு ஆபத்தென்றால் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா? எல்லா மன்னர்களும் உதவிக்கு வந்தார்கள். பெரிய நாட்டின் மன்னன் தோற்று ஓடிப்போனான். இக்கதையில் நமக்கு புரிவது பிரச்சனைகளை கண்டு பயப்படுவதை விட அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை நம் மனதிற்குள் ஏற்பட்டு விட்டால் அதை தீர்ப்பதற்கு வழியும் தானாகவே கிடைத்து விடுகிறது.

ஒரு நாட்டின் மன்னன் பக்கத்து நாட்டு மன்னனை மட்டும் நண்பனாக்கி கொண்டால் போதும். போர் என்றால் மன்னனுடன் சேர்ந்து அவனது வீரர்படை, யானைபடை, குதிரபடை, அனைத்தும் உதவிக்கு வந்துவிடும். அது போல நாமும் நல்லநம்பிக்கையை மட்டும் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அதனுடன் சேர்ந்து உழைப்பும் ஆர்வம், திட்டம், சந்தோஷம், மனப்பக்குவம் எல்லாமே நமக்கு வந்துவிடும்.

நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:

வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.

நம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.

நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.

நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல் அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி பரக்கிறது.

ஊழியர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால் தான் திருட்டு தனமும் சுயநலமும் அதிகறிக்கிறது.

படிக்கவும் வேலைக்கும் செல்லும் தங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.

நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால் கலச்சாரம் சீரழிகிறது.

இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி அமைத்து விடுகிறது.

உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு. இறுதியாக நம்பிக்கையை பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.

படிப்பில்
நம்பிக்கையை இழந்தால்
பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

காதலில்
நம்பிக்கையை இழந்தால்

கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
நட்பில்
நம்பிக்கை இழந்தால்
பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்
கடமையில்

நம்பிக்கை இழந்தால்
கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்
கட்டுப்பாடுகளில்
நம்பிக்கை இழந்தால்
கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்
நிகழ்காலத்தில்
நம்பிக்கை இழந்தால்
எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்
எதிலும்
நம்பிக்கையோடு இருந்தால்
வாழ்வில் எல்லாமே சிறக்கும்.


உன்னுடைய பாதை நேர்மையானதாகவும்! உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம் வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு நம்பிக்கையுடன் செயல்படு! வெற்றி நிச்சயம்! என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக

Wednesday, June 21, 2006

நம்பிக்கையின் பொற்காசுப் பரிசுக்குரிய கட்டுரை -2

காலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ ( பள்ளி மாணவி)

காலம் பொன் போன்றது என்பர் மூதோர், எனினும் நேரம்தான் தெய்வம் என்பதை ஆழ்ந்து சிந்திதோமானால் புரிந்துக் கொள்ளலாம்!!

'பொழுது போதவில்லை' கவனிக்கவும் 'போதவில்லை' என்பவர்கள்
முன்னேற்றப் பாதையில் மிக வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்! மிக வேகமாக நடக்கின்றனர். மகிழ்ச்சியோடு இவ்வுலகை பார்க்கிறார்கள்!

'ஹலோ நலம்தானே ? 'என்ற சிறிய வார்த்தையோடு தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டு தங்கள் கடமையாற்ற பறந்து கொண்டுள்ளனர்!இவர்களைக் கேளுங்கள் " உலகிலேயே விலை மதிக்க முடியாத செல்வம் நேரம்தான் என்பார்கள்!!

time is wealth !!

'பொழுது போகவில்லை' கவனிக்க 'போகவில்லை' என்பவர் வாழ்க்கையில் ஏணிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்!! மெல்ல நடப்பார்!!தானும் சோர்வாக இருந்து அடுத்தவரிடமும் சோர்வை விதைப்பவர்!!எல்லாம் தெரிந்தவர் போல் அடுத்தவர் செயல்களுக்கும் முட்டுக் கட்டை போடுபவர்!!ஒன்றும் செய்ய விடமாட்டார். விரக்தியாகப் பேசி ஏதோ இருக்கிறோம் என்று கிடக்கிறேன், உயிரோடு இருக்கிறேன் என்று செத்துப் போனவர்களைப் போல் பேசுவார். இவர்கள் பார்த்தீனியம் விஷச் செடியைப் போன்றவர்!!


