நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, February 10, 2007

நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்

நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.


நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101

உன்னிலும் என்னிலும்


உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்

என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

(நண்பர்களே! உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).

நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி

நண்பர்களே!

போட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.

உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1. பாஸிடிவ்ராமா - positiverama@gmail.com

2. பரஞ்சோதி - paransothi@gmail.com

3. விழியன் - umanaths@gmail.com

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

நன்றி!

இவண்,

நம்பிக்கை கூகுள் குழுமம்.

http://groups.google.co.in/group/nambikkai

Monday, February 05, 2007

"நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா" கவிதைப் போட்டி அறிவிப்பு

இணையத்தின் இனிய நண்பர்களே!
வணக்கம்!
உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது.
நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது.

கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..

என்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா? ஆ! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.

சின்ன விளக்கம் இங்கே..

காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.
ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர். உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.

நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும். படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.
பரிசுத்தொகை விபரம்
முதல்பரிசு ரூ 1500/-

இரண்டாம் ரூ 1000/-

மூன்றாம் பரிசு ரூ 500/-

ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.


போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:

1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.

2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.
3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.

4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)
5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!
6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.
7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.
உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும்.
பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.
தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
1.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
2.பரஞ்சோதி umanaths@gmail.com
மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!
உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!
இவண்,
நம்பிக்கை கூகுள் குழுமம்.
http://groups.google.co.in/group/nambikkai

Thursday, June 22, 2006

நம்பிக்கையின் சிறப்பு பரிசுக்குரிய கட்டுரை 1

நம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்

அனைவரின் வாழ்க்கைக்கும் அவசியம் தேவையான, ஆற்றல் தரும் விஷயம் நம்பிக்கை. உயிர் இல்லாத உடலுக்கு மதிப்பு குறைவு போல, நம்பிக்கை இல்லாத மனிதனுக்கும் இங்கே மதிப்பு குறைவு. பலரது வாழ்க்கையை மாற்றும் வலிமை நம்பிக்கைக்கு மட்டுமே உண்டு. வாழ்க்கை எனும் ஆற்றை நம்பிக்கை எனும் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சுலபமாக கடக்கிறார்கள், மற்றவர்கள் கரையிலேயே வீழ்ந்து கிடக்கிறார்கள். கஷ்டத்தில் வரும் துன்பத்தைவிட கஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்தால் வரும் துன்பம் அதிகம். இதை தவிர்க்க நம்பிக்கையால் மட்டுமே முடியும்.

நம்பிக்கை எங்கும் இருக்கிறது. நமக்குள் இருக்கிறது. நம்மைச்சுற்றி இருப்பவர்களிடம் இருக்கிறது. புத்தகங்களில் இருக்கிறது. கடவுளிடம் இருக்கின்றது. நம்மைச்சுற்றி நடக்கும் சிறுசிறு சம்பவங்களில் இருக்கிறது. ஓவவொன்றையும் கூர்ந்து கவனித்தால் நம்பிக்கையை பற்றி நாம் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.

வாகனத்திலோ, இரயிலிலோ, விமனத்திலோ, பயணம் செய்யும்போது அந்த பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் வேடிக்கை பார்த்துக்கொண்டும், புத்தகம் படித்துக் கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் பயணம் செய்ய முடியும். விபத்து ஏற்படுமோ என்ற பயம் வந்துவிட்டால் பயணம் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.


வங்கியில் பணம் சேமிக்கின்றோம், அந்த பணம் பதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் நம்மால் பயமின்றி இருக்க முடியும். நம்பிக்கை இல்லாவிட்டால் பணம் பற்றிய கவலை தான் மனம் முழுவதும் இருக்கும்.


கணவன் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்றாட வேலைகளும், இல்லறமும் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் குடும்பத்தில் குழப்பங்கள்தான் நிறைந்திருக்கும்.


தொழில் ஒன்றை தொடங்குகிறோம் அதை சிறப்பாக செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் அதை சிறப்பாக செய்ய முடியும். நஷ்டம் வந்துவிடுமோ என்ற பயத்துடனே ஆரம்பித்தால் அது நஷ்டத்தில் தான் முடியும்.

இன்னும் எத்தனையோ விஷயங்கள் நம்பிக்கையால்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. நாம் எடுக்கும் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பவேண்டும். நம்மால் முடியுமா என்று சந்தேகப்படக்கூடாது.

ஒரு தத்துவம் நினைவுக்கு வருகிறது

சந்தேகம் இருக்கும் இடத்தில் சந்தோஷம் இருக்காது!
நம்பிக்கை இருக்கும் இடத்தில் நன்மைகள் இருக்கும்!

நம்பிக்கையை இரண்டு விதமாக சொல்லலாம்

1. தானே ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை

2. நிர்பந்தத்தால் ஏற்படும் நம்பிக்கை

ஒரு மாணவன் நிறைய மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப முதலே நம்பிக்கையுடன் அன்றாடம் படித்தால் அது தானாக ஏற்படுத்தி கொள்ளும் நம்பிக்கை. தேர்வு நெருங்கும் சமயத்தில் குறைந்த காலத்தில் படித்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் படிப்பது நிர்பந்தத்தால் வரும்.

நம்பிக்கையின் வலிமையை நம்மை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம் நான் கற்ற சில சம்பவங்கள்.

ஒரு நாள் விட்டிற்கு பசியுடம் வந்தேன் விட்டில் எல்லோரும் பாட்டி வீட்டிற்கு சென்று இருந்தார்கள். சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்த்தேன் தோசை மாவும், சட்டினியும் இருந்தது. சரி தோசை சுடலாம் என்று முதல் தோசை ஊற்றினேன். அந்த தோசைக் தோசைக்கல்லின் மீது எப்படித்தான் காதல் வந்தது, கல்லை விட்டு பிரியாமல் ஒட்டிக்கொண்டது. ஒரு வழியாக சுரண்டி எடுத்த பிறகு அடுத்த தோசை ஊற்றினேன். அதை தோசை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அதை அதிசிய பொருட்களின் பட்டியலில் தான் சேர்க்க வேண்டும், அப்படி இருந்தது. உணவகத்தில் போய் சாப்பிடலாமா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. ஆனால் கையில் பணம் இல்லை. அடுத்த தோசை ஊற்றினேன், அது அறையும் குறையுமாக இருந்தது. அடுத்த தோசை நன்றாக இருந்தன. வழக்கமாக 5 தோசை சாப்பிடும் நான் அன்று 7 தோசை சாப்பிட்டேன். ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் வந்தது. வயிறுடன் சேர்ந்து மனதும் நிறைந்தது. இதே போல் தான் நமது வாழ்க்கையும் நமது வேலைகள் ஆரம்பத்தில் கஷ்டமானதாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கும். நம்பிக்கையுடன் நிதானமாக செயல்பட்டால் அவைகள் சாதரணமானதாக மாறிவிடும்.

இன்னொரு சம்பவம் என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விட்டார்கள். ஒருவனுக்கு சாதாரண காயம் இன்னொருவனுக்கு சற்று காயம் அதிகம். இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டனர். சற்று காயம் பட்டவன் ஒருவாரத்தில் இயல்பாக எங்களுடன் விளையாட வந்து விட்டான். சாதரணகாயம் பட்டவன் இரு வாரத்திற்கு பிறகுதான் இயல்பாக விளையாடுவதற்கு வந்தான். காரணம் விசாரித்ததில் ஒரு உண்மை புரிந்தது. அதிக காயம் பட்டவன் தன்னுடைய காயம் சாதரணமானது என்றும் எளிதில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தான். சாதாரண காயம் பட்டவனோ தன்னுடைய காயம் பெரியது என்றும் அது சரியாவதற்கு இன்னும் நாளாகும் என்றும் நம்பிக்கையில்லாமல் இருந்திருக்கிறான். இதேபோலதான் நம் வாழ்க்கையும் பெரிய பிரச்சனைகளை இது சாதரணமானது எளிதில் சரி செய்யலாம் என்று நம்பினால் சரி செய்து விடலாம். சிறிய பிரச்ச்னையை இதை நம்மால் சரி செய்ய முடியாது என்று பயந்தால் அது கடினம்தான்.



நம்பிக்கையை பற்றி சொல்லும் போது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் "எதை நம்புவது? யாரை நம்புவது? எப்போது நம்புவது? எப்படி நம்புவது?" என்று நம்பத்தெரிய வேண்டும். நம்முடைய நம்பிக்கைகள் கண்முடித்தன நம்பிக்கையாக இருக்க கூடாது. ஆரோக்கியமான நம்பிக்கையாகவும் அறிவுபூர்வமான நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும்.

என் நண்பன் வீட்டின் அருகே ஒரு பையன் இருந்தான். ஒரு பெண்னை காதலித்தான். அந்த பெண் தன்னுடைய அத்தை பையனை காதலிப்பதால் மறுத்து விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் அந்த பெண்னை தொந்தரவு செய்தான். ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு எப்படியும் கடைசியில் அவள் என்னை காதலிப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருப்பதாக சொன்னான்! இதற்கு பெயர் நம்பிக்கையா? முட்டாள்தன்ம். இதே போல் தான் சிலர் தவறாக ஒன்றை சரி என்று நினைத்து, அதன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார்கள்.

நம்பிக்கையை பற்றி திருவள்ளுவர் சொல்லும் அழகான கருத்து இது

" தேரான் தெளிவும் தெளிந்தபின் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்"

ஒன்றைபற்றி சரியாக தெரிந்துக் கொள்ளாமல் அதை நம்புவதும், நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒன்றை சந்தேகப்படுதலும் தீராத துன்பத்தை தரும் என்பது இதன் கருத்து.

எல்லோரையும் நம்புவது ஆபத்து. யாரையும் நம்பாதது பேராபத்து.

எனவே நாம் எந்த ஒரு விஷயத்திலும் நன்றாக யோசித்த பிறகே நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கவேண்டும்.

நமக்கு நிறைய நன்மைகளை தரும் நம்பிக்கையில் முக்கியமான ஒன்று கடவுள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் தான் பலரது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருக்கிறது. நிறைய மதங்களும், நிறைய கடவுள்களும் இருக்கின்றன. பாதைகள் வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றை நோக்கிதான். எனவே எந்த கடவுளை வண்ங்குகிறோம் என்பது முக்கியமில்லை. எந்த அளவிற்கு உண்மையாகவும் நம்பிக்கையுடனும் வண்ங்குகிறோம் என்பதை பொறுத்தும் தான் கடவுள் அருள் புரிகிறார்.

நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! பிறகு கடவுளிடத்தில் நம்பிக்கை! என்று சொல்கிறார் விவேகானந்தர். உழைப்பதற்கு முன்னால் தன்னம்பிக்கை வேண்டும் உழைப்புக்கு பின் கடவுள் நம்பிக்கை வேண்டும்.

உலகில் எல்லா மதங்களும் வழியுறுத்தும் கருத்து "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்"

பிரச்சனை யாருக்குதான் இல்லை. ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். பிரச்சனைகள் தீர்க்க வேண்டுமானால் முதலில் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் பதட்டமில்லாமல் நம்மால் அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை ஏற்பட்டாலே அதற்குரிய வழியும் கிடைத்து விடுகிறது. ஒரு சிறிய கதையின் மூலம் இதை எளிதாக புரியவைக்கலாம்.

ஒரு சிறிய நாடு ஆனால் மிகவும் சொழிப்பான வளமிகுந்த நாடு. அருகே உள்ள பெரிய நாட்டின் மன்னனுக்கு அந்த வளமான சிறிய நாட்டை பிடிக்க வேண்டும் என்று போருக்கு தயாரானான். சிறிய நாட்டின் மன்னனோ, மிகவும் கவலை அடைந்தான். நமது படை சிறியது. போர் வந்தால் தோல்வி நிச்சயம்.எனவே அடிபணிந்து போய்விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் மன்னின் மகள் இளவரசியோ அதை மறுத்தாள். முடிந்த வரை போராடுவோம், நேர்மையும் நம்பிக்கையும் நம்மிடம் இருக்கிறது. போருக்கு தயாராகுங்கள் நம்பிக்கை நம்மிடம் இருக்கும்வரை பிரச்சனைகளுக்கு தீர்வும் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி நம்பிக்கையுடன் யோசிக்க ஆரம்பித்தாள். ஒரு யோசனை பிறந்தது. அந்த காலாம் முதலே ஒரு பழக்கம் இருக்கிறது. ஒரு பெண் ராக்கி என்று சொல்லப்படும் பலவண்ண கயிற்றை ஒரு ஆணிடம் கொடுத்தால் அவனை தன்னுடைய அன்பிற்குரிய சகோதரனாக ஏற்றுகொண்டு விட்டாள் என்று அர்த்தம். உடனடியாக அருகில் இருக்கும் மற்ற நாட்டு மன்னர்களுக்கெல்லாம் ராக்கி சகோதர கயிறை அனுப்பி, அதனுடன் ஆபத்தில் இருக்கிறோம் உதவுமாறு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பினாள். சகோதரிக்கு ஒரு ஆபத்தென்றால் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா? எல்லா மன்னர்களும் உதவிக்கு வந்தார்கள். பெரிய நாட்டின் மன்னன் தோற்று ஓடிப்போனான். இக்கதையில் நமக்கு புரிவது பிரச்சனைகளை கண்டு பயப்படுவதை விட அதை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை நம் மனதிற்குள் ஏற்பட்டு விட்டால் அதை தீர்ப்பதற்கு வழியும் தானாகவே கிடைத்து விடுகிறது.

