நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, April 27, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 201

ஆறு


குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)


மனம் என்பது சக்தி. மனம் என்பது யோசிப்பதின் அடிப்படை மெய்ம்மை; மூலக்கோட்பாடு. மனம் என்பது சிந்தனைகளைத் தொடர்சியாக உருவாக்கும் ஒரு இயந்திரம். "யத் மதி தத் கதி" என்று சொல்லப்படுவது சிந்தனையைப் பொறுத்து மனிதன் மற்றும் அவன் வாழ்வு எனலாம். இந்த மனம் என்பது, லேசான நெருப்பில் வளையும் மூங்கில் கைத்தடியாக மாறி பயன்படுவதைப் போல எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து பயன்படக்கூடியது. நீ வெறுமையானால் நான் உன்னை நிரப்புவேன் என்று யேசுபிரான் சொல்வதும் இதைத்தான். (Empty thyself, I will fill thee). இந்திரியச் சுகங்களுக்கு மனதை அடிமையாக்காதவனும், மனதாலும் கூட அடுத்தவருக்குக் கெட்டது ஏதும் எண்ணாதவனும் ஜீவன் முக்தன் என்று சொல்லப்படுவதுண்டு.

பழக்கத்திலுள்ள தியானமும், பழக்கத்திலுள்ள மெளனமும் ஆன்மீகப் பாதையில் நடைபயில தேவையான நடைமுறைகள். இவைகளை ஒரு வாழும் முறையாக ஆக்கிக்கொள்ள சஞ்சலமற்ற அமைதியான மனமே அடிப்படை. பேசிப்பழகிய மனிதருக்கு மெளனமாயிருத்தல் என்பது மரணமடைவதற்குச் சமம். அவ்விதம் இருக்கப் பழகினால் அவர் ஒரு கடுந்துறவியாக அறிப்படுவார். தியானிக்காதவர்கள் தம்முள் இருக்கும் ஆத்மாவை வேட்டையாடுபவர்கள் என்று ஈசா உபநிஷதம் சொல்கிறது.

உடலைக் கட்டுப்படுத்தினால் உள்ளம் தூமையடையும் என்னும் பதஞ்சலி யோகம் படிப்படியான வழிமுறைகளைச் சொல்கிறது. இதற்கு இயமம், நியமம் என்று இரண்டு விதிகள் முதலில். இவையில் இயமம் என்பது செய்யக்கூடாததை விளக்குவது. நியமம் என்பது செய்ய வேண்டுவதை விளக்குவது. கொலை என்பது செய்யக்கூடாதது. அன்பாயிருத்தல் என்பது செய்ய வேண்டியது. அடுத்த இரண்டு விதிகள் ஆசனம் மற்றும் பிராணாயாமம். இதனால் புலனடக்கத்தைப் பெற முடியும். மேலும், சமாதி நிலையைப் பழகுவதில் முதற்படி இந்த நிலை என்று சொல்லப்படுவதுண்டு. பிரத்யாகாரமும், தாரணையும் இடைப்பட்ட இரண்டு நிலைகள். சமாதி நிலை என்பது 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது' என்று ஒரு சித்தர் பாடல் உண்டு.

சிந்திப்பதால் தான் நான் இருக்கிறேன் என்பது டெஸ்கார்டஸின் புகழ் பெற்ற வாசகம். நாம் சிந்திப்பது எப்போது என்று பார்த்தால் நமக்குச் சவால்களாகப் பிரச்சினைகள் உருவாகும்போது மட்டுமே என்றும் சொல்லப்படுவதுண்டு.
அவ்விதம் சிந்திக்கையில் வெளிப்பார்வையின் சாராம்சம் உள்பார்வையாகவே இருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள வெளியுலகத்தைத் தனது பார்வையினால் உள்வாங்குகிற மனிதன், உள்வாங்கும் முறையில் சக மனிதருடன் வேறுபடுகிறான். இந்த வேறுபாடு கவனம், நினைவு, சிந்தனைமுறை ஆகிய பலவற்றைப் பொறுத்து அமைகிறது.