நான் ஏன் காலத்தை தெய்வம் என்றுக் கூறுகிறேன் தெரியுமா?
உலகில் தோன்றிய எல்லோருக்கும் இறைவன் தந்த செல்வம் காலம்தான்!! உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஆள்பவன், அடிமை அனைவருக்குமே வஞ்சனையில்லாமல் இறைவன் வழங்கியது காலத்தை மட்டுமே!!

இறைவனை எப்படி மதித்து பூசிக்கிறோமோ அப்படியே காலத்தையும் கருதுங்கள்!!

ஒவ்வொருவர் வாழ்விலும் தேர்வு எழுதி வெற்றிப் பெறுகிறோம்!! நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுகிறோம்! விரும்பியப் பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துக் கொள்கிறோம்!! திட்டத்தை முடித்து வெற்றிக் காண்கிறோம்!! இவை எல்லாம் நம் வாழ்வில் வரலாற்றுச் சிறப்புடைய நாட்கள்!!

இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாட்களாக valuable time ,days நாம் மாற்றவேண்டும்!! எண்ணி எண்ணி மகிழத்தக்க நாட்களாக உருவாக்க வேண்டும்!!

எண்ணிப் பார்ப்போமா!! இப்போது நம் வயது என்ன!! இந்த வயதில் என்ன என்ன செய்து முடித்து இருக்கிறோம் !! என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும்! ஏன் அவற்றை செய்யவில்லை!! என்று நாம் சுயப் பரிசோதனை செய்யத் தொடங்குவோமானால் வெற்றி நமக்கு மிக அருகில்தான்!!

காற்றடித்த திசையில் சென்றவன் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்புவதில்லை!! காலத்தைப் பற்றிக் கவலைப் படாதவனும் வெற்றியின் பக்கம் கூட நெருங்குவதே இல்லை!! மாறாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறான்!!

கொடுப்பதோ, வாங்கவோ முடியாததும் காலம்தான்!! அவரவர் காலத்தை அவரவர்தான் பயன்படுத்த வேண்டும்!!!!

இதோ உங்கள் காலமும் உங்கள் கையில்தான்!!

இன்றைய 24 மணித்துளிகளையும் திறமையாகப் பயன்படுத்துங்கள்!!

ஒவ்வொருத் துளியையும் வரலாறாக மாற்றுங்கள்!!

வரலாற்றை உருவாக்குகின்ற மாமனிதர் ஆகுங்கள்!!

இன்றைய நாள் நம் வரலாற்றில் பொன்னான நாள்!!

நேரமே தெய்வம் என்ற மாறுப் பட்டக் கருத்தை அறியத் தொடங்கி விட்டோமல்லவா!!

இனியாவது நாம் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்குவோம்!!

காலை 4 மணித் தொடங்கி இரவு உறங்கும் வரையிலான நாட்குறிப்பை வைத்திருக்கும் நிர்வாகிகளைப் பாருங்கள்!! ஒவ்வொரு மணித்துளியிலும் என்ன என்னச் செய்ய வேண்டும், யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்றுக் கட்டம் கட்டி விட்டிருப்பார்கள்!!

எல்லோருமா நிர்வாகத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்!! ஒரே படிப்புத்தான்!!ஆனால், ஒருவர் மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்!! அது ஏன்!திறமை மட்டுமா காரணம்!! இல்லை, தனித் திறமைதான் காரணமா!
இல்லை இல்லை! காலத்தை தெய்வமாகப் போற்றி, காலத்தைச் சரிவரப் பயன் படுத்தியதும்தான்!!

இந்த எனது சிறியக் கட்டுரை உங்கள் மனதை சிறிதாவது அசைக்குமானால் அதுவே உங்கள் வாழ்க்கையை வரலாறாக உயர்த்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு!!

முன்னுரை எழுதாதின் காரணமே அதை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்றுதான்!!

முடிவுரையாக சில கருத்துக்கள்!

நாமும் நமது நாடும் முன்னேற , வளம் பெற நம் நேரத்தை திறமையாக , முழுமையாகப் பயன் படுத்த வேண்டும்!! காலத்தை மதித்து நடத்துவதே இறைவனுக்கு செய்யும் திருத் தொண்டாகும்!!!