ஒரு நாட்டின் மன்னன் பக்கத்து நாட்டு மன்னனை மட்டும் நண்பனாக்கி கொண்டால் போதும். போர் என்றால் மன்னனுடன் சேர்ந்து அவனது வீரர்படை, யானைபடை, குதிரபடை, அனைத்தும் உதவிக்கு வந்துவிடும். அது போல நாமும் நல்லநம்பிக்கையை மட்டும் மனதில் ஏற்படுத்திக்கொண்டால் அதனுடன் சேர்ந்து உழைப்பும் ஆர்வம், திட்டம், சந்தோஷம், மனப்பக்குவம் எல்லாமே நமக்கு வந்துவிடும்.

நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:

வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால் முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.

நம்பிக்கையின் மீதும்மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள் நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.

நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால் வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும், நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.

நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல் அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி பரக்கிறது.

ஊழியர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால் தான் திருட்டு தனமும் சுயநலமும் அதிகறிக்கிறது.

படிக்கவும் வேலைக்கும் செல்லும் தங்கள் பிள்ளைகள் படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.

நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால் கலச்சாரம் சீரழிகிறது.

இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வது தான். இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி அமைத்து விடுகிறது.

உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள் பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும் தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள். அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும் அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.

நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும் தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு. இறுதியாக நம்பிக்கையை பற்றி நான் படித்த கவிதை ஒன்றை சொல்லி நிறைவுசெய்கிறேன்.

படிப்பில்
நம்பிக்கையை இழந்தால்
பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்

காதலில்
நம்பிக்கையை இழந்தால்

கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
நட்பில்
நம்பிக்கை இழந்தால்
பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்
கடமையில்

நம்பிக்கை இழந்தால்
கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்
கட்டுப்பாடுகளில்
நம்பிக்கை இழந்தால்
கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்
நிகழ்காலத்தில்
நம்பிக்கை இழந்தால்
எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்
எதிலும்
நம்பிக்கையோடு இருந்தால்
வாழ்வில் எல்லாமே சிறக்கும்.


உன்னுடைய பாதை நேர்மையானதாகவும்! உழைப்பு உண்மையானதாகவும் இருந்தால் இறைவன் அருள் பற்றி ஐயம் வேண்டாம். அது உனக்கு எப்போதும் உண்டு நம்பிக்கையுடன் செயல்படு! வெற்றி நிச்சயம்! என்று அருமையான கருத்தை முன் வைக்கிறார் புதுவை அன்னை.

நல்லதே நினைப்போம், நம்பிக்கையுடன் செயல்படுவோம். நலமாக வாழ்வோமாக

Wednesday, June 21, 2006

நம்பிக்கையின் பொற்காசுப் பரிசுக்குரிய கட்டுரை -2

காலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ ( பள்ளி மாணவி)

காலம் பொன் போன்றது என்பர் மூதோர், எனினும் நேரம்தான் தெய்வம் என்பதை ஆழ்ந்து சிந்திதோமானால் புரிந்துக் கொள்ளலாம்!!

'பொழுது போதவில்லை' கவனிக்கவும் 'போதவில்லை' என்பவர்கள்
முன்னேற்றப் பாதையில் மிக வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கின்றனர்! மிக வேகமாக நடக்கின்றனர். மகிழ்ச்சியோடு இவ்வுலகை பார்க்கிறார்கள்!

'ஹலோ நலம்தானே ? 'என்ற சிறிய வார்த்தையோடு தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டு தங்கள் கடமையாற்ற பறந்து கொண்டுள்ளனர்!இவர்களைக் கேளுங்கள் " உலகிலேயே விலை மதிக்க முடியாத செல்வம் நேரம்தான் என்பார்கள்!!

time is wealth !!

'பொழுது போகவில்லை' கவனிக்க 'போகவில்லை' என்பவர் வாழ்க்கையில் ஏணிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருப்பவர்!! மெல்ல நடப்பார்!!தானும் சோர்வாக இருந்து அடுத்தவரிடமும் சோர்வை விதைப்பவர்!!எல்லாம் தெரிந்தவர் போல் அடுத்தவர் செயல்களுக்கும் முட்டுக் கட்டை போடுபவர்!!ஒன்றும் செய்ய விடமாட்டார். விரக்தியாகப் பேசி ஏதோ இருக்கிறோம் என்று கிடக்கிறேன், உயிரோடு இருக்கிறேன் என்று செத்துப் போனவர்களைப் போல் பேசுவார். இவர்கள் பார்த்தீனியம் விஷச் செடியைப் போன்றவர்!!


நான் ஏன் காலத்தை தெய்வம் என்றுக் கூறுகிறேன் தெரியுமா?
உலகில் தோன்றிய எல்லோருக்கும் இறைவன் தந்த செல்வம் காலம்தான்!! உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஆள்பவன், அடிமை அனைவருக்குமே வஞ்சனையில்லாமல் இறைவன் வழங்கியது காலத்தை மட்டுமே!!

இறைவனை எப்படி மதித்து பூசிக்கிறோமோ அப்படியே காலத்தையும் கருதுங்கள்!!

ஒவ்வொருவர் வாழ்விலும் தேர்வு எழுதி வெற்றிப் பெறுகிறோம்!! நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெறுகிறோம்! விரும்பியப் பெண்ணை அல்லது ஆணைத் திருமணம் செய்துக் கொள்கிறோம்!! திட்டத்தை முடித்து வெற்றிக் காண்கிறோம்!! இவை எல்லாம் நம் வாழ்வில் வரலாற்றுச் சிறப்புடைய நாட்கள்!!

இப்படித்தான் ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்க நாட்களாக valuable time ,days நாம் மாற்றவேண்டும்!! எண்ணி எண்ணி மகிழத்தக்க நாட்களாக உருவாக்க வேண்டும்!!

எண்ணிப் பார்ப்போமா!! இப்போது நம் வயது என்ன!! இந்த வயதில் என்ன என்ன செய்து முடித்து இருக்கிறோம் !! என்னென்ன செய்து முடித்திருக்க வேண்டும்! ஏன் அவற்றை செய்யவில்லை!! என்று நாம் சுயப் பரிசோதனை செய்யத் தொடங்குவோமானால் வெற்றி நமக்கு மிக அருகில்தான்!!

காற்றடித்த திசையில் சென்றவன் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்புவதில்லை!! காலத்தைப் பற்றிக் கவலைப் படாதவனும் வெற்றியின் பக்கம் கூட நெருங்குவதே இல்லை!! மாறாக விலகி வெகு தூரம் சென்றுவிடுகிறான்!!

கொடுப்பதோ, வாங்கவோ முடியாததும் காலம்தான்!! அவரவர் காலத்தை அவரவர்தான் பயன்படுத்த வேண்டும்!!!!

இதோ உங்கள் காலமும் உங்கள் கையில்தான்!!

இன்றைய 24 மணித்துளிகளையும் திறமையாகப் பயன்படுத்துங்கள்!!

ஒவ்வொருத் துளியையும் வரலாறாக மாற்றுங்கள்!!

வரலாற்றை உருவாக்குகின்ற மாமனிதர் ஆகுங்கள்!!

இன்றைய நாள் நம் வரலாற்றில் பொன்னான நாள்!!

நேரமே தெய்வம் என்ற மாறுப் பட்டக் கருத்தை அறியத் தொடங்கி விட்டோமல்லவா!!

இனியாவது நாம் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்குவோம்!!

காலை 4 மணித் தொடங்கி இரவு உறங்கும் வரையிலான நாட்குறிப்பை வைத்திருக்கும் நிர்வாகிகளைப் பாருங்கள்!! ஒவ்வொரு மணித்துளியிலும் என்ன என்னச் செய்ய வேண்டும், யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்றுக் கட்டம் கட்டி விட்டிருப்பார்கள்!!

எல்லோருமா நிர்வாகத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்!! ஒரே படிப்புத்தான்!!ஆனால், ஒருவர் மட்டுமே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார்!! அது ஏன்!திறமை மட்டுமா காரணம்!! இல்லை, தனித் திறமைதான் காரணமா!
இல்லை இல்லை! காலத்தை தெய்வமாகப் போற்றி, காலத்தைச் சரிவரப் பயன் படுத்தியதும்தான்!!

இந்த எனது சிறியக் கட்டுரை உங்கள் மனதை சிறிதாவது அசைக்குமானால் அதுவே உங்கள் வாழ்க்கையை வரலாறாக உயர்த்தும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு!!

முன்னுரை எழுதாதின் காரணமே அதை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்றுதான்!!

முடிவுரையாக சில கருத்துக்கள்!

நாமும் நமது நாடும் முன்னேற , வளம் பெற நம் நேரத்தை திறமையாக , முழுமையாகப் பயன் படுத்த வேண்டும்!! காலத்தை மதித்து நடத்துவதே இறைவனுக்கு செய்யும் திருத் தொண்டாகும்!!!

__________________________________________________________

(இதை எழுதியவர் ஒரு பள்ளி மாணவி )

ஒரு பள்ளி மாணவியிடம் இருந்து போட்டிக்கென வந்திருப்பதை பார்க்கையில் நம்பிக்கைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருக்கிறது.
இம்மகிழ்ச்சியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். நடுவர்கள் பெரும் மகிழ்வோடு இக்கட்டுரைக்கு மதிப்பெண் அளித்தார்கள்.

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கட்டுரை- 1

எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.,பி.எட்.,டி.ஏ.,

"பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு"

நம் பாரதநாடு பழம்பெரும் நாடு; ஆன்மீக வாழ்வை உலகிற்கு நல்கிய நாடு; உலக நாடுகளுக்கெல்லாம் திலகமாகத் திகழ, எதிர்கால இந்தியா சிறந்து விளங்கிட , நம் நினைவில் கொள்ளவேண்டிய சில கருத்துக்களை இங்கே காண்போம்.

கல்வித் திட்டம்:
ஒரு நாட்டின் பண்பை அறிவதற்கு, அந்நாடு முழுவதையும் ஒருவர் சுற்றிப்பார்க்க வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் கல்விக் கூடங்களைச் சென்று பார்த்தாலே போதுமானது என்பர். அந்த அளவிற்கு ஒரு நாட்டின் தன்மையை அறிய கல்வி ஓர் உரைகல்லாக அமைகிறது எனலாம்.

ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று அறிவியல் தொழில்நுட்பக் கல்வி முதன்மை பெற்றுத் திகழ்வது சிறப்புடைத்து. அதில் நாம் அடைந்து வரும் முன்னேற்றமும் உலகையே வியக்க வைக்கிறது என்று கூறினால் மிகையாகாது. தொழில் நுட்பத்தில் சிறப்படைய உதவும் நம் கல்வித் திட்டம் மனத்திட்பத்திற்கு போதிய வாய்ப்பளிக்க வில்லை என்பது வருந்தத் தக்கது. "சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்ற பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் "பயிற்றுப் பல கல்வி தந்து" இந்த பாரை உயர்த்திட உதவும் கல்வித்திட்டம் அமைய வேண்டும்.

கல்வியின் பயன்:
சுவர் இன்றி சித்திரம் இல்லை. மரமின்றி மலர்களும் கனிகளும் இல்லை. கல்வியறிவு இல்லையேல் எதுவும் இல்லை என்ற உணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

என்ற தெய்வப் புலவரின் கருத்தின்படி ஆன்மீகப் பயிற்சி இல்லாத கல்வி சிறந்த கல்வி ஆகாது. கல்வியானது மனிதனை பண்பட்டவனாக மாற்ற வேண்டும். பண்பற்ற கல்வி பயனற்ற கல்வியாகும். எத்தகைய சிறந்த அறிவைப் பெற்று இருப்பினும் மக்கட் பண்பு இல்லையெனில் அவர் பெற்ற அறிவால் யாதொரு பயனுமில்லை. அவர் மரத்திற்கு ஒப்பாவர் என்பது வள்ளுவர் கருத்து

"அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பு இல்லாதவர்."