உளவியல் ரீதியாக நாம் பார்க்கிறோம் என்பதை திருமூலர்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று அழகாகக் குறிப்பிடுகிறார். நாம் காணும் பொருளின் காட்சிக்கு இரண்டு நிலைகள் உள்ளன.ஒரு நிலை, பொருள் கண்வழிப் புகுந்து மனதால்பாதிக்கப்படுவதற்கு முன்னிருப்பது. மற்றொரு நிலை, மனம் செயல்பட்டபின் தோன்றும் நிலை. இது இமானுவேல் கான்ட் ஒப்புக்கொண்ட ஒரு தத்துவம்.

கண்ணில் தெரியும் வடிவத்தின் தொடர்பான ஒரு சிந்தனையோட்டம் பார்த்தல் என்ற செயல்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. மனம் என்பது அந்த வடிவத்தைப் பதிய வைக்கின்றது. சுருக்கமாக மனிதனுக்கு வெளியே இருக்கும் யதார்த்தம், அவனுக்கு உள்ளே இருக்கும் உலகத்தின் கட்டளைக்கு ஏற்ப அறியப்படுகிறது. இந்த உள்லுலகம் ஒருவன் சார்ந்திருக்கும் சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்துக் காணப்படுகிறது. முக்கியமாக சூழ்நிலை என்பது பெரும்பங்கு வகிக்கிறது. சூழ்நிலை என்பது ஒரு சமூகத்தின் ஒருமித்தப் பார்வை. இந்தப்பார்வை சக மனிதரோடு பழகும்போது மேலும் பண்படுகிறது அல்லது விரிவடைகிறது முக்கியமாக கற்றுகொள்ளுதல் என்பது நிகழ்கிறது. மேலும், இந்தக் கற்றுக்கொள்ளுதல் என்பது சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தயார் செய்துகொள்ள உதவி செய்கிறது.

ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவை அடைய தத்துவ சாஸ்திரத்தில் பிராமாணங்கள் என்பன பயன்படுகின்றன. அறிவு எனச் சொல்லும்போது ஒன்றைப் பற்றி நாம் பெற்ற அரிவு உண்மையானதா என்பது அந்த அறிவை நாம் எந்த வழியில் பெற்றோம் என்பதைப் பொறுத்தது. அறிவை விட அறிவைப் பெறும் வழி மிக மிக முக்கியமானது. இதற்கு தர்க்கரீதியாகவும் செல்ல முடியும். இந்தத் தத்துவத்தை நியாய சூத்திரம் என்ற நூல் கெளதமாரல் இயற்றப்பட்டது அழகாக விளக்குகிறது. கெளதமருடைய நியாய சூத்திரத்துக்கு வாத்ஸ்யாயனரும் விளக்கம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. இவர் ஆண்-பெண் உறவு பற்றிய நூலை எழுதியவர்.

பிரமாணங்கள் ஆறு. அவை பிரத்யட்சம், யூகம், ஆப்தவாக்கியம், உபமானம், அருத்தாபத்தி, அனுபலப்தி எனப்படும்.

1. பிரத்யட்சம் என்பது ஐம்புலன்களால் உணரும் ஒரு ஆதாரம். நெருப்புச் சுவாலை இதற்கு உதாரணம்.

2. யூகம் என்பது ஒன்றைக்கொண்டு மற்றதை யூகித்து உணர்வது. நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழி இதற்கு உதாரணம்.

3. ஆப்தவாக்கியம் என்பது அனுபவசாலியின் சொற்களைக்கொண்டு, ஆதாரமாகக்கொண்டு அறிவது. அந்தப் பக்கம் தெரியும் நெருப்பு காட்டில் ஆதிவாசி மக்கள் கொளுத்துவதால் தெரிவது என ஒருவர் சொல்ல அறிவது இதற்கு உதாரணம்.