__________________________________________________________

(இதை எழுதியவர் ஒரு பள்ளி மாணவி )

ஒரு பள்ளி மாணவியிடம் இருந்து போட்டிக்கென வந்திருப்பதை பார்க்கையில் நம்பிக்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இம்மகிழ்ச்சியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். நடுவர்கள் பெரும் மகிழ்வோடு இக்கட்டுரைக்கு மதிப்பெண் அளித்தார்கள்.

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1

எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.,பி.எட்.,டி.ஏ.,

"பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு"

நம் பாரதநாடு பழம்பெரும் நாடு; ஆன்மீக வாழ்வை உலகிற்கு நல்கிய நாடு; உலக நாடுகளுக்கெல்லாம் திலகமாகத் திகழ, எதிர்கால இந்தியா சிறந்து விளங்கிட , நம் நினைவில் கொள்ளவேண்டிய சில கருத்துக்களை இங்கே காண்போம்.

கல்வித் திட்டம்:
ஒரு நாட்டின் பண்பை அறிவதற்கு, அந்நாடு முழுவதையும் ஒருவர் சுற்றிப்பார்க்க வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் கல்விக் கூடங்களைச் சென்று பார்த்தாலே போதுமானது என்பர். அந்த அளவிற்கு ஒரு நாட்டின் தன்மையை அறிய கல்வி ஓர் உரைகல்லாக அமைகிறது எனலாம்.

ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று அறிவியல் தொழில்நுட்பக் கல்வி முதன்மை பெற்றுத் திகழ்வது சிறப்புடைத்து. அதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றமும் உலகையே வியக்க வைக்கிறது என்று கூறினால் மிகையாகாது. தொழில் நுட்பத்தில் சிறப்படைய உதவும் நம் கல்வித் திட்டம் மனத்திட்பத்திற்கு போதிய வாய்ப்பளிக்க வில்லை என்பது வருந்தத் தக்கது. "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் "பயிற்றுப் பல கல்வி தந்து" இந்த பாரை உயர்த்திட உதவும் கல்வித்திட்டம் அமைய வேண்டும்.

கல்வியின் பயன்:
சுவர் இன்றி சித்திரம் இல்லை. மரமின்றி மலர்களும் கனிகளும் இல்லை. கல்வியறிவு இல்லையேல் எதுவும் இல்லை என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

என்ற தெய்வப் புலவரின் கருத்தின்படி ஆன்மீகப் பயிற்சி இல்லாத கல்வி சிறந்த கல்வி ஆகாது. கல்வியானது மனிதனை பண்பட்டவனாக மாற்ற வேண்டும். பண்பற்ற கல்வி பயனற்ற கல்வியாகும். எத்தகைய சிறந்த அறிவைப் பெற்று இருப்பினும் மக்கட் பண்பு இல்லையெனில் அவர் பெற்ற அறிவால் யாதொரு பயனுமில்லை. அவர் மரத்திற்கு ஒப்பாவர் என்பது வள்ளுவர் கருத்து

"அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்."

அரசின் செயல்பாடு:

கேடில்லாத விழுமிய கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வண்ணம் அரசு திட்டங்களைத் தீட்டிச் செயலாக்கிட வேண்டும். சுவாசிக்கும் காற்றுக்கு , எப்படி எல்லார்க்கும் உரிமை உண்டோ , அங்ஙனம் தாங்கள் விரும்பிய வண்ணம் படிப்பதற்கு ஏற்ற வாய்ப்பைத் தருவது அரசின் கடமையாகும். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகின்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் உயர்ந்த மேற்படிப்பு படிக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவரின் பாடலை இங்கு நினைத்தல் சாலச் சிறந்தது.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
ஒளிருவாள் அருஞ்சமர் நீக்கிக் களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே."

மேற்கண்ட பாடல்வரிகளில் மூன்றாவது வரி, அரசு செய்ய வேண்டியச் செயலை வலியுறுத்துகிறது. வேல்வடித்துக் கொடுப்பது என்பது மாணவர்களுக்கு தகுந்த படிப்பையும், வேலை வாய்ப்பையும் கொடுத்திட வேண்டும் என்ற கருத்தை தெளிவாக்குகிறது.