அரசின் செயல்பாடு:

கேடில்லாத விழுமிய கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வண்ணம் அரசு திட்டங்களைத் தீட்டிச் செயலாக்கிட வேண்டும். சுவாசிக்கும் காற்றுக்கு , எப்படி எல்லார்க்கும் உரிமை உண்டோ , அங்ஙனம் தாங்கள் விரும்பிய வண்ணம் படிப்பதற்கு ஏற்ற வாய்ப்பைத் தருவது அரசின் கடமையாகும். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகின்ற ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளும் உயர்ந்த மேற்படிப்பு படிக்க அரசு போதுமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவரின் பாடலை இங்கு நினைத்தல் சாலச் சிறந்தது.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
ஒளிருவாள் அருஞ்சமர் நீக்கிக் களிறு எறிந்து
பெயர்தல் காளைக்குக் கடனே."

மேற்கண்ட பாடல்வரிகளில் மூன்றாவது வரி, அரசு செய்ய வேண்டியச் செயலை வலியுறுத்துகிறது. வேல்வடித்துக் கொடுப்பது என்பது மாணவர்களுக்கு தகுந்த படிப்பையும், வேலை வாய்ப்பையும் கொடுத்திட வேண்டும் என்ற கருத்தை தெளிவாக்குகிறது.

மாணாக்கரின் நிலை:
எப்படியும் வாழ்வதுதான் வாழ்க்கை என்றே எண்ணுபவன் பொறுப்பற்ற மனிதனாவான். இப்படித்தான் நாம் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் சமூகத்தில் உயர்ந்தோனாவான் என்பதற்கு ஏற்ப இன்றைய மாணாக்கர்கள் உழைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பே உயர்வுக்கு வழி. "பெருக்கத்து வேண்டும் பணிதல்!" என்பது போல வாழ்வில் உயர உயர பண்புடையவனாக திகழ்வான்.

"அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உனைச் சங்கமம் ஆக்கு
பிரிவிலை எங்கும் பேதமில்லை"

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை இன்றைய மாணாக்கர்கள் பொன் போல் போற்ற வேண்டும், செயலாற்ற வேண்டும்:.

ஒளிபடைத்த கண், உறுதி கொண்ட நெஞ்சு, களி படைத்த மொழி, கடுமை கொண்ட தோள், தெளிவுபெற்ற மதி, சிறுமை கொண்டு பொங்கும் நெறி, எளிமை கண்டு இரங்கும் மனம், ஏறுபோல் நடை ஆகியன பெற்று உலகில் பாரதத்தை தலை சிறந்த நாடாக, வளர்ந்த நல்லரசாக மாற்றிட வேண்டும் என்பதை இன்றைய மாணாக்கர்கள் தங்களின் வாழ்க்கை இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும்.

பயிற்று மொழி:
மொழி என்பது உள்ளக்கருத்துக்களை வெளியிட உதவும் அற்புதக் கருவியாகும். தாய்மொழி வாயிலாகவே கருத்துகள் உருப்பெற்று செயலாக்கம் பெறுகின்றன. வளர்ந்த மேலை நாடுகள் எல்லாம் தங்கள் தாய்மொழிவாயிலாகவே கல்வி பயின்று, சிறந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றுத் தலை சிறந்து விளங்குகின்றன. ஆனால் நம்நாட்டில் மட்டும் நிலமை தலைகீழாக இருக்கிறது. மேல்நிலைக் கல்வி(+2) வரை எல்லாப்பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும்.அதோடு மட்டுமல்லாது கல்லூரிக் கல்வியையும் தாய்மொழியில் பயிற்றுவிப்பதற்கு அறிஞர் பெருமக்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இப்படிக் கூறுவதால் ஆங்கிலம் வேண்டாம் என்பதில்லை. அதை நாம் உலகத் தொடர்பு மொழியாகக் கற்றுத் தெளிய வேண்டும்.

"அன்ன நடை கற்கப் போய் தன்நடையும் இழந்தாற்போல்" என்பது போல இன்றைய மாணாக்கர்கள் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் இரண்டுங் கெட்டான் நிலையில் இருக்கின்றனர். இந்நிலை மாற அரசும், பெறோர்களும் தாய்மொழிக் கல்விக்கு போதிய ஆக்கமும் ஊக்கமும் அளித்திடல் வேண்டும்.

ஆசிரியர்கள் நிலை:
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்." இறைவன் நிலைக்கு உயர்ந்து நிற்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் - குற்றமற்றவர் என்று பொருள். நல்ல மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்றென்றும் மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அதாவது படித்த கல்வி மட்டும் போதும் என்று கருதாது மறிவரும் நிலைக்கேற்ப மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அவர்தான் நல் ஆசிரியர். எதிர்கால இந்தியாவை நிர்மானிக்கும் சிற்பியாக இருக்கிறோம் என்று ஒவ்வொரு ஆசிரியர்களும் எண்ணிப் பார்த்து செயலாற்றிட வேண்டும். பாடற்கருத்துக்களை புதிய கோணத்தில் மாணவர்கள் சிந்திக்கும் வண்ணம் கற்பிக்க வேண்டும். சுருங்கக்கூறின் ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு சிற்ந்த நண்பர்களாக, வழிகாட்டிகளாக, ஒழுக்க சீலர்களாகத் திகழ வேண்டும்.

நிறைவுரை

என்னரும் பாரதத்தின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் , பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால், அன்பால், உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி பெற்று , இன்னுபுற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? அந்நாளே வாழ்வின் பொன்னாள் என்று கூறி என் கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்! வெல்க பாரதம்!

நம்பிக்கையோடு வாழ்வோம்!

Tuesday, June 20, 2006

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக்குரிய கவிதை - 2

வாழ்வியல் வேதம்! - இராகவன் (எ) சரவணன், பெங்களூர்
================

நம்பு தம்பி நம்பு!
முயன்றால் இயலாதது எதுவுமில்லை!!

வாழ்வியல் விதிகள் சில சொல்ல
விழைகிறேன்!

(1) ஆசைப்படு
------------------------
உலகில் உருவாக்கப்பட்ட
அத்துணை விஷயங்களுக்கும்
'ஆசைப்படுதல்' ஒன்று தான்
மூலிகை!!!

ஆசை மட்டுமே பட்டுக்
கொண்டிருந்தால் பூசை நடக்காது!

சோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி
முயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி
நம்பிக்கை என்னும் விளக்கு வைத்து
உழைப்பு என்னும் பூசை நடத்து!!

பூசையின் புனிதம் காக்கப்பட
அவ்வப்போது ஆசை என்னும்
எண்ணெய் ஊற்று!!
அது தான் உன்னை அடுத்தடுத்த
குறிக்கோள்களை அடைய வைக்கும்
ஆனந்த ஊற்று!!

வெற்றி என்னும் பிரசாதம் உன் கையில்!!

(2) கோபப்படு!!
---------------------
உன் சுயத்தை எது
எள்ளி நகையாடுகின்றதோ,
சுட்டெரிக்கிறதோ,
அங்கே நீ அக்கினியாய் மாறு.

நிதானத்தோடு கூடிய
கோபத்தீ உமிழ்! ஆனாலும்
உன் சுயம் உன்னால் அங்கே
காக்கப்பட வேண்டும் மறவாதே!

தன்மானம் இல்லாத மனிதன்
உயிரில்லா உடல்!
நீரில்லா மீன்!
காலில்லாச் செருப்பு!!!
வயிறில்லா உணவு!!
விக்கிரகமில்லாக் கர்ப்பக்கிரகம்!

பிரயோசனமில்லை எதற்கும்!!

(3) பொறாமை கொள்!!
-------------------------------
உடனொத்தவர்களின் திறமையை
மட்டும் உன்னிப்பாய்ப் பார்த்து
ஆரோக்கியமான முறையில்
பொறாமை கொள்.....

பொறாமையே உன்னை
அயர விடாது உழைக்க வைக்கும்
புனிதமான சஞ்சீவி!!

விளக்கிற்கும் திரிக்கும் சேதாரம்
விளைவிக்காத தூண்டுகுச்சியைப்
போலப் பொறாமையைக் கையாள்...

விளக்கு - நீ!
திரி - உன் திறமை!
ஒளி - உன் வளர்ச்சி!
பொறாமை - தூண்டுகோல்!!

பொறாமை ஒரு ஆகாரம்!
ஒவ்வொரு வேளையிலும் வேண்டும்!
ஒவ்வொரு வேலையிலும் வேண்டும்!

(4) அவமரியாதை செய் !
-----------------------------------
கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும்
வருகின்ற பின்னூட்டங்களைப்
புன்னகைப் பூக்களைப்
பரிசளித்து வாங்கு!!

ஏனெனில் உன்னையே
ஒழுங்காகச் செதுக்கிட
உதவும் கண்ணாடிகள் அவை!!

கண்ணாடிகள், பார்க்கும்
கண்களையே் கிழிக்குங்கால்
அவற்றை அகமகிழ்ந்து
அவமரியாதை செய்!!

தேவையில்லாமல் முடிவளர்த்துத்
தேம்பித் தேம்பி மொட்டை அடிப்பானேன்?
தலையே போன பிறகு
தலைப்பாகை எதற்கு?

(5) தட்டிப் பறி!!!
---------------------------
உரிமைகளை எக்கணமும்
நிரந்தரமாக யாரிடமும்
விட்டுவிடாதே!
விட்டுத் தராதே!!

அவையொன்றும் உன்னால்
மேற்பார்வையிட முடியாத அளவுக்குக்
கடினமானவையும் அல்ல!!
காரியதரிசிகள் கவனித்துக்
கொள்ளக் கூடிய செயலும் அல்ல!!!

தட்டிப் பறி!! எட்டிப் பிடி!!

முயற்சிகள் உடனே பயனளிக்காவிடில்
சற்றே விட்டுப் பிடி!!

சிங்கத்திற்குக் கர்ஜனை!
சூரியனுக்கு வெப்பம்!
குழந்தைக்கு மழலை!
பெண்மைக்குத் தாலி!!!

விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போகும்!
தன் நிலை கெட்டுப் போகும்!!


(6) எதிரிகளை வளர்த்துக் கொள்!!
-----------------------------------------------

உன்னைப் பற்றித் தவறுகள்
தெரிவிக்கப்பட்டால் தயங்காது கவனி!
உயர்வுக்கு வழிவகுப்பின்
தயைகூர்ந்து உட்புகுத்து!

அனைவருமே நண்பர்களாகிப் போனால்
என்றுமே ஒருவழிப் பாதை உன்னுடையது!

கீழே விழச்செய்யும் விசையின்
தரத்தைப் பொறுத்தே பந்து
மேலே எழும்பும் தோழா!

காயங்கள் வந்தால் மருந்தின் அருமை!
வெயில் வந்தால் நிழலின் மகிமை!
அரவு தீண்டினால் விஷமுறிவின் அருமை!
எதிரிகள் இருந்தால் வளர்ச்சியின் பெருமை!

அடித்துத் துவைக்காமல்
அழுக்கு அகலுமா?
கடித்துத் தின்னாமல்
கரும்பு இனிக்குமா?

என்றும் உன்னை எரிகின்ற
தீயாக வைக்க எதிரிகள் அவசியம்....!

(7) இழந்து பார்!!
--------------------------
வெற்றி வேண்டுமா?
வேட்கை இழந்திடு!!

நட்பு வேண்டுமா?
பிடிவாதம் இழந்திடு!!

தூக்கம் வேண்டுமா?
நினைவுச் சங்கிலி இழந்திடு!!

புதுப் பசி வேண்டுமா?
நேற்றைய உணவின் எச்சத்தை இழ!

ஆரோக்கியம் வேண்டுமா?
கவலை இழந்திடு!!!

வெற்றுச் சுதந்திரம் வேண்டுமா?
ஒழுக்கத்தை இழந்திடு!!
வெற்றிச் சுதந்திரம் வேண்டுமா?
வறட்டுக் கொள்கைகளை இழந்திடு!!!

சோர்வு வேண்டுமா?
சோம்பல் இழந்திடு!

தீர்வு வேண்டுமா?
விதண்டாவாதம் இழந்திடு!!

(8) வன்மம் கொள்!!
---------------------------
கண்ணெதிரே அநியாயம்!
கண்டிப்பாய்ப் பொறுமை இழ!!
புலன்களுக்கு மட்டுமல்ல உணர்ச்சி!
பிறர் நலன்களுக்கும் சேர்த்துத் தான்!

எங்கே முதுமை மிதிக்கப்படுகிறதோ
அங்கே உன் பொறுமையைப்
பொசுக்கிப் பொங்கி எழு!!

எங்கே தாய்மை தரந்தாழ்த்தப்படுகிறதோ,
எங்கோ பெண்மையின் புனிதம்
போற்றப்படவில்லையோ,
அங்கே நீ அகிம்சையின்
ஜென்ம விரோதியாகு!

தன்மானம் எங்கே தலைசாய்க்கப்படுகிறதோ
உன் தலைக்கனத்திற்குச் தயங்காது சூட்டு
ஒரு தங்கக்கிரீடம்!

இடித்தால் தான் இடிக்கு மதிப்பு!
கடித்தால் தான் தேளுக்கு மதிப்பு!
சுட்டால் தான் சூரியனுக்குச் சிறப்பு!
சினங்கொண்டால் தான் மனிதனுக்கு மதிப்பு!

