நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Tuesday, May 30, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை 107

இயற்கை மருந்து

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)

குறிப்பு: துயரங்களின் உயரங்களைத் தொட்டு, சோகங்களின் எல்லை வரைச் சென்று, இனி வாழ வழியே இல்லையென்று, தற்கொலைக்கே தயாராகிவிட்ட ஓர் இளைஞன், அதிலிருந்து மீண்டு, புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு கண்டு, சமுதாயம் போற்றும் ஒரு சாதனையாளன் ஆகிறான். எப்படி மாறினான் ? மாற்றியது எது? இது தான் கதை, கவிதை நடையில், கதாநாயகனின் வாக்குமூலமாய் வருகிறது.


இலக்கு இல்லாத பயணமாய் நடக்கிறேன்.
இறுகிய இதயத்துடன்.
வாழ்க்கையில் வெறுப்பு
காதலில் தோல்வி
வாட்டிடும் வறுமை
முயற்சியில் வீழ்ச்சி!

சிந்தை மோனத்தில், பார்வை வானத்தில்
தந்தையும், தாயும், தமக்கையும் சேர்ந்து
தந்தனர் பட்டம், படிப்பு முடிக்காமலேயே!

தண்டச்சோறு தான் அவர்கள் தந்த பட்டம்,
இதயம் வலிக்கிறது
ஆண்மை துடிக்கிறது தன் மானத்தால்
கனத்த மனத்தினனாய் நான்.

சோகம் என்னை செக்குமாடாய் சுற்றிவர
கால்கள் மட்டும் நடக்கின்றன.
சோகம் கூடிவிட்டால் வேகமும் கூடிவிடுமோ?
ஏனிந்த அவசரம், எங்கு செல்ல இந்த பரபரப்பு?
பாவம்,கால்கள் அறியாது,ஆனால் பதட்டம், பயம், கேள்வி
எல்லாம் கலந்த உணர்வு கலவையாய்
குழப்பம் என்னும் எரிமலை குழம்பு
உருவாகி, என் உள்ளத்தில் கொந்தளிக்க,
ஆற்றாமையால் உருவான ஒரு பெரும்மூச்சு
புயல் காற்றாய் என் நாசிக்கரையை கடக்கிறது,
காற்றில் கலக்கிறது.

ஊன்றுகோல் ஒன்றிருந்தால் நான் எழுந்து நடந்து விடுவேன்
பற்றுக்கோல் இல்லாத பசுங்கொடியாய் அல்லவா நான் பரிதவிக்கின்றேன்
பரிதாபம் என் நிலை, ஊறு செய்ய காத்திருக்கும் உறவினர்கள்
உதவி செய்ய ஊரினிலே யாரும் இல்லை.
என்னை உதவாக்கரை என்று உதாசினம் செய்தார்கள்,
உதவி என்றவுடன் ஒதுங்கியே சென்றார்கள்.
நானும் தான் என் வயதுக்குள் எத்தனை துன்பங்கள்?
எத்தனை துயரங்கள்? எத்தனை சோகம்? எத்தனை வறுமை?
எத்தனை எத்தனை அவமானங்களை எல்லாம் கூட சந்தித்துவிட்டேன்,
சகித்துக் கொண்டேன்.

ஆனால், இனியும் பொறுத்துக் கொள்ள என் இதயத்தில் வலுவில்லை
இன்று என் பிரபஞ்சமே பிரளயத்தால் அழிந்து விட்டது போன்ற ஒரு பிரம்மை
நான் மட்டும் தனிமையாய், ஒருமையாய், வெறுமையாய், நிராதரவாய், நிர்கதியாய் நிற்கின்றேன்.
அதனால் தான் நான் இந்த தகாத முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கின்றேன்.

இப்போது நான் எங்கு செல்கிறேன் தெரியுமா? ஹீம் ....
வேறு எங்கே செல்லப் போகிறேன்
வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களும்
தொல்லைகளிலிருந்து விடுபட விளைபவர்களும்
எங்கு செல்வார்களோ?
எங்கு சென்றால் என்னை உதவாக்கரை, தண்டச்சோறு என்று சொல்ல மாட்டார்களோ?
எங்கு சென்றால் திரும்பமுடியாதோ?
எங்கு சென்றால் உடல்பாரத்தைக் கூட உதறிவிட்டு
காற்றோடு காற்றாக கலந்து விடலாமோ?
அங்கு தான்!
அதே அந்த தற்கொலைத் தளத்திற்கு தான், இவ்வளவு அவசரமாக செல்கிறேன்.

