நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 205
(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை. படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).
ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "(பசித்தோருக்கு)உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் (நன்மாராயம்) கூறுவதுமாகும்" என்று கூறினார்கள்.
"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான ஈமான்) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்""அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக் கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் "
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளிக்கு தமது கொடையை கண்ணியமாக வழங்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள்(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு(உபசரிப்பது)ஆகும். விருந்து உபசாரம் மூன்று தினங்களாகும் அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்)அவருக்கு தர்மமாக அமையும். மேலும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப்பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்"
மேற்கண்டவை நபிவழித் தொகுப்பான புகாரி கிரந்தத்தில் காணப்படும் இஸ்லாமிய போதனைகள்.
மேலும்,
"அண்டைவீட்டான் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளனாக மாட்டான்" என்றொரு நபிமொழி உண்டு.
(எந்த மதமாக, ஜாதியாக இருந்தாலும்) அடுத்துள்ளவனின் பசியை உணரத் தூண்டும் இத்தகைய பொன்மொழியை உணர்ந்து நடந்தாலே இன்று உலகில் நிலவும் ஏராள பிரச்னைகள் தீர்ந்துவிடும்.
ஒரு தனிமனிதனுக்கு உறவினரை விடவும் ஆபத்துஅவசரத்துக்கு உதவ வருபவன் அண்டைவீட்டானே. அதே போல ஒரு வீட்டார் அதிகம் பிரச்னைகளை எதிர்கொள்வதும் தமது அண்டை வீட்டாரிடம் தாம்.
அண்டைவீட்டாரின் நலம் பேணுவது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்ற போது 'எங்கே, நமது சொத்துக்கும் அவர்களை (அண்டை வீட்டாரை) வாரிசாக்கிவிடுவார்களோ' என்று நாங்கள் யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கு அறிவுரையளித்தார்கள் என்பது நபித் தோழர்களின் கருத்தாக இஸ்லாமிய வரலாற்றில் காண முடிகிறது.
தனி மனிதனுக்கு அண்டை வீட்டுக்காரன் எனில் ஒரு தெருவுக்கு அடுத்த தெரு, ஒரு மாநிலத்துக்கு அண்டை மாநிலம், ஒரு நாட்டுக்கு அண்டை நாடு என்ற அளவில் சிந்தித்துப் பார்த்து அண்டை அயலவர்களின் உணர்வுகளை மதிக்கத் தொடங்கினால் இன்று நிலவும் நதிநீர் பிரச்னை, பயங்கரவாத பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
குர்ஆனிலும் பிற இஸ்லாமிய ஆதாரங்களிலும் 'இடம் பொருள் ஏவல்'உடன் சொல்லப்பட்டுள்ள சில கருத்துக்களை வைத்துக்கொண்டு இன்று முஸ்லிம்களை எதிர்(த்தாகவேண்டிய கட்டாயத்திலிரு)ப்போரும் அதற்கு எதிர்வினையாக முஸ்லிம்களும் காரியமாற்றி ஒருவருக்கொருவர் வெறுப்பையும் கசப்பையும் விசிறிவிட்டுக்கொள்கின்றனர். இப்போக்கு எல்லாத்தரப்பிலும் உண்டு.
இத்தகையவர்கள் எல்லா மதத் தூதர்களும் ஒரே மூலத்திலிருந்தே வந்தனர் என்பதை உணர்ந்து நடந்து உலகில் அன்பு தழைக்க உதவிடுவார்களாக!
'பாவிஷஹார்' புராணத்தில் 'ஏதாச மின்னேந்த மிலேச்ச' என்று தொடங்கும் வரிகளுடன் "ஒரு மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர்) தனது தோழர்களுடன் வருவார். அவர் மணல் நிறைந்த பகுதியிலிருந்து வந்து தீமைகளை அழிப்பார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வன வேதத்திலும் 'போற்றப்படுபவர்' (முஹம்மது) வருவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ரிக் வேதத்திலும் முன்னறிவிப்பு உண்டு.
இதன்டிப்படையிலேயே அனைத்து தூதர்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றினர் என்று நான் குறிப்பிடுகிறேன்.
எனவே, தன்னுடைய மதத்திற்கு உண்மையாக இருக்க விரும்பும் யாரும் (ஹிந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவரோ, அல்லது பிறரோ) பிற மனிதர்களிடத்தும் அன்பு செலுத்தி 'மனித நேயம்' தழைக்கப் பாடுபடவேண்டும் என்று உணர்வோமாக.
0 Comments:
Post a Comment
<< Home