உண்மைக்குப் புறம்பான
விஷயங்கள் உன்னைச் சுற்றி நடக்கையில்
உனக்கான ஒற்றை வரி வேதம்!!
"நீ கொண்ட மிகப்பெரிய பொறுமை
உன் வாழ்நாளில் முதல் பத்து மாதம்!"

காற்றைக் கிழித்துத் தான் பேசுகிறாய்!
தசைகளை இறுக்கித் தான் உண்ணுகிறாய்!

(9) காதல் செய்!
--------------------------
உண்மையாகவும் நேர்த்தியாகவும்
இருந்தால் மட்டுமே இனிக்கும்!

உன்னைப் பெற்றெடுத்த தெய்வங்களைப்
பேணிப் பாதுகாக்கும் பண்பின் மீது
பாரபட்சமில்லாது காதல் கொள்!!

உன்னை நேசிக்கும் ஒவ்வொரு
உயிருக்கும் பரிசுத்தமான பாசத்தைப்
பரிசளிக்கும் பாங்கின் மீது
பாகுபாடில்லது காதல் கொள்!!

தக்க தருணத்தில் செய்த
உதவிகளுக்கு உயிரின் கடைசிச் சொட்டு
ஊறும் வரை உண்மையான நன்றி காட்டும்
அந்த உயரிய பண்பின் மீது காதல் கொள்!

உன்னதமான நெறியில் நல்வழிப்படுத்தும்
ஆன்மிகத்தின் மீது ஆறாத காதல் கொள்!!

முடிந்தளவு சிறு சிறு உதவிகளைச் செய்ய
உன்னை ஒப்புக்கொடுக்க ஒத்துழைக்கும்
அந்த தன்னலமற்ற தன்மையின் மீது
தளர்வில்லாக் காதல் கொள்!!!

கொண்ட நம்பிக்கைகளைக் காப்பாற்ற
சில சமயங்களில் இழப்புக்களை ஏற்றுக்
கொள்ளும் அந்தத் தியாகத்தின் மீது
திடமான காதல் கொள்!!

(10) பொய் பேசு!
------------------------
திட்டவட்டமான வாழ்க்கையை விட்டுத்
எட்டிப் போகச் செய்யும் எந்தவொரு
கொள்கையிடமும் நீ அதற்கு இணங்க
முடியாதென்று முழுமூச்சோடு பொய்பேசு!

இழந்ததற்கெல்லாம் வருந்த மட்டுமே
வைக்கும் எண்ணங்களுக்கு நான் உங்கள்
அழுகுரலுக்குக் காது கொடேன் என்று
கண்ணியமாய்ப் பொய் பேசு!!!

நடைமுறைப் படுத்த முடியாத
சிந்தனைகள், ஊருக்கு மட்டுமே போதிக்கும்
உபாசனைகள், முகத்திரை அணிவிக்கும்
பாராட்டுக்கள் இவை அனைத்திற்கும்
இனி நான் இறங்கி வர மாட்டேன் என்று
இன்முகத்தோடு் பொய் பேசு!!!

உன்னால் முடிந்த நன்மைகளைச்
செய்ய விடாமல் தடுக்கும் கயமைகளுக்கு
நீ சுயநலவாதி என்று சூசகமாய்ப்
பொய் சொல்!!

கடமையைச் செய்யவிடாது தட்டிக்கழிக்க
வைக்கும் சோம்பேறி இயல்புகளிடம்
நான் தலைசாய்க்க மாட்டேன் என்று
தயங்காது பொய் சொல்!!

நன்றி!

நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கவிதை -1

வாயுதேவா! - டாக்டர். சுந்தர் பரத்வாஜ், கோவை
#
உள்ளும் புறமுமாகி
உருவமில்லா அருவமானாய்
உருகொண்ட உடலினிலே
உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!
#
ஒன்றுமுதல் மூவிரண்டு
அறிவு கொண்ட ஜீவனெல்லாம்
உயிரோடு இருப்பதெல்லாம்
உன் கருணை யாலன்றோ!
#
பிராணன் உதான னென்றும்
வியான சமான அபான னென்றும்
ஐம்புலன்களைப் போல்
ஐவகைப் பாகமாகி
#
ஜடமான உடம்பினிலே
நற்பணியைப் புரிகின்றாய்- நான்
எப்பேரால் வாழ்த்திடுவேன்
வாழ வைக்கும் வாயுதேவா!
#
தசரதனின் தலைமகனின்
தன்மையான தூதுவனை
தரணிக்கு நீ கொடுத்தாய்
வாயுதேவா வணங்கு கின்றோம்.
#
சுவாசிக்கும் முறை யறிந்து
கும்பகம் நாம் செய்து விட்டால்
குவலயம் நமை போற்றும்
குணசீலன் ஆகிடுவோம்
#
உன்னை உணர்பவன்
உண்மையை உணர்கின்றான்
மூவகை ஆசைகளை
முழுதுமாய் துறக்கின்றான்.
#
காற்றடக்கும் வித்தை கற்றால்
காலனும் அடிமை ஆவான்- சகல
சித்தியும் கைகூடும்
சித்தனாய் ஆகிடுவான்!
#
சஞ்சீவி மலை பெயர்த்த
சிரஞ்சீவி சுந்தரனும்
வாயுவின் கருணையாலோ
வான கத்திலே பறந்தான்.
#
காற்றிலும் இரண்டு வகை
கண்டிடுவீர் அன்பர்களே! -அது
தென்றலாய் வருடும் சைவம்
புயலாய் மிரட்டும் அசைவம்!
#
பூமாரி பொழிந்திடவே
பூமியில் நீர் எடுத்து
மேகத்தில் சேர்ப்பதினால்
காற்றுக்கு கைகள் உண்டோ?
#
காற்றுக் குழல் பெற்றெடுக்கும்
குழந்தையே குரல் என்பர்
காற்றினால் மேகம் சிந்தும்
நீர் துளியைச் சாரல் என்பர்!
#
இசையென்னும் இனிமைக்கும்
ஓங்கார ஓசைக்கும்
ஆதாரம் ஆனவனே- உன்
அடியாரைக் காத்தருள்வாய்!
#
காற்று இருப்பதால் தான்
காது கூட கேட்கிறது
கேட்கும் ஒலி எல்லாம்
காற்றன்றோ படைக்கிறது.
#
வாகனங்கள் விடும் புகைதான்
கலியுகத்தின் அரக்கன் ஆவான்
காற்றினை கெடுத்திடுவான்
காலனை அழைத்திடுவான்
#
பசுமை மரம் வளர்த்து - காற்றை
பரிசுத்தம் ஆக்கிடுவோம்!
மாசற்ற மனித குலம்
தழைத்திடவே உதவிடுவோம்!
#
காற்றும் கடவுளும்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்மூடி ஜெபித்திட்டால்
உண்மைதனை உணர்ந்திடுவோம்!
#
காற்றையும் உணர்ந் திடலாம்
கடவுளையும் உணர்ந் திடலாம்
இரண்டிற்கும் உருவ மில்லை
இன்பம் துன்பம் எதுவுமில்லை!
#
காற் றென்பர்
கடவுள் என்பர்
காற்றே கடவுளாதல்
ஆரும் அறிகிலார்!
#
காற்றே கடவுள் என்று
உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே
காற்றையே கடவுளாய்
தியானிப்பார் நலன் பெறுவார்!

நன்றி!

நம்பிக்கையின் பொற்காசு பரிசுக் கதை - 2

உயர்வுள்ளல் - இரவீந்தரன் கிருஷ்ணசாமி

அண்ணா பன்னாட்டு விமான நிலையம். சீரான ஓடுதளம். அதிகாலை சூரிய ஒளிபட்டு பனித்துளிகள் வானவில்லை பிறப்பித்துக் கொண்டிருந்தன. பரபரப்பான முகங்கள். அனைவரும் அவரவர் அலுவல்களில் பிஸியாகியிருந்தனர்.

பிரவீன் விமானநிலைய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு ஹாயாக சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரம்
அவகாசமிருந்தது. டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவில் தன்னை சிறந்த மென்பொருள் (டிகூஎம்) எனத் தேர்ந்தெடுத்து கௌரவிப்பதற்காக அழைத்திருந்தனர். கண்களை மூடிக்கொண்டான்.

மனதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது, ஒருவனின் வெற்றியும் தோல்வியும் உட்பட. தன்னுடைய நிறுவனம் உலகிலேயே மென்பொருள் தரத்தில் முதலிடம் வகிப்பதாக ஜப்பான் நாட்டினர் தேர்ந்தெடுக்க மூலகாரணமே 'ஜேகே'தான். அன்று மட்டும் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிசெய்தபொழுது அவர் மட்டும் தன்னை பணிநீக்கம் செய்யாமலிருந்தால்...? இந்த ஐந்தாண்டுகளில் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு ப்ராஜக்ட் மானேஜராக உயர்ந்திருப்பேன். அவ்வளவே! அந்த நிகழ்வு திரைப்படமாய் மனத்திரையில் ஓடியது.

அந்த பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் குழுவின் முதுநிலை மேலாளார்
ஜேகே ஆட்குறைப்புப் பட்டியலுள்ள பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார். அனைவரின் முகத்திலும் பதற்றம், ப்ரவீனைத் தவிர. தன்னுடைய பெயர் அப்பட்டியலில் இருக்கக்கூடாதென எல்லாக் கடவுள்களையும் பணியாளர்கள் வேண்டிகொண்டனர்.

இறுதியில் "ப்ரவீன்" என்ற பெயரும் வாசிக்கப்பட்டது.

இது மிகப் பெரிய அதிர்ச்சி! யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரவீன் ஒரு கடின உழைப்பாளி. இதற்கு முன்னால் நிறுவனத்திற்காக நிறைய சாதித்திருக்கிறான். தன்னுடைய திறமைகளை நன்கு வெளிப்படுத்தியவன். ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் தென்னிந்திய கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது தன்னுடைய குழுவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி மிகக் குறுகிய காலத்தில் பணியை முடித்தவன். தலைமை அலுவலகத்தின் எவ்வித உதவியும் இல்லாமல் எல்லா பிரச்சினைகளையும் தனி ஒருவனாகவே நின்று சமாளித்து நிறுவனத்திற்கும், முதுநிலை மேளாலர் 'ஜேகே' விற்கும் எவ்வித தலைவலியும் தராமல் வெற்றிகரமாக ப்ராஜக்ட்டை முடித்தவன். அவ்வங்கியின் வட்டார மேளாலரே மனதார வாழ்த்தியவர். ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வாழ்த்துப் பெறுவது என்பது மிகப் பெரிய விஷயம், இத்துறையில். இப்படி பெயரும் புகழும் சம்பாதித்தவனிற்கா பணிநீக்கம்...? மம்சாபுரம் வங்கிக்கிளையிலேயே நல்ல பெயர் வங்கியவனிற்க பணி நீக்கம்...?

நியாய தர்மங்கள் தோற்றுவிட்டனவா...? இதில் ஏதோ சூது நடந்திருக்க
வேண்டும்.பிரவீனால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

மனிதவள மேளாலர் கமலேஷ் குமர்ரை சந்தித்தான்.

"இப்பொழுது நம் கம்பனி மிகப்பெரிய நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நம் பணியாளர்களை லே ஆஃப் செய்கிறோம். ப்ளீஷ் சைன் ஹியர்..."

"என் பெயர் எப்படியோ இந்த படிவத்தில் தவறுதலாக வந்திருக்க்வேண்டும்..."

"இல்லை. உன் டிபார்ட்மெண்ட்லிருந்துதான் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்...."
"யார்...?"

"உன் சீனியர் மானேஜர் சுந்தரராமன்...."

சப்த நாடிகளும் ப்ரவீனுக்கு அடங்கிவிட்டது. முதுகில் குத்திவிட்டனரே...!
"டீ ப்ரேக்கில் கூட ஜேகேயும் சுந்தரராமனும் சிரித்து சிரித்துப் பேசினார்களே...."

இனியென்ன இருக்கிறது இவ்வுலகில்...? எல்லோருமே நம்பிக்கை
துரோகிகள்...ப்ரவீன் தன்னுடைய கிரமத்திற்குச் சென்றான்.

பழங்கால பரந்த வீடு. கோபால்சாமி தாத்தா வயல்காட்டிற்குக்
கிளம்பிக் கொண்டிருந்தார். நீண்ட வெண்ணிற தாடி. தும்பைப் பூ சலவை வேட்டி சட்டை. கதர்த்துண்டு. முகத்தில் ஒரு ஞானியின் பிரம்ம தேஜஸ். புருவ மத்தியில் சின்னதாய் வட்ட வடிவில் குங்குமம். இந்த 102 வயதிலும் திடகாத்திரமான நோய் நொடியில்லாத உடல். தீட்சண்யமான கண்கள். பழம்பெரும் சுதிந்திரப்போராட்ட வீரர். காந்தித்தாத்தாவும், வினோபாவும் இவருடைய ஆத்மார்த்தமான நண்பர்கள். அவர்கள் இந்த வீட்டிற்கு வருகை செய்த பெருமையுண்டு. ஊரே இக்குடும்பத்தின் மீது ஒரு மதிப்பு கல்ந்த மரியாதை வைத்திருந்தது.