ஆனால், யாரோ என்னை தொடர்வது போல் இருக்கவே நின்று விட்டேன்
சுற்றுமுற்றும் பார்க்கிறேன், யாருமே இல்லை
வானத்தை அண்ணாந்து பார்த்தேன் அங்கு ஒரு கார்மேகம் என்னையே உற்றுப்பார்க்கிறது
ஏதோ சொல்லத் துடிக்கிறது. ஹீம் ...
காற்றடித்தால் கரைந்து போகும் கார்மேகத்தால்
எனக்கு என்ன உதவி செய்து விட முடியுமாம்?
ஏன் என்னை தொடர்கிறதாம்?
என் வறுமையை போக்கவா?
என் சோகத்தை தீர்க்கவா? இல்லை
என் திறமைகளை வெளி உலகுக்கு உணர்த்தி
என் வாழ்வை ஒளிரச் செய்யவா?
என்னை மிளிரச் செய்யவா? அது முடியாது,
முடிந்து விட்டது என் வாழ்க்கை,
அஸ்தமித்த வாழ்க்கை எப்படி மிளிரும்? எப்படி ஒளிரும்?.

இப்போது என் உள்ளத்தில் அலை அலையாய் பல கேள்விகள் எழுகின்றன,
அஸ்தமித்த ஆதவன் மீண்டும் உதிப்பது இல்லையா?,
கரை வரை வந்த அந்த அலைகள் கூட,
கரையிலேயே கரைந்து விடுவதுமில்லை உறைந்துவிடுவதுமில்லை
மீண்டும் கடலில் சங்கமித்தே தீரும்.

இந்த தீர்மானத்தோடு மீண்டும் நான் மேகத்தை ஏறிட்டுப் பார்க்கிறேன்
அது இன்னும் பல உண்மைகளை உள்ளன்போடு எனக்கு உணர்த்தியது
மகனே! நீ மாய்ந்து விட்டால் ஓய்ந்து விடும் பிரச்சனைகள் என்று தவறாக எண்ணி விட்டாய்.
அதனால் தான் இந்த தகாத முடிவுக்கு நீ தள்ளப்பட்டிருக்கிறாய்
மரணமென்பதும் அழிவு என்பதும் உடலுக்குத் தான். ஆன்மா அழிவதில்லை
ஆன்மா என்பது உடலை இயக்குகின்ற ஆற்றல்
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாதென்று
அறிவியலாரே ஒப்புக் கொள்கின்றனர்
எனவே தற்கொலை என்பது கூட ஒரு தற்காலிகமான நிவாரணம் தானே ஒழிய நிரந்தரம் இல்லை.

அடித்துக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தில் சிறிய மீன்குஞ்சுகள் கூட எதிர் நீச்சல் போடுகின்றன
சிறிய பறவைகள் தான் அந்த சிட்டுக்குருவிகள் அவை புயல்காற்றையும் கூட கிழித்து பறக்கின்றன.

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்
புழுவிடம் கூட உள்ளது போர்க்குணம்.
போர்க்குணம் என்பது ஆயுதம் ஏந்துவது அல்ல, தீவிரவாதி ஆவதும் அல்ல
வாழ்க்கையில் வறுமையை, துன்பத்தை, துயரத்தை
நமக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எல்லாவற்றையும்
எதிர்த்து போராடுவது தான்.

எத்தனை முறை அறுந்து அறுந்து விழுந்த போதும்
தளராத மன உறுதியோடு தனக்கென வீடு ஒன்றை
தானே கட்டி முடிக்கிறது அந்த சிலந்தி
இந்த மாதிரி பூச்சி புழுக்களிடமெல்லாம் வீரமும், விடா முயற்சியும்,
போர்க்குணமும் இருக்கும் போது
உன்னிடம் இல்லை என்பது தான் வேதனை.