4. உபமானம் என்பது ஒரு பொருளைக்கண்டவுடன் தாமாகவே அதுபோல உள்ள வேறு ஒரு பொருளின் சாயலில் இனம் காண்பது. இந்தப் பெண் ஜோதிகா என்ற நடிகையைப் போல இருக்கிறாளே ? என்று எண்ணும் எண்ணம் இதற்கு உதாரணம்.

5.அருத்தாபத்தி என்பது காட்டும் வழி சற்று சிக்கலானது. மற்ற மேற்சொன்ன வழிகளில் கிடைக்காத புது அறிவைக் கொடுப்பதுதான் இந்த வழி. இதற்கு உதாரணமாக, ஒருவன் உடல் பருத்திருக்கிறான். அவன் பகலில் உண்பதேயில்லை. அவன் உடல் பருத்தது எப்படி? எனக் கேட்டால் அவன் இரவில் உண்கிறான் என்று பதில் வரும். இந்த பதிலில் இரவில் உண்கிறான் என்ற அறிவு எப்படி வந்தது ? அந்த அறிவு தான் அருத்தாபத்தி.
யோசித்துப்பார்த்தால், மேற்சொன்ன மூன்றும் கூட லேசாக இந்த உதாரணத்தில் சாயல் காட்டும் ஆனால், அவை இதற்குப் பொறுந்தா.

6. அனுபலப்தி என்பது இன்மையை அறியும் அறிவு. இல்லாததை இருப்பதைப்போல அறிவது. சற்று முன் புறப்பட்ட இரயிலை இப்போது பார் என்று சொன்னால், இரயில் இல்லையே, புறப்பட்டுப் போய்விட்டதே என்று பதில் வரும். இப்பதில் இருப்பதைக் கண்டேன் என்று சொல்வதைப்போல இல்லாததைக் கண்டேன் என்று சொல்வதற்கு ஒப்பானது. காணாததைக் கண்டேன் என்று சொல்வதைப் போல.

இந்தப் பிரமாணங்கள் எங்கும் பயன்படக்கூடியவை. இவற்றைப் பயன்படுத்தி மனமானது வேண்டிய உருவை அடைகிறது. தண்ணீர் தான் இருக்கும் பாத்திரத்தின் அளவையும், உருவையும் பெறுவது மாதிரிதான்.
வாழ்வெனும் மகாநதியான ஆற்றில் நீந்திச் செல்ல உதவும் இந்த ஆறும் மனப்பயிற்சிக்கு உதவுபவை. வாழ்வைக் காப்பது விவேகமான மனம். எப்பொருளிலும் காரியம் யாது காரணம் யாது என்று பார்த்து நடந்தால் கோர்வை பிறழாமல் வாழ்வு நடக்கும்.

3 Comments:

At 6:54 AM, Anonymous Anonymous said...

Information packed article narrated with good examples. thanks.

 
At 12:04 AM, Blogger குமரன் (Kumaran) said...

நல்ல கட்டுரை. அனுபலப்தி மட்டும் புரியவில்லை.

 
At 11:18 PM, Blogger Ram.K said...

குமரன்,

இல்லாததைப் பார்ப்பது என்பது நாம் நமக்குத் தெரியாமலே நாம் கையாளும் ஒரு கலை. ஒரு பொருள் இல்லை என்று உணர்வதற்கு நாம் ஏற்கனவே அப்பொருள் பற்றிய அறிவை யோசித்து, அந்த இடத்தில் ஒவ்வொரு அம்சமாக அப்பொருளின் நம் அறிவுக்கு புரிந்தவரையில் சரிபார்த்து அப்பொருள் அங்கு இல்லை என்று உணர்வது.

நமது பிரமாணங்கள் அற்புதமானவை, எனக்கு மிகவும் பிடித்தவை.
ஆனால், புரிந்துகொள்வது சற்று கடினம் என்று எண்ணுகிறேன்.

ராம்.கே

 

Post a Comment

<< Home