பிரவீன் மனம் உடைந்து போனான். சோர்வாகக் காணப்பட்டான்.
வீட்டில் அனைவரிடமும் தனக்கு நேர்ந்த அநீதியைச் சொல்லி
கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கோபால்சாமித் தாத்தா, பேரன் பிரவீனை
தன்னிடம் அழைத்தார்.

'என்ன பிரச்சினை...?"

விளக்கினான்.

தாத்தா அவனை தீர்க்கமாய் உற்று நோக்கினார்.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எல்லாம் நன்மைக்கே...."

தன்னுடன் அழைத்துச் சென்றார்.

"என்ன தாத்தா நான் சீரியசாக பேசுகிறேன். நீங்கள் தத்துவம்
பேசுகிறீகளே... உங்களுக்கி இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தால்
தெரியும்...." தாத்தாவின் மீது கோபம் படர்ந்த்தது.

"யோசி...உன்னை பணி நீக்கம் பண்ணியதும் நன்மைக்கே. ஒருவனது
எண்ணங்களுக்கும் அவனது சூழ்நிலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வாழ்க்கைச் சம்பங்கள் அக்காலகட்டத்திற்கு அவனது வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன..."

இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி, 'ஆண்டவனின் ஒவ்வொரு செயலிலும் ஒரு செய்தி இருக்கும். அதில் ஆயிரம் உட்பொருட்களடங்கியிருக்கும்.

யோசி...யோசி....'

என்ன யோசிக்க...? முதுகில் குத்தியதையா...? துதிபாடிகள் அங்கே
கோலோச்சுவதையா...? மேல்மட்டப் பதவியிலிருப்பவர்கள் உண்டு
கொழுப்பதையா...?எல்லாவற்றிற்கும் மேலாக சேர்மன் எப்பொழுது சுகமான நித்திரையிலிருந்து கண்விழிப்பார் என்பதையா...?

இவனது மன ஓட்டங்களைப் புரிந்துகொண்ட தாத்தா தொடர்ந்தார்.
'ஓடு உடைபட்டால்தான் குஞ்சு வெளிவரமுடியும். தொப்புள் கொடி
அறுந்தால்தான் குழந்தை தன்னிச்சையாக் சுவாசிக்க முடியும்...'

'...........'

'இதெல்லாம் ஏன் நடக்கவேண்டும்...?'

பிரவீன் யோசித்தான்.

அடுத்து என்ன...? அடுத்த கட்ட வளர்ச்சி...? என்ன செய்வது...? என்ன
தீமானிப்பது...? எப்பொழுது ஆரம்பிப்பது...? எப்படி செயல்படுத்துவது...?

'யோசி...யோசி....உனக்குள்ளே விடை உள்ளது...'

'எனக்குள்ளேயா...?'

தாத்தா தரையில் அமர்ந்தார். தன் கைவிரலால் மணலில் ஒரு கோடு கிழித்தார்.

'இந்தக் கோட்டைத்தானே நீ மிகப்பெரிய பிரச்சினையாக கருதுகிறாய்...?
இதைத்தானே உன் வாழ்வி மிகப்பெரிய தடையாக எண்ணி கலங்குகிறாய்...?'

அதற்கு இணையாக அதைவிட ஒரு மிகப்பெரிய கோட்டைக்கிழித்துவிட்டு தீர்க்கமாய் பிரவீனைப் பார்த்தார்.

'உன் பிரச்சினைகளைவிட உன் பலமும் திறமையும் பெரிது என்று நீ
நம்பினால்....நீ எதிர்பார்த்ததைவிட பல மடங்காய் உயரலாம்....'


அவனுள் பொறி தட்டியது.

அப்படியானால் நான் ஏன் ஒரு ஜீ.எம். ஆக உயரக்கூடாது...?

தாத்தா அவனின் உள் மன உணர்வுகளை உணர்ந்தார்.

'யானை தன் பலத்தை உணர்ந்தால் பிச்சை எடுக்குமா...?'

'இதெல்லாம் சாத்தியமா தாத்தா...? என்னால் முடியுமா..?'

'ஏன்...?'

'ஜீ.எம். ஆக எனக்கு முன் அனுபவம் இல்லையே தாத்தா...? எனக்கு

நம்பிக்கை இல்லை....'

'பி.டி.உஷா தெரியுமா...?'

'ம்..'

'அவருக்கும் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபொழுது ஓடிய அனுபவம் இல்லை.

எப்படி சாத்தியமாச்சி...? 'ஒருவன் தான் எண்ணியதை மறவாத நினைப்புடன்
தொடர்ந்து முயல்வானானால், அவன் எண்ணியவண்ணமே அதை அடைதல் எளிது'னு வள்ளுவர் சொல்றார்...'

உற்சாகமாய் சென்னை திரும்பினான். விண்ணப்பித்தான். ஜீ.எம்.முக்குரிய முன் அனுபவம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டான். சுவற்றில் அடிபட்ட பந்தாய் தாத்தாவிடம் திரும்பினான்.

'இதுவும் நன்மைக்கே....' சிரித்தார்.

'யோசி...யோசி...யோசனையில்தான் செயல்களின் விதைகள்
அடங்கியுள்ளது....வாழ்க்கையில் ஒரு கதவு மூடும்பொழுது இன்னொரு கதவு திறக்கப்படுகிறது. நாம் நமக்காகத் திறக்கப்பட்டக் கதவை கவனியாது மூடிய கதவையே உற்று நோக்குகிறோம்....'

'அந்த திறக்கப்பட்ட கதவு எது...?'

'நீ ஏன் ஒரு ஜீ.எம்.முக்கு வேலை கொடுக்கக்கூடாது...?'

'நான் எ.. ப்..படி...?'

மெல்ல புரிய வந்தது.

'அதற்கு வாய்ப்பு...?'

'அதோ அந்த கொக்கு மீன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறது...? பாம்பு எப்படித்
தவளையைக் கண்டுபிடிக்கிறது....? தேவைகளின் அடிப்படையில்தானே...?'

'ஓ...!' பிரகாசமானான் பிரவீன். தெளிவானான். உற்சாகமாய் சென்னை
கிளம்பினான். ஏற்கெனவே இவன் அந்த அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் கிளைகளை கணணிமயமாக்கப்பட்டபொழுது அதன் வட்டார மேலாளர் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். சந்தித்து உரையாடினான். கடன் கிடைத்தது. 'ஷ்ரப்டிக்' என்று ஒரு மென்பொருள் நிறுவனம் துவங்கி டோக்கியோவில் விருது வாங்குமளவிற்கு வளர்ந்தாகிவிட்டது. எல்லாம் மனதில்தான் உள்ளது.

டோக்கியோவில் விருது வாங்கியதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். சென்னை திரும்பியாயிற்று. ஆனாலும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. மனதில் ஒரு நிம்மதியின்மை. மீண்டும் தாத்தாவைச் சந்தித்தான்.

'பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பல் கவர்ச்சி, உயர்வு
தாழ்வு மனப்பான்மை.. இந்த ஆறில் ஏதோ ஒன்றோ அல்லது பலவோ காரணமாயிருக்கும். இந்த அறு தீய குணங்களையும் வெளியேற்று... எது என்று, எப்படி என்று யோசி....'

என்ன அது...? ஏன்...? எப்படி...? விருது வாங்கியும் மனதில் நிம்மதியும்
சந்தோசமும் இல்லையே ஏன்...?

'எப்படி இந்த உயர்ந்த நிலையை அடைந்தாய்...?'

'படிப்படியாய் உழைத்து முன்னேறி...'

'அப்படியானால் இதற்கு முன்னால் நீ உழைக்கவில்லையா...? மூலம் எது...?'

பணி நீக்கம்...

யாரால்...? ஏன்...? எதனால்...?

ஜேகே....

ஆக ஒன்று புரிகிறது. ஜேகே இன்னமும் அடி மனதில் ஒரு மூலையில் இருக்கின்றார். இருக்கட்டும். நல்லதுதானே...? அதனால்தானே முன்னேறினேன்....?'


'அப்படியானால் உன்னை வேறு யாரோ ஆட்டுவிக்கின்றனர்....உன் கண்ட்ரோல் உன்னிடம் இல்லை...?'

'.......!?'

எது...? எது...? வஞ்சம்தான் என் முன்னேற்ர்த்திற்குக் காரணமா...? என்ன
செய்யலாம்...? என்ன பரிகாரம்...? வஞ்சம் ஏன் வருகிறது...? பழியுணர்ச்சி
மனதில் தேக்கப்படும்பொழுது...! அந்த எண்ணத்தை எப்படி மனதிலிருந்து
எடுப்பது...?

'மன்னித்து விடு...மனதார மன்னித்துவிடு...எதிரியையும் நேசி...'

ஜேகே அந்தப் பன்னாட்டு நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டது. பிரவீன் பழங்களுடன் ஜேகே வீட்டிற்குச் சென்றான்.

ஜேகேவிற்குப் பேரதிர்ச்சி..! இருவரும் மனம் விட்டுப்பேசினர். தன்
நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்ற முடியும...? என்று கேட்டான்.

ஜேகேயின் கண்களில் குளம் குளமாய் நீர் வழிந்தோடியது. இப்பொழுது
இருவருக்குமே மனம் இலேசாகியிருந்தது.

நம்பிக்கையின் பொற்காசு பரிசு பெற்ற கதை - 1

மஹா சக்தி - நிலா

'ஆண்டவா, எனக்கு முன்னாலே என் புள்ளய கூப்டுக்கோ... இதுக்கு மேலயும் அவன் கஷ்டப்படக் கூடாது' கோமதி டீச்சர் மனமுருகி தனது வழக்கமான கோரிக்கையை இறைவனிடம் வைத்தாள்.

அன்றைக்கு உடம்பு அசதியாக இருந்ததில் மனசும் பலவீனப்பட்டிருந்தது. 32 வயசுப் பிள்ளை தனக்கு முன் இறந்து விட வேண்டும் என்று பிரார்த்திப்பதில் ஒரு வித குற்ற உணர்வும் அப்படி பிரார்த்திக்கச் செய்துவிட்ட விதியின் மேல் கோபமும் தன் நிலைமையை எண்ணி சுய பச்சாதாபமுமாய் கண்ணில் நீர் கட்டியது.



சேகர் எப்படி இருந்திருக்க வேண்டிய பிள்ளை! எல்லாம் ஒழுங்காய் நடந்திருந்தால் ரோஷினியைக் கைப்பிடித்து சுவிட்சர்லாந்தில் குழந்தை குட்டியோடு செட்டில் ஆகி இருந்திருப்பான்... கல்யாணத்துக்கு 2 வாரம் முன்னர் பாழாய்ப்போன லாரிக்காரன் பைக்கில் போய்க்கொண்டிருந்த பிள்ளையை இடித்துவிட்டுப் போய்விட அவன் வாழ்க்கை இப்படி

அப்பளமாய் நொறுங்கிப்போனது.

பைக்கிலிருந்து விழுந்ததில் முதுகுத் தண்டில் பட்ட அடியைவிட ஏடாகூடமாய் அவனை ஆட்டோவில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதில்தான் அதிக சேதம் என்றனர் மருத்துவர்கள். கழுத்துக்குக் கீழ் உணர்வே இல்லாத நிலையில் இனி வாழ்க்கையில் அவன்

நடப்பது சாத்தியமில்லை என்று அதிகம் உணர்ச்சியில்லாத முகத்தோடு அவர்கள் சொன்னதை என்று நினைத்தாலும் உயிரில் மின்னல் தாக்கியது போன்ற நடுக்கம் ஓடும் கோமதிக்கு.

இரண்டு வாரத்தில் திருமணம், நாலு வாரத்தில் சுவிட்சர்லாந்து வேலை என்பதெல்லாம் எட்டமுடியாத கானலாயிற்று. அடுத்தவர் உதவி இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் போனதில் சேகரை விட அதிகம் துவண்டு போனது கோமதிதான். சேகருக்குப் பத்துவயதாகும்

போது கணவரைப் பறிகொடுத்தபின் கோமதியின் உயிர் மூச்சே அவன்தானென்றாகி இருந்தது.

அந்தப் பிள்ளை நடைப் பிணமாய்ப் போய்விட்ட பிறகு வாழ்க்கையில் என்ன இருக்கிறது?