மகனே! நீ தற்கொலை செய்து கொண்டால்
உன் உடலை புதைக்க மாட்டார்களய்யா,
எரித்து விடுவார்கள், எரித்து சாம்பலாக்கி விடுவார்கள் பாவிகள்,
ஏன் தெரியுமா? இப்படி ஒரு கோழையை பிள்ளையாக பெற்றேனே
என்று அந்த பூமித்தாயின் மனம் புண்படுமாம்,
இந்த கோழையில் உடலைக்கூட ஏற்க்க மாட்டேன் என்று சொல்லி விடுவாளாம்,
எனவே கவலைகளை காற்றாய் நினைத்து கிழித்து பறந்து விடு
மீன்குஞ்சிடம் பாடம் கற்றாய் அல்லவா? வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடு
அமிழ்ந்து போகாதே.

நன்றாக என்னைப் பார் மகனே!
நான் பூமியில் நீராக இருந்தேன்,
சூரியனின் சூழ்ச்சியாலே மாய்ந்தேன்,
ஆவியானேன், அலைந்தேன், மேகமானேன்,
இதோ தென்றல் என்னை தீண்டி விட்டது
மீண்டும் மாரியாய் நான் மாறி மண்ணில் வந்து
நீராய் ஜனிக்க இருக்கிறேன்.

மானிடனும் அப்படித் தான் நிம்மதியாய் வாழ்வான்
நிமிடத்தில் மாய்வான்.
விதியின் பயனாலே மீண்டும் மண்ணில் பிறந்து விடுவான்
எனவே வாழ்க்கையை எதிர்த்து போராடு, போரிடு, வாழ்ந்து காட்டு,
வா மகனே! வந்து விடு.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி
வாழ்ந்து காட்டு, வா மகனே! வந்து விடு

இப்படியாக பேசி முடித்தது மேகம்
வெட்கத்தால் கூசி துடித்தது என் தேகம்.
மேகம் தன் முதல் துளி முத்தத்தை என் உச்சியில் பதித்தாள்
சிலிரென்றது, சிலிர்த்தேன்
இதோ என் நெற்றியில்
ஆகா! என் கன்னத்தில்
என்ன ஒரு இன்பம். என் உடலெல்லாம் முத்தமழை முத்துகளை சிந்தி
என்னை குளிரச் செய்து விட்டாள்,
மழையில் நனைந்தது உடை மட்டுமல்ல
உடல் மட்டுமல்ல, இது வரை உள்ளத்தில்
கொந்தளித்துக் கொண்டிருந்த எரிமலைக்குழம்பும்
குளிர்ந்து உறைந்து இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது,
என் மனமாற்றத்தை உணர்ந்து விட்டவள் போல்
பளிச்சென கண் சிமிட்டி உலகம் அதிரும் வண்ணம் கலகலவென சிரித்தாள்
வானத்தை அண்ணாந்து பார்த்தேன்
அங்கே மேகத்தை காணவில்லை
என் சோகத்தையும் தான்.

வானம் மட்டும் தெளிந்த நீரோடையாய் தெளிந்து கிடக்கிறது
என் உள்ளத்தை போல்
இந்த உலகமே புதியதாக, பூந்தோட்டமாக, அழகாக,
என்னை பார்த்து பாசத்தோடு சிரிப்பது போல் இருந்தது
நானும் புதிய மனிதனாய் புனர்ஜென்மம் எடுத்தேன்
எனக்குள் ஒரு நம்பிக்கை தீப்பொறி,
எனக்குள் ஒரு போர்குணம், தன்னம்பிக்கை,
எல்லாம் வந்துவிட்டதை உணர்ந்தேன்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் செய்து முடி, அல்லது செய்து கொண்டே செத்து மடி,
வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்
என்ற உற்சாக மந்திரங்களை எனக்கு நானே உச்சரித்து கொண்டு
வீடு திரும்பினேன்.

உள்ளத்தையும் கூட பண்படுத்தும் பண்புள்ள
உயர்ந்த மருந்து இயற்கை மருந்து தானே!!!?

1 Comments:

At 4:52 PM, Blogger பரஞ்சோதி said...

Test

 

Post a Comment

<< Home