மாணாக்கரின் நிலை:
எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே எண்ணுபவன் பொறுப்பற்ற மனிதனாவான். இப்படித்தான் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோனாவான் என்பதற்கு ஏற்ப இன்றைய மாணாக்கர்கள் உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பே உயர்வுக்கு வழி. "பெருக்கத்து வேண்டும் பணிதல்!" என்பது போல வாழ்வில் உயர உயர பண்புடையவனாக திகழ்வான்.

"அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உனைச் சங்கமம் ஆக்கு
பிரிவிலை எங்கும் பேதமில்லை"

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை இன்றைய மாணாக்கர்கள் பொன் போல் போற்ற வேண்டும், செயலாற்ற வேண்டும்:.

ஒளிபடைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவுபெற்ற மதி, சிறுமை கொண்டு பொங்கும் நெறி, எளிமை கண்டு இரங்கும் மனம், ஏறுபோல் நடை ஆகியன பெற்று உலகில் பாரதத்தை தலை சிறந்த நாடாக, வளர்ந்த நல்லரசாக மாற்றிட வேண்டும் என்பதை இன்றைய மாணாக்கர்கள் தங்களின் வாழ்க்கை இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும்.

பயிற்று மொழி:
மொழி என்பது உள்ளக்கருத்துக்களை வெளியிட உதவும் அற்புதக் கருவியாகும். தாய்மொழி வாயிலாகவே கருத்துகள் உருப்பெற்று செயலாக்கம் பெறுகின்றன. வளர்ந்த மேலை நாடுகள் எல்லாம் தங்கள் தாய்மொழிவாயிலாகவே கல்வி பயின்று, சிறந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுத் தலை சிறந்து விளங்குகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும் நிலமை தலைகீழாக இருக்கிறது. மேல்நிலைக் கல்வி(+2) வரை எல்லாப்பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.அதோடு மட்டுமல்லாது கல்லூரிக் கல்வியையும் தாய்மொழியில் பயிற்றுவிப்பதற்கு அறிஞர் பெருமக்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இப்படிக் கூறுவதால் ஆங்கிலம் வேண்டாம் என்பதில்லை. அதை நாம் உலகத் தொடர்பு மொழியாகக் கற்றுத் தெளிய வேண்டும்.

"அன்ன நடை கற்கப் போய் தன்நடையும் இழந்தாற்போல்" என்பது போல இன்றைய மாணாக்கர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் இருக்கின்றனர். இந்நிலை மாற அரசும், பெறோர்களும் தாய்மொழிக் கல்விக்கு போதிய ஆக்கமும் ஊக்கமும் அளித்திடல் வேண்டும்.

ஆசிரியர்கள் நிலை:
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்." இறைவன் நிலைக்கு உயர்ந்து நிற்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் - குற்றமற்றவர் என்று பொருள். நல்ல மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அதாவது படித்த கல்வி மட்டும் போதும் என்று கருதாது மறிவரும் நிலைக்கேற்ப மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அவர்தான் நல் ஆசிரியர். எதிர்கால இந்தியாவை நிர்மானிக்கும் சிற்பியாக இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆசிரியர்களும் எண்ணிப் பார்த்து செயலாற்றிட வேண்டும். பாடற்கருத்துக்களை புதிய கோணத்தில் மாணவர்கள் சிந்திக்கும் வண்ணம் கற்பிக்க வேண்டும். சுருங்கக்கூறின் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு சிற்ந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும்.

நிறைவுரை

என்னரும் பாரதத்தின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் , பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி பெற்று , இன்னுபுற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? அந்நாளே வாழ்வின் பொன்னாள் என்று கூறி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்! வெல்க பாரதம்!

நம்பிக்கையோடு வாழ்வோம்!

Tuesday, June 20, 2006

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2

வாழ்வியல் வேதம்! - இராகவன் (எ) சரவணன், பெங்களூர்
================

நம்பு தம்பி நம்பு!
முயன்றால் இயலாதது எதுவுமில்லை!!

வாழ்வியல் விதிகள் சில சொல்ல
விழைகிறேன்!

(1) ஆசைப்படு
------------------------
உலகில் உருவாக்கப்பட்ட
அத்துணை விஷயங்களுக்கும்
'ஆசைப்படுதல்' ஒன்று தான்
மூலிகை!!!