சேகருக்கும் அது பேரதிர்ச்சிதான். முதலிரண்டு மாதங்கள் நரகத்தில்தான் மீதி வாழ்க்கை என்ற பயமும் திகிலும் ஆட்டிப் படைக்கத்தான் செய்தன. என்றாலும் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே மனதால் மீண்டு வந்தான். அசாத்திய உறுதியோடு தன்னையும் தேற்றிக் கொண்டு அன்னைக்கும் ஆறுதல் சொல்லுமளவு அவன் முன்னேறியிருந்தது மருத்துவர்களுக்கே பெருவியப்பாய்தான் இருந்தது. இத்தனை கஷ்டத்திலும் அவன் வேலை செய்த நிறுவனம் கை கொடுத்ததில் பணம் பற்றிய கவலை இல்லாமல் சிகிச்சையில் அவனால் முழுக்கவனம் செலுத்த முடிந்தது ஒரு பெரிய வரம்தான். 'இந்தப் பிள்ளைக்கு எவ்வளவு மனபலம்' என கோமதியே பல சமயங்களில் வியந்திருக்கிறாள். இல்லை என்றால் மருத்துவர்களால் சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் சாத்தியப்படுத்திக் கொண்டு வருவானா?

இப்போது ஒரு மூன்று மாதமாய் விரல்களில் அசைவு வந்திருக்கிறது - புத்தகத்தைப் புரட்டிப் படிக்க முடிகிற அளவுக்கு. உடம்பிலும் உணர்ச்சி வந்திருப்பதாய் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் இதெல்லாம் போதுமா? இன்னும் ஒரு வயசுக் குழந்தை போல எல்லாக் காரியத்தையும் தாய் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் தன் பிள்ளை தனக்கு திடீரென்று ஏதாவதொன்று ஆகிவிட்டால் என்ன செய்வான் என்கிற அச்சம் கோமதியை ஒவ்வொரு நொடியும் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது. அப்படியே ஒன்றும் ஆகாவிட்டாலும் அதிகபட்சமாய் தான் வாழப்போகும் இருபது ஆண்டுகளுக்குப் பின் அவனுக்கு வேறு கதியில்லை என்ற நிதர்சனமும் அவளைத் துளித்துளியாய் இப்போதே கொல்ல ஆரம்பித்துவிட்டது.

விபூதியைக் கையில் எடுத்துக் கொண்டு சேகரின் அறைக்குள் நுழைந்தவளின் கண்ணில் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்த வளர்மதி பட்டாள். அவளைக் கண்டதும் கோமதிக்குத் தன்னையறியாமல் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. 'இவளும் இவள் மூஞ்சியும்... இப்படி

இருக்கும் போதே மகாராணி போல நடந்துக்குது சனியன்... இதெல்லாம் கொஞ்சம் அழகா பொறந்து தொலைச்சிருந்துதுன்னா...'

வளர்மதி ஒரு பெரிய புதிர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் கோமதிக்குக் கோபமெல்லாம் அவள் வேலைக்காரியாய் நடந்து கொள்ளாமல் வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைக்கிறாள் என்பதுதான்.

அனிச்சையாய்க் குனிந்து கட்டிலின் கீழ் பார்த்தவளுக்கு ஆத்திரம் குப்பெனக் கிளம்பியது.

"கட்டிலுக்குக் கீழே குனிஞ்சு பெருக்க ஒடம்பு வளைய மாட்டங்குதா உனக்கு... மரமண்டையா?

எத்தனை தடவை சொன்னாலும் புரியாது?" பலவீனமான இடம் பார்த்து கோமதியின் மனசுக்குள்ளிருந்த அக்கினிக் குழம்பு வெடித்துக் கொப்புளித்தது.

வளர்மதி கவலைப்படாமல், "இந்தா பெருக்குதேன்" என்றபடியே கட்டிலுக்கடியில் சென்று பெருக்கினாள்.

"ஆமா, இப்பிடி தொண்டத் தண்ணி வத்த கத்தறதுக்கு நானே பெருக்கிறலாம். காசுக்குப் பிடிச்ச தண்டம்" என்றாள் கோமதி விபூதியை சேகரின் நெற்றியில் இட்டபடியே...

"இப்ப எதுக்கு இப்பிடி டென்சனாகுதீக டீச்சர்? அதாம் பெருக்கிட்டேம்ல" என்று வளர்மதி சற்றே குரலுயர்த்தியதும் கோமதி சட்டென அடங்கிவிட்டாள்

ஆனாலும் வேலைக்காரி தன்னிடம் குரலுயர்த்திப் பேசுகிறாளே என்ற ஆதங்கத்தில், "இந்தத்

திமிருனாலதான இப்பிடி வாழாவெட்டியாக் கெடக்க" என்று தாழ்ந்த குரலில் முணுமுணுத்தபடியே வெளியேறினாள் கோமதி. எங்கே அவளுக்குக் கேட்கிறபடி சொல்லிவிட்டால் வேலையிலிருந்து நின்று விடுவாளோ என்ற பயம்! கிராமத்தில் சிறு தொழில்கள் வந்தபின் வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது சுலபமா என்ன?

சேகருக்கு வளர்மதியை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமும் சேர்ந்தே கிளம்பும். வளர் அவனோடு 8வது வரை படித்தவள்தான். வயசுக்கு வந்ததும் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் மூன்று வருடத்தில் தனியாளாய் அவள் திரும்பி வந்த கதை அந்த ஜில்லாவெல்லாம் பிரபலம். குடித்துவிட்டுக் கணவன் அடித்ததில் தனது 2 வயதுக் குழந்தை இறந்து போக, போலீசில் புகார் செய்துவிட்டு பிறந்த ஊருக்குத் திரும்பிய அவளை அந்த கிராமம் ரசிக்கவில்லை.

"ஏதோ நடந்தது நடந்து போச்சு. அதுக்குப் போய் புருசன போலீசுல புடிச்சுக் குடுத்தான்னா இவ

என்ன பொம்பள?"

"பொம்பளைன்னா அடக்கம் வேணும். இப்பிடிச் செய்யத் துணிஞ்சவ வேற என்னென்ன

செய்தாளோ? புருசன் அடிக்காம என்ன செய்வான்?"

இது போல ஏகப்பட்ட விமரிசனங்கள்.

"கட்டிக் குடுத்தாச்சு. கஸ்டமோ நஸ்டமோ இனிம நீ அங்கதான் எல்லாத்தையும்

பாத்துக்கிடணும்." என்று அந்தப் பதினேழு வயதுப் பெண்ணிடம் கல்மனசாய் சொந்தங்கள்

சொல்லிவிட, வளர் அதற்கெல்லாம் மசிந்து கணவனிடம் திரும்பிவிடவில்லை.

"இந்தாருங்க... கொஞ்ச நஞ்ச அடியா வாங்கிருக்கேன்? புள்ளைக்காகத்தேன் எல்லாத்தையும்

பொறுத்துக்கிட்டிருந்தேன். அவனையும் கொன்னுப்புட்டான் அந்தப் படுபாவி. அவங்கிட்ட நான்

திரும்பப் போமாட்டேன். என் வயித்தக் கழுவிக்கதுக்கு எனக்கு முடியும். கஞ்சிக்குன்னு உங்க

வாசல் வந்து நிக்க மாட்டேன்" என்று வீராப்பாயச் சொன்னதைச் செயலிலும் காட்டிவிட்டாள்

வீட்டு வேலை செய்ய ஆரம்பித்து இப்போது பெரிய கடைக்கு சொந்தக்காரியாகிவிட்டதாகச்

சொல்கிறார்கள். ஆனாலும் இன்னும் உறவு என்று அவளை யாரும் கொண்டாட மாட்டார்கள்;

ஊரில் விசேஷங்களுக்குக் கூப்பிட மாட்டார்கள்; பெற்றோர்கள் நினைத்திருந்தால் இந்தப்

பதினைந்து வருடத்தில் ஒரு மறுதிருமணம் செய்து வைத்திருக்கலாம்... பாவம்...

அவன் எண்ண ஓட்டத்தை இழுத்து நிறுத்தியது வளரின் குரல்.

"என்ன சேகரு, டீச்சர் வைதுட்டுப் போனத நெனச்சு பரிதாபப்பட்டுக்கிட்டிருக்கியாக்கும்?" குரலில் லேசான பரிகாசம்

"ம்... இல்லையே" சமாளிக்க முயன்ற சேகரின் முயற்சி ஜெயமாகவில்லை.

"ம்க்கும்... நீ ஐயோ பாவம்னு நெனக்கறதுதான் அப்படியே மூஞ்சில தெரியுதே." என்றவள்

தொடர்ந்து கண்டிப்பான குரலில், "என்னப் பாத்து பரிதாபப்படாத சேகரு. எனக்கு அது புடிக்காது" என்றாள்

அவளின் அந்த சுயமரியாதை அவனுக்குப் பிடித்திருந்தது. இன்னும் தனக்கு இந்தப் பக்குவம்

வரவில்லையே என்று தோன்ற சேகர் புன்னகைத்துக் கொண்டான்...

"ஏன் சேகரு, நீ கம்ப்யூட்டர் வேலதான பாத்த?"

"ம்"

"ஒரு கம்ப்யூட்டர் வாங்கியாரேன். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு ட்யூசன் எடுக்கிறியா?"

அவள் கேட்டது அங்கு வந்த கோமதி காதில் விழ, "ஏண்டி என் புள்ளைய பாத்தா உனக்கு

எப்படி இருக்கு? நீ அவனுக்கு மொதலாளி ஆகணும்னு பாக்கியாக்கும்?" என்றாள் நறுக்கென்று.

வளர் பதிலொன்றும் சொல்லாமல் சேகரிடம் அர்த்தமுள்ள பார்வையொன்றை வீசிவிட்டு அடுத்த அறையைச் சுத்தம் செய்யப் போய்விட்டாள். கையிலிருந்த காபியை சேகரிடம் கொடுத்துவிட்டு கோமதி அரற்ற ஆரம்பித்தாள்:

"நம்ம தாத்தாவுக்குத் தாத்தா காலத்திலருந்தே இந்த வளரோட குடும்பம் நம்ம வயல்ல வேலை செஞ்சதுதான். இன்னைக்கு என்னமோ கொஞ்சம் சூட்டிகையா கையில பணம் சேத்துட்டதும் நமக்கே மொதலாளி ஆகணும்னு நெனக்குது பாரு. ஆண்டவன் ஆட்டுக்கு வாலை அளந்துதான் வச்சிருக்கான்னு சும்மாவா சொல்றாங்க?"

"நிறையா பணம் வச்சிருந்தா ஏம்மா அவ வீட்டு வேலைக்கு வர்றா?"

"ம்... யாருக்குத் தெரியும்? நம்ம குடுக்கற இருநூத்தம்பதையும் ஏன் விடணும்னு நெனக்கிறா

போல. இப்பிடி பேய் கணக்கா பணம் சேத்து ஒத்தையா என்னதான் செய்யப் போறாளோ!"

"எட்டாவதுதான் படிச்சிருக்கா... பின் எப்படி..." அவளின் வெற்றியின் ரகசியம் அறியும்

ஆர்வத்தில் சேகர் ஆரம்பிக்க அவன் முடிக்குமுன் கோமதி, "அதான் தம்பி தெரியலை. என்ன

மாயம்தான் செய்றாள்னு... டவுனுக்கு அடிக்கடி போறா... யாருக்கென்ன தெரியும் என்ன

நடக்குதுன்னு" என்று வயிற்றெரிச்சலோடு சொன்னவள், "ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது.

அவளுக்குச் சொல்லிக் குடுக்கவன் பெரிய ஆளாத்தான் இருக்கணும் - என்ன ஆரம்பிச்சா நம்ம ஊருல எடுபடும்னு தெரிஞ்ச மாதிரிதான் ஆரம்பிக்கிறா... ஒரு பத்து பன்னெண்டு வருசம்

முன்னால மொதல்ல ஒரு சின்ன பெட்டிக்கடைதான் தொறந்தா... ரெண்டு நாள் முன்னால

அந்தப்பக்கம் போம்போது பாக்கேன் அந்த எடத்தில மாடி கட்டடம் கட்டி ஃபேன்சி ஸ்டோர்,

டெலிபோன் பூத், ஐஸ்க்ரீம் பார்லர்னு ஒரு நாலஞ்சு கடை இருக்கு. பத்து பன்னெண்டு பேரு

அவகிட்ட வேலைக்கிருக்காங்கன்னு ராமசாமி வாத்தியார் சொன்னாரு. பக்கத்து ஊர்லருந்தெல்லாம் இவ கடைக்கு வாராங்களாம்... ஹூம்... ஒழுங்கா படிக்காத அந்தக் கழுதைக்கு தலைல அப்படி எழுதியிருக்கு. நல்லாப் படிச்ச பையன் நீ... உனக்கு எப்படி எழுதிருக்கு பாரு... அசையக் கூட முடியாம கெடக்கற... போன ஜென்மத்தில நம்ம ஏதோ பாவம் செஞ்சிருக்கோம் போலருக்கு. எப்பப் பாத்தாலும் கஷ்டத்தையே பாத்தா வாழ்க்கையே
வெறுத்துப் போகுதில்ல" என்று ஆழ்ந்த பெருமூச்சோடு முடித்தாள்

சில நாட்களாய் எங்கே ஆரம்பித்தாலும் இந்தப் புலம்பலில்தான் முடிக்கிறாள் கோமதி. சேகர் என்னதான் முயன்றாலும் அம்மாவின் அயர்ச்சியில் மனது சுணங்கிப் போவதைத் தவிர்க்க

முடியவில்லை. அதிலும் கோமதி சமீபத்தில் அதிகமாய்ப் புலம்ப ஆரம்பித்து விட்டதில் அவளுக்குத் தான் பாரமாய் இருக்கிறோம் என்ற எண்ணம் அவனுக்கு வலுப் பெற்றுக் கொண்டே வந்தது. அந்த விபத்தில் இறந்திருந்தால் எவ்வளவோ நலமாய் இருந்திருக்கும் என்ற பழைய எண்ணம் அடிக்கடி தலைகாட்டிக் கொண்டுதானிருக்கிறது. தாய் தனக்குப் பணிவிடைகள் செய்து அலுத்துப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்ற கையாலாகாத்தனம் அவனை வெகுவாய் வதைத்தது. எதற்கும் பிரயோசனமில்லாமல் எதற்கு இந்த வாழ்க்கை என்ற கேள்வி அவனை இப்போதெல்லாம் அதிகமாய்த் துரத்திக் கொண்டிருக்கிறது.

