நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 206
இலக்கியமும் ஆன்மீகம்
(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்த படைப்பு)
படைப்பாளி பெயர்: புலவர். கா. பரமார்த்தலிங்கம் எம். ஏ.பி.எட்.,டி.எ.,
இலக்கியம் - இலக்கு + இயம் . குறிக்கோளைப் பற்றி இயம்புவது. இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி. மக்களின் வாழ்க்கை முறைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்குவது; நம்மை அன்பு நெறிப்படுத்தி அருள் நீரில் திளைப்பதற்கு அழைத்துச் செல்வது. இத்தகு சிறப்பு வாய்ந்த இலக்கியமானது நம்மை ஆன்மீக நெறியில் அழைத்துச் செல்லும் உன்னத கருவியாகும் என்று கூறினால் அது மிகையாகாது.
இலக்கியங்களில் ஆன்மீகக் கருத்துக்கள் ஏராளமாகப் பொதிந்து கிடக்கின்றது. சான்று பல காட்ட போதுமான இடம் காணாமையால் ஒரு சில சான்றுகளை மட்டும் இங்கு கண்ணுறுவோம்.
கதிரவன், பறவைகள், மரங்கள் மற்றும் பஞ்சபூதங்கள் யாவும் இறைவனைத் தொழும் போது , ஆறறிவு படைத்த மனிதனே! உன் நெஞ்சம் மட்டும் இறைவனைத் தொழாமல் இருக்கிறதே என்று கேட்கிறார் வேதநாயகம் பிள்ளை.
"கதிரவன் கிரணக் கையாற்
கடவுளைத் தொழுவான், புட்கள்
சுதியோடு மாடிப் பாடித்
துதி செயும் தருக்க ளெல்லாம்
பொதியலர் தூவிப் போற்றும்
பூதந்தந் தொழில் செய் தேத்தும்
அதிர்கட லொலியால் வாழ்த்தும்
அகமே நீ வாழ்த்தா தென்ன! "
என்ற பாடலை ஆழ்ந்து படித்தால் நாத்திகன் கூட ஆத்திகன் ஆகி விடுவான்.
"திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் " என்பது முதுமொழி. இத்தகு சிறப்பு வாய்ந்த திருவாசகத் தேனைத் தந்தருளிய மாணிக்க வாசகப் பெருமான் " ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெரும் ஜோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதோ? வளருதியோ? வன் செவியோ? நின் செவிதான்! " என்ற திருவெம்பாவைப் பாடல் இறைவனின் திருநாமத்தை கேட்காத செவியை "வன் செவி" என்று சாடுகிறார். செவியைப் போன்றே நம்முடைய வாய், கண், கை போன்ற உறுப்புகள் இறைவனின் திருநாமத்தைப் பாடவும் , திருவுருவத்தைக் காணவும் , திருவுருவத்தை வணங்கவும் பயன்பட வேண்டும் என்ற கருத்தை இலைமறைக்காயாக நமக்கு விளக்குகிறார் மணி வாசகப் பெருமான்.
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் கவி வலவராம் சேக்கிழார் பெருமானின் "பெரிய புராணம்" ஓர் ஆன்மீகச் சுரங்கம். வெட்ட வெட்டக் குறையாத ஆன்மீகக் கருத்துக்கள் அதில் ஏராளம்! ஏராளம்! தெய்வத்தை குழுந்தையாகப் பாவித்து பத்து பருவங்களில் புகழ்ந்து பாடும் இலக்கியம் "பிள்ளைத் தமிழ்" எனப்படும். குமரகுருபரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழையும் , பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழையும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது படித்தறிய வேண்டும்.
'ஐம்புலன்களை அடக்கினால் நம்முள் அறிவாய் விளங்கும் இறைவனை அடையலாம்' என்ற கருத்தை இதிகாசங்களாகிய மகாபாரதமும், இராமாயணமும் நமக்கு வலியுறுத்துகிறது. சீதாதேவியைத் தேடி இலங்கை சென்ற அனுமன், அசோகவனத்தை அழித்தபோது இராவணனின் ஐந்து சேனாதிபதிகள் வந்து சண்டையிட்டனர். அவர்களை அனுமன் வெல்லும் காட்சியை கம்பன் வர்ணிக்கும் போது 'ஐம்புலன்கள் போல ஐவர்; அறிவு போல அனுமன்; அறிவு புலன் இன்பங்களை வெல்வதுபோல அனுமன் அவர்களை வென்றான்' என்பதை
" அஞ்செனும் புலன்கள் ஒத்தார் அனுமனும் அறிவை ஒத்தார்" என்கிறார். இன்னும் எண்ணற்ற ஆன்மீக விளக்கங்களை கம்பராமாயணத்தில் நாம் பெற முடியும்.
தனிமனித வாழ்க்கைக்கும் சமுதாயத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத் திற்கும் இன்றியமையாத கடமை தர்மம் எனப்படும். தர்மம் என்ன என்பதை மகாபாரதத்தின் பல்வேறு இடங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஈரடியால் உலகை அளந்த தெய்வப் புலவர் பற்றற்ற இறைவனைப் பற்ற , பற்றை விடுக என்று எவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
-என்ற ஒரு குறட்பாவிலேயே ஆன்மீகத்தின் முழுமைக் கருத்தும் அடங்கியுள்ளது. கற்புடை பெண்டிரை தெய்வமாகப் போற்ற வேண்டும் என்ற உயரிய கருத்தினை இளங்கோ தாம் யாத்த சிலம்பில், கவுந்தியடிகள் வாயிலாக கண்ணகியின் பெருமையை விளக்குகிறார், இதோ அந்த அடிகள்..
"இவளோ
கொங்கச் செல்வி, குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை, செய்தவக் கொழுந்து
ஒரு மாமணியாய், உலகில் தோன்றிய திருமாமணி"
கடவுள் அகக் காட்சியில் காணத்தக்கவர். ஆணவம், கண்மம், மாயை ஆகிய மும்மலங்கள் சூழ்ந்த மனதினல் இறைவனைக் காண இயலாது. எனவே மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்துக்களை உள்ளடக்கிய இலக்கியங்களால் ஆன்மீகம் தழைத்தோங்குகிறது; ஆன்மீகத்தால் இலக்கியங்களும் தழைத்தோங்குகிறது. இலக்கியங்கள் யாவும் ஆன்மீக வாழ்விற்கான கருத்துக்களை செவ்வனே வலியுறுத்தி வந்துள்ளன. ஆகவே! மெய்யன்பர்களே இலக்கியவழி நின்று ஆன்மீகத்தில் திளைத்து , நற்கதி பெறுவோமாக!
நன்றி! வளமுடன் வாழ்க!
0 Comments:
Post a Comment
<< Home