ஆசை மட்டுமே பட்டுக்
கொண்டிருந்தால் பூசை நடக்காது!

சோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி
முயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி
நம்பிக்கை என்னும் விளக்கு வைத்து
உழைப்பு என்னும் பூசை நடத்து!!

பூசையின் புனிதம் காக்கப்பட
அவ்வப்போது ஆசை என்னும்
எண்ணெய் ஊற்று!!
அது தான் உன்னை அடுத்தடுத்த
குறிக்கோள்களை அடைய வைக்கும்
ஆனந்த ஊற்று!!

வெற்றி என்னும் பிரசாதம் உன் கையில்!!

(2) கோபப்படு!!
---------------------
உன் சுயத்தை எது
எள்ளி நகையாடுகின்றதோ,
சுட்டெரிக்கிறதோ,
அங்கே நீ அக்கினியாய் மாறு.

நிதானத்தோடு கூடிய
கோபத்தீ உமிழ்! ஆனாலும்
உன் சுயம் உன்னால் அங்கே
காக்கப்பட வேண்டும் மறவாதே!

தன்மானம் இல்லாத மனிதன்
உயிரில்லா உடல்!
நீரில்லா மீன்!
காலில்லாச் செருப்பு!!!
வயிறில்லா உணவு!!
விக்கிரகமில்லாக் கர்ப்பக்கிரகம்!

பிரயோசனமில்லை எதற்கும்!!

(3) பொறாமை கொள்!!
-------------------------------
உடனொத்தவர்களின் திறமையை
மட்டும் உன்னிப்பாய்ப் பார்த்து
ஆரோக்கியமான முறையில்
பொறாமை கொள்.....

பொறாமையே உன்னை
அயர விடாது உழைக்க வைக்கும்
புனிதமான சஞ்சீவி!!

விளக்கிற்கும் திரிக்கும் சேதாரம்
விளைவிக்காத தூண்டுகுச்சியைப்
போலப் பொறாமையைக் கையாள்...

விளக்கு - நீ!
திரி - உன் திறமை!
ஒளி - உன் வளர்ச்சி!
பொறாமை - தூண்டுகோல்!!

பொறாமை ஒரு ஆகாரம்!
ஒவ்வொரு வேளையிலும் வேண்டும்!
ஒவ்வொரு வேலையிலும் வேண்டும்!

(4) அவமரியாதை செய் !
-----------------------------------
கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும்
வருகின்ற பின்னூட்டங்களைப்
புன்னகைப் பூக்களைப்
பரிசளித்து வாங்கு!!

ஏனெனில் உன்னையே
ஒழுங்காகச் செதுக்கிட
உதவும் கண்ணாடிகள் அவை!!

கண்ணாடிகள், பார்க்கும்
கண்களையே் கிழிக்குங்கால்
அவற்றை அகமகிழ்ந்து
அவமரியாதை செய்!!

தேவையில்லாமல் முடிவளர்த்துத்
தேம்பித் தேம்பி மொட்டை அடிப்பானேன்?
தலையே போன பிறகு
தலைப்பாகை எதற்கு?

(5) தட்டிப் பறி!!!
---------------------------
உரிமைகளை எக்கணமும்
நிரந்தரமாக யாரிடமும்
விட்டுவிடாதே!
விட்டுத் தராதே!!

அவையொன்றும் உன்னால்
மேற்பார்வையிட முடியாத அளவுக்குக்
கடினமானவையும் அல்ல!!
காரியதரிசிகள் கவனித்துக்
கொள்ளக் கூடிய செயலும் அல்ல!!!

தட்டிப் பறி!! எட்டிப் பிடி!!

முயற்சிகள் உடனே பயனளிக்காவிடில்
சற்றே விட்டுப் பிடி!!

சிங்கத்திற்குக் கர்ஜனை!
சூரியனுக்கு வெப்பம்!
குழந்தைக்கு மழலை!
பெண்மைக்குத் தாலி!!!

விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போகும்!
தன் நிலை கெட்டுப் போகும்!!


(6) எதிரிகளை வளர்த்துக் கொள்!!
-----------------------------------------------

உன்னைப் பற்றித் தவறுகள்
தெரிவிக்கப்பட்டால் தயங்காது கவனி!
உயர்வுக்கு வழிவகுப்பின்
தயைகூர்ந்து உட்புகுத்து!