சேகர் மாலைக் காபியைக் குடித்து முடிக்கும் வரை தாயும் மகனும் இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இன்றைக்கு ஏனோ சேகருக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மேகக் கூட்டத்தில் பார்வையைப் பதித்தான். சில நேரங்களில் மௌனம் தருகிற நிம்மதி அலாதி.

தரை துடைக்க வந்த வளர்மதியின் வருகையில் அந்த சோகமான மௌனம் உடைபட்டது.

"கட்டில் காலையும் அப்படியே தொடச்சிவிட்டுரு, வளரு. ஏதோ எண்ணைக் கறை தெரியுது பாரு" என்றாள் கோமதி ஒன்றும் நடக்காத பாவனையில்

"சரி, டீச்சர்" என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் வளர் அதையே பிரதிபலித்து.

சேகர் காலிக் கோப்பையைத் தாயின் கையில் தந்ததும் பெருமூச்சோடு எழுந்த கோமதி ஏதோ நினைவு வந்தவளாய், "நாளைக்கு புரட்டாசி முதல் சனி. காலையில சீக்கிரமே பெருமாள் கோயிலுக்குப் போகணும் தம்பி. போயிட்டு வந்திட்டு எழுப்புறேன், என்ன?" என்றாள் சேகரிடம்

"நீங்களும் மிஸ்டர் பெருமாளை அடிக்கடி பாத்துட்டு வர்றீங்கம்மா. ஆனா அவர்தான் அதிசயம் எதுவும் செய்து என்னை நடக்க வைக்க மாட்டேன்னு அடம் புடிக்கறார்" என்றான்

சேகர் வலிய வரவழைத்துக் கொண்ட நகைச்சுவையோடு

"எனக்கு அப்படி ஒரு அதிசயம் நடந்து நீ பழையபடி ஆயிருவேங்கற நம்பிக்கை எல்லாம் போயிருச்சி தம்பி. இப்ப நான் கும்பிடறதெல்லாம் எனக்கு முன்னால நீ போய் சேர்ந்திடணும்கறதுக்குத்தான்" மனதிலிருந்தது வார்த்தைகளாக வெளிவந்துவிட சட்டென அங்கே ஏதோ மரணித்துவிட்டது போன்றதொரு கனமான துக்கம் திடமாய்ப் பரவிற்று.

கோமதி தன் தவறை உணர்ந்தவள் போல் சேகரைப் பரிதாபமாய்ப் பார்க்க, சேகரின் முகம் இருண்டு போய்விட்டிருந்தது. முகத்தில் அடர்த்தியாய் அப்பிக் கொண்ட சோகம் வெளியே தெரியாவண்ணம் சேகர் தலையைத் திருப்பிக் கொண்டான்.

சில வினாடிகள் இருவரையும் மாறி மாறிப்பார்த்த வளர், பின் கோமதியை நேராய்ப் பார்த்து, "டீச்சர், சேகருக்கு இஸ்டமிருந்தா நான் அவரைக் கலியாணம் கட்டிக்கிடுதேன். அவர் செத்துப் போணுமுன்னு சாமி கும்புட வேண்டாம் டீச்சர்" என்றாள் தயக்கத்தின் சாயல் துளியும் ஒட்டாமல்

இதைச் சற்றும் எதிர்பாராத கோமதியும் சேகரும் வார்த்தை வராமல் உறைந்து போக, அவளே

மீண்டும் தொடர்ந்தாள்:

"சேகரு மேல அனுதாபப்பட்டு இதக் கேக்கேன்னு நெனச்சிறாதீக... அவர் மேல ஆசப்பட்டுதேன் கேக்கேன். நீங்க குடுக்க எறநூத்தம்பது ரூவாக்காக இங்க வேலைக்கு வரலை டீச்சர். இந்தா இந்த மொகத்தையும் அந்தக் கண்ணுல தெரியற வெளிச்சத்தையும் பாக்கதுக்குத்தேன்.. என்ன வேல கெடந்தாலும் போட்டுப்புட்டு இங்கிட்டு ஓடியாறேன்..."

சேகருக்குக் கூச்சமாய் இருந்தது. 'என்ன சொல்ல வருகிறாள் இவள்? வளர் என்னைக் காதலிக்கிறாளா என்ன?' அடிவயிற்றில் ஏதோ பறப்பதாய் ஒரு மெல்லிய உணர்வு. அன்பு சுகம்தான் - அது எவரிடமிருந்து எந்த ரூபத்தில் வந்தாலும்.

சற்று பரிச்சயமான இந்த உணர்வு, நிச்சயம் செய்திருந்த ரோஷினியின் முகத்தை நினைவில் கொண்டு வந்தது. யதார்த்தம் உறைக்கவும் சேகர், "வளரு, இதென்ன பொம்மைக் கல்யாணமா?

என்ன பேசற நீ?" என்றான் சற்று அதட்டலான குரலில்

"நீ என்னத்துக்கு இப்படிப் பேசுதன்னு தெரியும் சேகரு. நெதமும் மாடுகணக்கா வேல பாத்திட்டு ராத்திரி படுக்கப் போம்போது என்னத்துக்கு இந்த வாழ்க்கைனு வெசனமா கெடக்கு. நமக்குன்னு அழுகவும் சிரிக்கவும் யாராது இருந்தா உசுரோட இருக்கதுக்கு ஒரு அர்த்தம் கெடைக்குமில்ல? அப்பிடி ஒரு சீவனா உன்னால இருக்க முடியுமில்ல சேகரு? பாசாங்கில்லாம நானு ஒரு நாலு வார்த்தை உங்கிட்ட பேசமுடியுமில்ல? எனக்கு அதாம் வேணும்"

கோமதியின் புலம்பல்களில் சேகரின் தன்னம்பிக்கை வெகுவாய்க் கரைந்து போயிருந்தது.

அவனால் மற்றொருவருக்கு உதவியாக இருக்கமுடியும் என்ற எண்ணம் அவனுக்கு சாத்தியமாய்த் தோன்றவில்லை. அழுத்தமாய்க் கண்மூடித் திறந்தான்.

"அம்மாவுக்கே என்னைப் பாத்துக்கறதுக்குக் கஷ்டமாயிருக்கு. வேற யாருக்கும் பாரமாயிருக்க நான் விரும்பல, வளரு" என்றான் உடைந்த குரலில்.

"நீ எனக்கு பாரமில்ல சேகரு, பிடிப்பு. புரிஞ்சிக்கோ." என்றவள் சற்று இடைவெளிவிட்டு உணர்ச்சி மேலிட, "சேகரு, உன் மூளை இன்னும் நல்லாத்தான இருக்கு? அதை வச்சி என்ன செய்யலாம்னு ரோசிப்போம். இப்பத்தேன் கை லேசு லேசா வருதில்ல... புள்ளைகளுக்குக் கம்ப்யூட்டர் சொல்லித்தா. புத்தகம் கூட எழுதலாமாமே... டவுண்ல ஒரு காலேஜு டீச்சரக்
கேட்டனே..."

அவள் குரலிலிருந்த நம்பிக்கை மனதுக்கு இதமாய் இருந்தாலும் என்ன சொல்வதென்று தெரியாமல் தாயைப் பார்த்தான் சேகர்.

அவ்வளவு நேரம் அந்த உரையாடலை இறுக்கமாய்க் கேட்டுக் கொண்டிருந்த கோமதியை அவன் பார்வை உசுப்பிவிட்டது. "வெளில போடி நாயே" என்றாள் வளர்மதியைப் பார்த்து.

வளர் அசையாமல் சேகரைப் பார்க்க, "அவன என்னடி பாக்கற? என்ன திமிரு இருந்தா என் புள்ளைகிட்ட இப்படிப் பேசுவே நாயே! உன் சாதி என்ன, தரம் என்ன, தகுதி என்ன?

வெக்கமாயில்ல இப்படிப் பேச?" என்று ஆங்காரமாய்க் கேட்க, சேகர் செய்வதறியாமல் மன்னிப்புக் கோருகிற தோரணையில் வளரைப் பார்த்தான்

"இதில வெக்கப்பட என்னருக்கு டீச்சர்?" என்றாள் வளர் அசராமல் அவளின் வழக்கமான கம்பீரத்தோடு.

"உன் முகத்தைக் கண்ணாடியில பாத்திருக்கியாடி, நாயே? பாரு... நல்லா பாரு..." என்று

அவளைக் கண்ணாடி முன் தள்ளி நிறுத்தினாள் கோமதி

"இது நெதம் பாக்குத மூஞ்சிதான, புதுசா பாக்கதுக்கு என்னருக்கு? நீங்க சொன்னீங்கன்னு பாத்தாச்சு... இப்பவும் சேகரைக் கலியாணம் கட்டிக்க ஆசைப்படுதேன் டீச்சர். " என்றாள் சற்றும் பிடிதளராமல், கொஞ்சமும் கலைந்துவிடாமல் சேகர் மலைப்பாய் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சனியனே... அப்படிச் சொல்றத நிறுத்துடி முதல்ல... என் பையனப் பாருடி... எப்படி ராஜா கணக்கா இருக்கான்... உன் மூஞ்சியையும் பாரு... தேங்காத் துருவி மாதிரி பல்லு. அய்யனார் சாமி மாதிரி கண்ணு... பனை மரத்தில தண்ணி ஊத்தின மாதிரி நிறம்... அவன் பக்கத்தில நிக்கவாவது உனக்குத் தகுதி இருக்காடி?" கோமதி ஆத்திரத்தில் நிலை மறந்தாள் .

வளர் கோமதியின் கேள்விகளை முற்றிலுமாய்ப் புறக்கணித்துவிட்டு சேகரைப் பார்த்து,

"ரோசிச்சுப் பாரு, சேகரு. நம்ம ரெண்டு பேரு வாழ்க்கையும் காஞ்சுதேன் கெடக்கு. ரெண்டு பேரும் சேந்தமின்னா நம்மள மாதிரி கஸ்டப்படுத இன்னொரு சீவன எடுத்து வளக்கலாமில்ல. நீ புத்தியக் குடு; நான் உழைக்கச் சொல்லித் தாறேன். ஊருக்கு உதாரணமா ஒரு புள்ளைய வளப்போம்..." முகம் விகசிக்க, கண்கள் பளபளக்க, குரலில் உறுதி தொனிக்க அவள் சொன்ன
விதம் அவனுக்குள் புதிதாய்க் கனவு விதைகளைத் தூவியது.

சேகர் முதல் முறையாய் வளர்மதியை உன்னிப்பாய் கவனித்தான். கோமதி பட்டியலிட்ட குறைகள் எதுவும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. மாறாக, அவனுக்கு விடியலைக் கொணரும் விடிவெள்ளியாய், வாழ்க்கையை மீட்டுத் தரும் மஹா சக்தியாய்த் தெரிந்தாள் வளர்மதி .

"கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு, வளரு" என்றான் சேகர் மெல்லிய புன்னகையோடும் அவள் புதிதாய் விதைத்த கனவுகளோடும்

நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!

குரு வாழ்க! குருவே துணை!

நம்பிக்கை போட்டி முடிவுகள்!!!

["நம்பிக்கை! நம்பிக்கை! நம்பிக்கை! நம்மிடத்தில் நம்பிக்கை! இறைவனிடத்தில் நம்பிக்கை! இதுதான் வாழ்க்கை" - சுவாமி விவேகானந்தர் ]

அன்பின் இணைய நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் நம்பிக்கையின் மனம் நிறைந்த வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!

உங்கள் நம்பிக்கை தனது முதலாம் ஆண்டுவிழாவை சிறப்பாய் கொண்டாடும் இத்தருணத்தில் ..

