நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, June 03, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 307

வாயுதேவா!


(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

#
உள்ளும் புறமுமாகி
உருவமில்லா அருவமானாய்
உருகொண்ட உடலினிலே
உயிர்கொடுத்து உயர்வும் ஆனாய்!
#
ஒன்றுமுதல் மூவிரண்டு
அறிவு கொண்ட ஜீவனெல்லாம்
உயிரோடு இருப்பதெல்லாம்
உன் கருணை யாலன்றோ!
#
பிராணன் உதான னென்றும்
வியான சமான அபான னென்றும்
ஐம்புலன்களைப் போல்
ஐவகைப் பாகமாகி
#
ஜடமான உடம்பினிலே
நற்பணியைப் புரிகின்றாய்- நான்
எப்பேரால் வாழ்த்திடுவேன்
வாழ வைக்கும் வாயுதேவா!
#
தசரதனின் தலைமகனின்
தன்மையான தூதுவனை
தரணிக்கு நீ கொடுத்தாய்
வாயுதேவா வணங்கு கின்றோம்.
#
சுவாசிக்கும் முறை யறிந்து
கும்பகம் நாம் செய்து விட்டால்
குவலயம் நமை போற்றும்
குணசீலன் ஆகிடுவோம்
#
உன்னை உணர்பவன்
உண்மையை உணர்கின்றான்
மூவகை ஆசைகளை
முழுதுமாய் துறக்கின்றான்.
#
காற்றடக்கும் வித்தை கற்றால்
காலனும் அடிமை ஆவான்- சகல
சித்தியும் கைகூடும்
சித்தனாய் ஆகிடுவான்!
#
சஞ்சீவி மலை பெயர்த்த
சிரஞ்சீவி சுந்தரனும்
வாயுவின் கருணையாலோ
வான கத்திலே பறந்தான்.
#
காற்றிலும் இரண்டு வகை
கண்டிடுவீர் அன்பர்களே! -அது
தென்றலாய் வருடும் சைவம்
புயலாய் மிரட்டும் அசைவம்!
#
பூமாரி பொழிந்திடவே
பூமியில் நீர் எடுத்து
மேகத்தில் சேர்ப்பதினால்
காற்றுக்கு கைகள் உண்டோ?
#
காற்றுக் குழல் பெற்றெடுக்கும்
குழந்தையே குரல் என்பர்
காற்றினால் மேகம் சிந்தும்
நீர் துளியைச் சாரல் என்பர்!
#
இசையென்னும் இனிமைக்கும்
ஓங்கார ஓசைக்கும்
ஆதாரம் ஆனவனே- உன்
அடியாரைக் காத்தருள்வாய்!
#
காற்று இருப்பதால் தான்
காது கூட கேட்கிறது
கேட்கும் ஒலி எல்லாம்
காற்றன்றோ படைக்கிறது.
#
வாகனங்கள் விடும் புகைதான்
கலியுகத்தின் அரக்கன் ஆவான்
காற்றினை கெடுத்திடுவான்
காலனை அழைத்திடுவான்
#
பசுமை மரம் வளர்த்து - காற்றை
பரிசுத்தம் ஆக்கிடுவோம்!
மாசற்ற மனித குலம்
தழைத்திடவே உதவிடுவோம்!
#
காற்றும் கடவுளும்
கண்ணுக்கு தெரிவதில்லை
கண்மூடி ஜெபித்திட்டால்
உண்மைதனை உணர்ந்திடுவோம்!
#
காற்றையும் உணர்ந் திடலாம்
கடவுளையும் உணர்ந் திடலாம்
இரண்டிற்கும் உருவ மில்லை
இன்பம் துன்பம் எதுவுமில்லை!
#
காற் றென்பர்
கடவுள் என்பர்
காற்றே கடவுளாதல்
ஆரும் அறிகிலார்!
#
காற்றே கடவுள் என்று
உள்ளுணர்வால் உணர்ந்த பின்னே
காற்றையே கடவுளாய்
தியானிப்பார் நலன் பெறுவார்!

1 Comments:

At 3:56 AM, Blogger மனசு... said...

நறுக்கென்று தெரித்த கவி...
நலம் பல உரைத்த கவி..
காற்றின் சிறப்பு தன்னை
காலத்தில் உரைத்த கவி...

கவிக்கும் கவிஞருக்கும்
மனசின் மனமார்ந்த
வாழ்த்துக்கள்...

அன்புடன்,
மனசு...

 

Post a Comment

<< Home