அனைவருமே நண்பர்களாகிப் போனால்
என்றுமே ஒருவழிப் பாதை உன்னுடையது!

கீழே விழச்செய்யும் விசையின்
தரத்தைப் பொறுத்தே பந்து
மேலே எழும்பும் தோழா!

காயங்கள் வந்தால் மருந்தின் அருமை!
வெயில் வந்தால் நிழலின் மகிமை!
அரவு தீண்டினால் விஷமுறிவின் அருமை!
எதிரிகள் இருந்தால் வளர்ச்சியின் பெருமை!

அடித்துத் துவைக்காமல்
அழுக்கு அகலுமா?
கடித்துத் தின்னாமல்
கரும்பு இனிக்குமா?

என்றும் உன்னை எரிகின்ற
தீயாக வைக்க எதிரிகள் அவசியம்....!

(7) இழந்து பார்!!
--------------------------
வெற்றி வேண்டுமா?
வேட்கை இழந்திடு!!

நட்பு வேண்டுமா?
பிடிவாதம் இழந்திடு!!

தூக்கம் வேண்டுமா?
நினைவுச் சங்கிலி இழந்திடு!!

புதுப் பசி வேண்டுமா?
நேற்றைய உணவின் எச்சத்தை இழ!

ஆரோக்கியம் வேண்டுமா?
கவலை இழந்திடு!!!

வெற்றுச் சுதந்திரம் வேண்டுமா?
ஒழுக்கத்தை இழந்திடு!!
வெற்றிச் சுதந்திரம் வேண்டுமா?
வறட்டுக் கொள்கைகளை இழந்திடு!!!

சோர்வு வேண்டுமா?
சோம்பல் இழந்திடு!

தீர்வு வேண்டுமா?
விதண்டாவாதம் இழந்திடு!!

(8) வன்மம் கொள்!!
---------------------------
கண்ணெதிரே அநியாயம்!
கண்டிப்பாய்ப் பொறுமை இழ!!
புலன்களுக்கு மட்டுமல்ல உணர்ச்சி!
பிறர் நலன்களுக்கும் சேர்த்துத் தான்!

எங்கே முதுமை மிதிக்கப்படுகிறதோ
அங்கே உன் பொறுமையைப்
பொசுக்கிப் பொங்கி எழு!!

எங்கே தாய்மை தரந்தாழ்த்தப்படுகிறதோ,
எங்கோ பெண்மையின் புனிதம்
போற்றப்படவில்லையோ,
அங்கே நீ அகிம்சையின்
ஜென்ம விரோதியாகு!

தன்மானம் எங்கே தலைசாய்க்கப்படுகிறதோ
உன் தலைக்கனத்திற்குச் தயங்காது சூட்டு
ஒரு தங்கக்கிரீடம்!

இடித்தால் தான் இடிக்கு மதிப்பு!
கடித்தால் தான் தேளுக்கு மதிப்பு!
சுட்டால் தான் சூரியனுக்குச் சிறப்பு!
சினங்கொண்டால் தான் மனிதனுக்கு மதிப்பு!

உண்மைக்குப் புறம்பான
விஷயங்கள் உன்னைச் சுற்றி நடக்கையில்
உனக்கான ஒற்றை வரி வேதம்!!
"நீ கொண்ட மிகப்பெரிய பொறுமை
உன் வாழ்நாளில் முதல் பத்து மாதம்!"

காற்றைக் கிழித்துத் தான் பேசுகிறாய்!
தசைகளை இறுக்கித் தான் உண்ணுகிறாய்!

(9) காதல் செய்!
--------------------------
உண்மையாகவும் நேர்த்தியாகவும்
இருந்தால் மட்டுமே இனிக்கும்!

உன்னைப் பெற்றெடுத்த தெய்வங்களைப்
பேணிப் பாதுகாக்கும் பண்பின் மீது
பாரபட்சமில்லாது காதல் கொள்!!

உன்னை நேசிக்கும் ஒவ்வொரு
உயிருக்கும் பரிசுத்தமான பாசத்தைப்
பரிசளிக்கும் பாங்கின் மீது
பாகுபாடில்லது காதல் கொள்!!