நம்பிக்கையின் அழைப்பின் பேரில் கதை, கவிதை, கட்டுரை போட்டிகளுக்காக தங்கள் படைப்புகளை ஆர்வமுடன் அள்ளித் தந்த அனைத்து படைப்பாளிகளையும் இந்நேரத்தில் நம்பிக்கை பெரிதும் பாராட்டுகிறது. அது மட்டுமல்ல 7 நடுவர்கள் தங்கள் பணியை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 7 நடுவர்களும் அவரவர் துறையில் மிகச் சிறப்பானவர்கள். ஆகவே, அவர்களையும் .. பரிசு வழங்க பொருளுதவி செய்த அன்பர்கள் காழியூரார், பரஞ்சோதி அண்ணா, முத்தமிழ் மஞ்சூரார், விஜிசுதன் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசுவழங்கும் அன்பர்களையும் பின்னூட்டமிட்ட அனைவரையும் நம்பிக்கை பாராட்டி மகிழ்கிறது.

நம்பிக்கை குழுமம் இந்தப்போட்டியில் சின்ன புதுமையை புகுத்தி இருந்தது.. என்னவெனில் , "படைப்பாளிகள் பற்றிய விபரம் நடுவர்களுக்கு தெரியாது .. நடுவர்கள் யார் என்பது படைப்பாளிகளுக்கு தெரியாது" என்பதே அது. ஒரு வெளிப்படையான நியாயமான பாரபட்சமற்ற பின்னூட்டம்/ மதிப்பெண்ணை படைப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்படி செய்யப்பட்டது. அந்த நோக்கம் இன்று வெற்றியும் அடைந்து உள்ளது.

இந்த தருணம் யார் யார் வெற்றி பெற்றார்கள் .. யார் யார் நடுவராய் இருந்தார்கள் என்பதை அறிந்திட இருதரப்பினரும் மிக்க ஆவலுடன் இருப்பதை எம்மால் அறிய முடிகிறது :)) நடுவர்களும் தாங்கள் அதிக மதிப்பெண் அளித்த படைப்பு முதலிடம் பெறுமா என்ற ஆவலில் நிச்சயம் இருப்பார்கள்.

உங்கள் ஆர்வத்திற்கு மேலும் அணை போடலாகுமா :))

50 க்கும் மேற்பட்ட அருமையான படைப்புகள்.. 7 நடுவர்கள் என்று ஆரம்ப போட்டியே அமர்க்களமாய் அமைந்து விட்டது. இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் உங்களைத்தான் சேரும்.

சில படைப்புகள் இன்னமும் செதுக்கப்பட வேண்டியதாய் இருந்தது. சில படைப்புகள் செதுக்கிய சிற்பமாய் மின்னியது. ஒரு பள்ளி மாணவி கூட இந்தப் போட்டியில் பங்கு எடுத்தது நம்பிக்கைக்கு பெருமை அளிக்கும் விசயமாய் இருந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு படைப்புகள் என்று 6 படைப்புகள்(பொற்காசு மற்றும் புத்தகம்) பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர சில படைப்புகளுக்கு சிலர் தனிப்பட்ட முறையில் பரிசளிக்கவும் விரும்பி உள்ளார்கள். நியாயமாகப் பார்த்தால் நம்பிக்கையின் பார்வையில் , தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி போட்டிக்கு தங்கள் படைப்பை அனுப்பிய அனைத்து படைப்பாளிகளும் பரிசளித்து கௌரவிக்கப்பட வேண்டியவர்களே. அதற்கான வாய்ப்பு வசதிகளை வருங்காலம் தரும் என்ற நம்பிக்கையில் முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.

நடுவர்களாக சிறப்பு பணி ஆற்றியவர்கள்!!

1. சாது . ஸ்ரீ. காழியூரன் ஞானசம்பந்தன் அவர்கள்
(எம் இனிய ஆன்மீக நண்பர்)

2. உயர்திரு "ஔவைக்குறள் " ஞானவெட்டியான் ஐயா அவர்கள், திண்டுக்கல் .
(சித்தம் குழும நிறுவனர், முன்னாள் ஸ்டேட்பாங்க் தலைமை மேலாளர், தமிழ்ப்பயணியில் ஞானம் பயிற்றுவிப்பவர்)

3. "இணைய குறளாசான்" முனைவர் . இரவா (எ) வாசுதேவன் B.Litt., M.A., M.Phil., Ph.Dஅவர்கள்.
(தமிழ் ஆராய்ச்சியாளர், குழந்தை இலக்கியக் கவிஞர், ரிசர்வ் பாங் ஆப் இண்டியா, சென்னை)

4. கோவைத் திரு வேந்தன் அரசு (எ) ராஜு ராஜேந்திரன் அவர்கள்
(தமிழ் ஆர்வலர், மென்பொருள் வல்லுனர், சின்சின்னாட்டி , அமெரிக்கா)

5. அன்பு நண்பர் திருவாளர் மஞ்சூர் ராசா (எ) சுந்தர் அவர்கள்,
( முத்தமிழ்க் குழும நிறுவனர், தமிழ் ஆர்வலர், குவைத்)

6. அன்புசால் திருமதி . காந்தி ஜெகன்நாதன் அவர்கள்
(அன்புடன் குழுமம், முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தின் காரியதரிசி)

7. அன்புச் சகோதரி "தன்னம்பிகை கவிதாயினி" விஜிசுதன் அவர்கள்
(முன்னாள் வானொலி அறிவிப்பாளர், கனடா)

படைப்பாளிகள் நடுவர்களை அறிந்தாயிற்று.. இனி பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் விபரம் மற்றும் படைப்பாளியின் பெயரைக் காண்போம்!

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம்


7 நடுவர்களும் படைப்பின் கருத்து, தெளிவு, நடை, சமுதாய நோக்கு என்ற ரீதியில் பகுத்து 10 க்கு தங்கள் மதிப்பெண்ணை அளித்து இருந்தார்கள். அந்தப் புள்ளிகளைக் கூட்டி மொத்த மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டு .. ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய இரண்டு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிலரை வெகுவாய் பாதித்த படைப்புகளும் சில புள்ளிகள் வித்தியாசத்தில் வாய்ப்பை நழுவிய படைப்புகளும் சிறப்பு பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.


பொற்காசுப் பரிசு பெறும் படைப்புகள்

கதை

1. மஹா சக்தி - நிலா அவர்கள்
2. உயர்வுள்ளல் - "ஆல்பா சித்தா" ரவீந்தரன் கிருஷ்ணசாமி அவர்கள்

கட்டுரை
1. எதிர்கால இந்தியா - புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம்.ஏ.பிட் அவர்கள்
2. காலமே நமது தெய்வம் - ஜெயஸ்ரீ (+2 மாணவி)

கவிதை
1. வாயுதேவா - டாக்டர் . சுந்தர் பரத்வாஜ் , கோவை
2. வாழ்வியல் வேதம் - இராகவன் @ சரவணன் , பெங்களூர்

படைப்புகள் நம்பிக்கை வலைப்பூவில் வலையேற்றப் படும் ..

சிறப்பு பரிசுக்குரிய படைப்புகள்


1. 'அஸிபத்ர வனம்' மற்றும் 'ஆறு' படைப்பிற்காக - ராம்பிரசாத். கே, சென்னை

2. பள்ளம் என்பது (கவிதை) - அனந்த லக்ஷ்மி அம்மாள்
3. 'என் அன்பு அம்மா' மற்றும் 'சிவமடம்' - விசாலம்

4. நம்பிக்கையின் வலிமை - நம்பிக்கை பாண்டியன்

5. ஆன்மீகக் கட்டுரை - பக்ரூதீன்
6. அஷ்டவக்ரன்(நாடகம்) - மாதங்கி

7. இறைவனின் செல்லக் குழந்தைகள் - பரமேஸ்வரி

8. நம்புங்கள் நாளை நமதே - தியாகு, திருப்பூர்


குறிப்பு: வெற்றி பெற்ற படைப்பாளிகள்.. பரிசை (நேரில் அல்லது தபாலில்) பெற தாங்கள் படைப்பை அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து தங்களது தொலைபேசி எண், முகவரியோடு கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு மடலிடுமாறு ..அன்புடன் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
நம்பிக்கையின் மீது மிக்க அன்பு கொண்டுள்ள அனைத்து நல்லோர்களுக்கும், போட்டியை சிறப்புற நடத்திட உதவி செய்த நம்பிக்கையின் மேலாளர்கள் பரஞ்சோதி அண்ணா, விழியனுக்கும் இந்நேரம் நம்பிக்கை தனது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.

நல்ல சத்சங்கம் மூலமாக நற்சிந்தனை வளர்க்க நம்பிக்கைக்கு வருகை தாருங்கள்!

நன்றி! நன்றி! நன்றி!

வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த்!
இவண்,
நம்பிக்கைக் குழுமம்.

Sunday, June 18, 2006

வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி

வாழ்க்கையில் வெற்றி பெறும்
எண்ணம் நம்முடைய மனதில்
ஆனால் தொடர் தோல்வி.

தோல்வியே வெற்றியின்
தூண்டுகோலாக இருக்கலாம்.

கடின உழைப்பு, விடா முயற்சி,
தன்னம்பிக்கை இவற்றை
படிகட்டாக்கி செல்.

தோல்வி என்ற காலன்
நம்மை தொடர்வது அரிது.

வாழ்வில் தினமும்
செயல் படுவோம் எனில்
வெற்றி பெறுவது உறுதி.


நன்றி: த. வினோத் குமார், குறிஞ்சி மலை.
(தினத்தந்தி - இளைஞர் மலர்)

Saturday, June 03, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 307

வாயுதேவா!


(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

#
உள்ளும் புறமுமாகி
உருவமில்லா அருவமானாய்
உருகொண்ட உடலினிலே
உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!
#
ஒன்றுமுதல் மூவிரண்டு
அறிவு கொண்ட ஜீவனெல்லாம்
உயிரோடு இருப்பதெல்லாம்
உன் கருணை யாலன்றோ!
#
பிராணன் உதான னென்றும்
வியான சமான அபான னென்றும்
ஐம்புலன்களைப் போல்
ஐவகைப் பாகமாகி
#
ஜடமான உடம்பினிலே
நற்பணியைப் புரிகின்றாய்- நான்
எப்பேரால் வாழ்த்திடுவேன்
வாழ வைக்கும் வாயுதேவா!
#
தசரதனின் தலைமகனின்
தன்மையான தூதுவனை
தரணிக்கு நீ கொடுத்தாய்
வாயுதேவா வணங்கு கின்றோம்.
#
சுவாசிக்கும் முறை யறிந்து
கும்பகம் நாம் செய்து விட்டால்
குவலயம் நமை போற்றும்
குணசீலன் ஆகிடுவோம்
#
உன்னை உணர்பவன்
உண்மையை உணர்கின்றான்
மூவகை ஆசைகளை
முழுதுமாய் துறக்கின்றான்.
#
காற்றடக்கும் வித்தை கற்றால்
காலனும் அடிமை ஆவான்- சகல
சித்தியும் கைகூடும்
சித்தனாய் ஆகிடுவான்!
#
சஞ்சீவி மலை பெயர்த்த
சிரஞ்சீவி சுந்தரனும்
வாயுவின் கருணையாலோ
வான கத்திலே பறந்தான்.
#
காற்றிலும் இரண்டு வகை
கண்டிடுவீர் அன்பர்களே! -அது
தென்றலாய் வருடும் சைவம்
புயலாய் மிரட்டும் அசைவம்!
#
பூமாரி பொழிந்திடவே
பூமியில் நீர் எடுத்து
மேகத்தில் சேர்ப்பதினால்
காற்றுக்கு கைகள் உண்டோ?
#
காற்றுக் குழல் பெற்றெடுக்கும்
குழந்தையே குரல் என்பர்
காற்றினால் மேகம் சிந்தும்
நீர் துளியைச் சாரல் என்பர்!
#
இசையென்னும் இனிமைக்கும்
ஓங்கார ஓசைக்கும்
ஆதாரம் ஆனவனே- உன்
அடியாரைக் காத்தருள்வாய்!
#
காற்று இருப்பதால் தான்
காது கூட கேட்கிறது
கேட்கும் ஒலி எல்லாம்
காற்றன்றோ படைக்கிறது.
#
வாகனங்கள் விடும் புகைதான்
கலியுகத்தின் அரக்கன் ஆவான்
காற்றினை கெடுத்திடுவான்
காலனை அழைத்திடுவான்
#
பசுமை மரம் வளர்த்து - காற்றை
பரிசுத்தம் ஆக்கிடுவோம்!
மாசற்ற மனித குலம்
தழைத்திடவே உதவிடுவோம்!
#
காற்றும் கடவுளும்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்மூடி ஜெபித்திட்டால்
உண்மைதனை உணர்ந்திடுவோம்!
#
காற்றையும் உணர்ந் திடலாம்
கடவுளையும் உணர்ந் திடலாம்
இரண்டிற்கும் உருவ மில்லை
இன்பம் துன்பம் எதுவுமில்லை!
#
காற் றென்பர்
கடவுள் என்பர்
காற்றே கடவுளாதல்
ஆரும் அறிகிலார்!
#
காற்றே கடவுள் என்று
உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே
காற்றையே கடவுளாய்
தியானிப்பார் நலன் பெறுவார்!