தக்க தருணத்தில் செய்த
உதவிகளுக்கு உயிரின் கடைசிச் சொட்டு
ஊறும் வரை உண்மையான நன்றி காட்டும்
அந்த உயரிய பண்பின் மீது காதல் கொள்!

உன்னதமான நெறியில் நல்வழிப்படுத்தும்
ஆன்மிகத்தின் மீது ஆறாத காதல் கொள்!!

முடிந்தளவு சிறு சிறு உதவிகளைச் செய்ய
உன்னை ஒப்புக்கொடுக்க ஒத்துழைக்கும்
அந்த தன்னலமற்ற தன்மையின் மீது
தளர்வில்லாக் காதல் கொள்!!!

கொண்ட நம்பிக்கைகளைக் காப்பாற்ற
சில சமயங்களில் இழப்புக்களை ஏற்றுக்
கொள்ளும் அந்தத் தியாகத்தின் மீது
திடமான காதல் கொள்!!

(10) பொய் பேசு!
------------------------
திட்டவட்டமான வாழ்க்கையை விட்டுத்
எட்டிப் போகச் செய்யும் எந்தவொரு
கொள்கையிடமும் நீ அதற்கு இணங்க
முடியாதென்று முழுமூச்சோடு பொய்பேசு!

இழந்ததற்கெல்லாம் வருந்த மட்டுமே
வைக்கும் எண்ணங்களுக்கு நான் உங்கள்
அழுகுரலுக்குக் காது கொடேன் என்று
கண்ணியமாய்ப் பொய் பேசு!!!

நடைமுறைப் படுத்த முடியாத
சிந்தனைகள், ஊருக்கு மட்டுமே போதிக்கும்
உபாசனைகள், முகத்திரை அணிவிக்கும்
பாராட்டுக்கள் இவை அனைத்திற்கும்
இனி நான் இறங்கி வர மாட்டேன் என்று
இன்முகத்தோடு் பொய் பேசு!!!

உன்னால் முடிந்த நன்மைகளைச்
செய்ய விடாமல் தடுக்கும் கயமைகளுக்கு
நீ சுயநலவாதி என்று சூசகமாய்ப்
பொய் சொல்!!

கடமையைச் செய்யவிடாது தட்டிக்கழிக்க
வைக்கும் சோம்பேறி இயல்புகளிடம்
நான் தலைசாய்க்க மாட்டேன் என்று
தயங்காது பொய் சொல்!!

நன்றி!

நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கவிதை -1

வாயுதேவா! - டாக்டர். சுந்தர் பரத்வாஜ், கோவை
#
உள்ளும் புறமுமாகி
உருவமில்லா அருவமானாய்
உருகொண்ட உடலினிலே
உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!
#
ஒன்றுமுதல் மூவிரண்டு
அறிவு கொண்ட ஜீவனெல்லாம்
உயிரோடு இருப்பதெல்லாம்
உன் கருணை யாலன்றோ!
#
பிராணன் உதான னென்றும்
வியான சமான அபான னென்றும்
ஐம்புலன்களைப் போல்
ஐவகைப் பாகமாகி
#
ஜடமான உடம்பினிலே
நற்பணியைப் புரிகின்றாய்- நான்
எப்பேரால் வாழ்த்திடுவேன்
வாழ வைக்கும் வாயுதேவா!
#
தசரதனின் தலைமகனின்
தன்மையான தூதுவனை
தரணிக்கு நீ கொடுத்தாய்
வாயுதேவா வணங்கு கின்றோம்.
#
சுவாசிக்கும் முறை யறிந்து
கும்பகம் நாம் செய்து விட்டால்
குவலயம் நமை போற்றும்
குணசீலன் ஆகிடுவோம்
#
உன்னை உணர்பவன்
உண்மையை உணர்கின்றான்
மூவகை ஆசைகளை
முழுதுமாய் துறக்கின்றான்.
#
காற்றடக்கும் வித்தை கற்றால்
காலனும் அடிமை ஆவான்- சகல
சித்தியும் கைகூடும்
சித்தனாய் ஆகிடுவான்!
#
சஞ்சீவி மலை பெயர்த்த
சிரஞ்சீவி சுந்தரனும்
வாயுவின் கருணையாலோ
வான கத்திலே பறந்தான்.
#
காற்றிலும் இரண்டு வகை
கண்டிடுவீர் அன்பர்களே! -அது
தென்றலாய் வருடும் சைவம்
புயலாய் மிரட்டும் அசைவம்!
#
பூமாரி பொழிந்திடவே
பூமியில் நீர் எடுத்து
மேகத்தில் சேர்ப்பதினால்
காற்றுக்கு கைகள் உண்டோ?
#
காற்றுக் குழல் பெற்றெடுக்கும்
குழந்தையே குரல் என்பர்
காற்றினால் மேகம் சிந்தும்
நீர் துளியைச் சாரல் என்பர்!
#
இசையென்னும் இனிமைக்கும்
ஓங்கார ஓசைக்கும்
ஆதாரம் ஆனவனே- உன்
அடியாரைக் காத்தருள்வாய்!
#
காற்று இருப்பதால் தான்
காது கூட கேட்கிறது
கேட்கும் ஒலி எல்லாம்
காற்றன்றோ படைக்கிறது.
#
வாகனங்கள் விடும் புகைதான்
கலியுகத்தின் அரக்கன் ஆவான்
காற்றினை கெடுத்திடுவான்
காலனை அழைத்திடுவான்
#
பசுமை மரம் வளர்த்து - காற்றை
பரிசுத்தம் ஆக்கிடுவோம்!
மாசற்ற மனித குலம்
தழைத்திடவே உதவிடுவோம்!
#
காற்றும் கடவுளும்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்மூடி ஜெபித்திட்டால்
உண்மைதனை உணர்ந்திடுவோம்!
#
காற்றையும் உணர்ந் திடலாம்
கடவுளையும் உணர்ந் திடலாம்
இரண்டிற்கும் உருவ மில்லை
இன்பம் துன்பம் எதுவுமில்லை!
#
காற் றென்பர்
கடவுள் என்பர்
காற்றே கடவுளாதல்
ஆரும் அறிகிலார்!
#
காற்றே கடவுள் என்று
உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே
காற்றையே கடவுளாய்
தியானிப்பார் நலன் பெறுவார்!

நன்றி!

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2

உயர்வுள்ளல் - இரவீந்தரன் கிருஷ்ணசாமி

அண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.

பிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம்
அவகாசமிருந்தது. டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள் (டிகூஎம்) எனத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.

மனதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது, ஒருவனின் வெற்றியும் தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தில் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க மூலகாரணமே 'ஜேகே'தான். அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம் செய்யாமலிருந்தால்...? இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே! அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.

அந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார்
ஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம், ப்ரவீனைத் தவிர. தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் வேண்டிகொண்டனர்.

இறுதியில் "ப்ரவீன்" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.

இது மிகப் பெரிய அதிர்ச்சி! யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்...? மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...?

நியாய தர்மங்கள் தோற்றுவிட்டனவா...? இதில் ஏதோ சூது நடந்திருக்க
வேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

மனிதவள மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.

"இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்..."

"என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்..."

"இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்...."
"யார்...?"

"உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்...."

சப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...!
"டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப் பேசினார்களே...."

இனியென்ன இருக்கிறது இவ்வுலகில்...? எல்லோருமே நம்பிக்கை
துரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.

பழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக்
கிளம்பிக் கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு. முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த 102 வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர். காந்தித்தாத்தாவும், வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.

பிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான்.
வீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லி
கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கோபால்சாமித் தாத்தா, பேரன் பிரவீனை
தன்னிடம் அழைத்தார்.

'என்ன பிரச்சினை...?"

விளக்கினான்.

தாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே...."

தன்னுடன் அழைத்துச் சென்றார்.

"என்ன தாத்தா நான் சீரியசாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம்
பேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால்
தெரியும்...." தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.

"யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனது
எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன..."

இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி, 'ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம் உட்பொருட்களடங்கியிருக்கும்.

யோசி...யோசி....'

என்ன யோசிக்க...? முதுகில் குத்தியதையா...? துதிபாடிகள் அங்கே
கோலோச்சுவதையா...? மேல்மட்டப் பதவியிலிருப்பவர்கள் உண்டு
கொழுப்பதையா...?எல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...?

இவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.
'ஓடு உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடி
அறுந்தால்தான் குழந்தை தன்னிச்