நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, April 29, 2006

திருப்பூரும் 12 மணிநேர வேலையும்

(நம்பிக்கை குழுமத்தில் வெளியான தியாகுவின் கவிதை மேதினத்தை முன்னிட்டு இங்கு வலையேற்றப்படுகிறது)

சாயபட்டறைகளில் எங்கள்
சந்ததிகள் வளருது!
காலையில் காய போட்ட
துணியெடுக்க -சூரியன்
போனபிறகு வருகிறாள் அம்மா

நிக்க நேரமில்லை நினைத்து
பார்க்க வழியுமில்ல -வேலை
எட்டுமணிநேரமல்ல!

நீங்கள்
போட்டுருக்கிறபனியனுக்குள்

புதைந்திருக்கு எங்கள்
வாழ்க்கை-வேலை
எட்டுமணிநேரமல்ல!

படிக்க போன பிள்ளைக்கு
பசியாத்த வழியுமில்ல
குடிக்கிற கூலுக்கே
குடும்பம் முழுக்க
வேலைக்கு-வேலை
எட்டுமணிநேரமல்ல

பள்ளிகூடம் விட்டவுடன்
பறந்து வருவான்
பிள்ளை-அம்மா
பாயாசம் வைத்திருப்பாளென
பாசத்துடன் அள்ள
வழியில்ல-வேலை
எட்டுமணிநேரமல்ல

நின்னுகிட்டே
பார்க்கிறாள்
வேலை அம்மா-
உட்கார வாரத்தில்
ஒரு நாள் லீவு
அன்னைக்கும் வேலையாம்
அர்ஜென்டாம் ஆர்டரு-வேலை
எட்டுமணிநேரமல்ல

அன்புடன்
தியாகு

நம்பிக்கை ஆண்டு விழா போட்டி!

நம்பிக்கை ஆண்டு விழா போட்டி!

மேதின நல் வாழ்த்துக்கள்!

இணையத்தின் இனிய நண்பர்களே!

வணக்கம்!

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "கூகுள் நம்பிக்கை குழுமம்" தனது முதலாம் ஆண்டுவிழாவினை கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 14-5-2006

இன்னும் 14 நாட்களே உள்ளன!

படைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன!

விரைந்து உங்கள் படைப்புக்களை அனுப்புங்கள். உங்களது முகவரியையும் , உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் தாருங்கள்!

ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பலாம்!

உங்கள் பெயரை எடுத்தபின்னரே நடுவர் குழுவிற்கு படைப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெற முடியும்.

முடிவுகள் வெளியாகும் போது அனைவரது பெயரும் வெளியிடப்படும்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

போட்டி விதி முறைகளை அறிய பழைய பதிவைப் பாருங்கள்!
http://nambikkaioli.blogspot.com/2006/04/blog-post_21.html

உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி !

Friday, April 28, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 302

நம்புங்கள் நாளை நமதே!

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).


நண்பனே எழுந்துகொள்!
அன்பால் உலகை அணைத்துகொள்!
கனவுகள் காண் கவின்மிகு உலகை
கற்பனை செய்! - மற்றவனை
திட்டாமல் மன்னிக்க கற்றுகொள்!

அல்லாவை கும்பிடுவான் அவனை நேசி!-இல்லை
இயேசுவை கும்பிடுகிறானே அவனையும் நேசி -உனது
நேசிப்பின் கரம்விரிந்துகொண்டே போகட்டும்
கருணை பொங்கும்விழிகளால் பார் உனது
சகோதரனை அவனிடம் ஆயிரம்குறைகள் -இருந்தாலும்
அவன் சகோதரன் அல்லவா!

வார்த்தைகளால் அல்ல, வர்ணிப்பால் அல்ல
அன்பால்தான் முடியும்
வர்க்கபேதமற்ற சமுதாயம்!-எடுத்துகொள்
அன்பெனும் ஆயுதம்
ஆயிரம் அனுகுண்டுகள் வந்தாலும்
அழியாது நெஞ்சில் நிறைந்த
அன்பென்று சொல்! -உலகம்
சுற்றுவதுஏதோ விசையால் அல்ல -அன்பெனும்
பசையால் நண்பனே புரிந்துகொள்!

எல்லாம் நிறைந்த இனிய உலகில் -நீ
எதற்க்கு பிறக்க போகிறாய் !
குறைகள் நிறைந்த உலகம்தான் - உனது
குத்துசண்டை மைதானம் விழும்
குத்துகளை அன்பால் மாற்று!
பல்லக்கில் ஏற பலரும் விரும்புவர் -பல்லகை
தூக்க நீதானே இருக்கிறாய்! -உனது
தோளை கொடு துன்பத்தை துடை !

ஆயிரம் முறை நீ தவறி விழலாம்- மறுபடி
பல்லாயிரம் முறை நீ எழவேண்டும்!
எழுவதை எண்ணு!
விழுவதைஎண்ணாதே!
நாளை என்பது நம்பிக்கை
பெற்ற பிள்ளை
நம்பு நண்பனே நாளை உனதே!

Thursday, April 27, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 201

ஆறு


குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)


மனம் என்பது சக்தி. மனம் என்பது யோசிப்பதின் அடிப்படை மெய்ம்மை; மூலக்கோட்பாடு. மனம் என்பது சிந்தனைகளைத் தொடர்சியாக உருவாக்கும் ஒரு இயந்திரம். "யத் மதி தத் கதி" என்று சொல்லப்படுவது சிந்தனையைப் பொறுத்து மனிதன் மற்றும் அவன் வாழ்வு எனலாம். இந்த மனம் என்பது, லேசான நெருப்பில் வளையும் மூங்கில் கைத்தடியாக மாறி பயன்படுவதைப் போல எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுத்து பயன்படக்கூடியது. நீ வெறுமையானால் நான் உன்னை நிரப்புவேன் என்று யேசுபிரான் சொல்வதும் இதைத்தான். (Empty thyself, I will fill thee). இந்திரியச் சுகங்களுக்கு மனதை அடிமையாக்காதவனும், மனதாலும் கூட அடுத்தவருக்குக் கெட்டது ஏதும் எண்ணாதவனும் ஜீவன் முக்தன் என்று சொல்லப்படுவதுண்டு.

பழக்கத்திலுள்ள தியானமும், பழக்கத்திலுள்ள மெளனமும் ஆன்மீகப் பாதையில் நடைபயில தேவையான நடைமுறைகள். இவைகளை ஒரு வாழும் முறையாக ஆக்கிக்கொள்ள சஞ்சலமற்ற அமைதியான மனமே அடிப்படை. பேசிப்பழகிய மனிதருக்கு மெளனமாயிருத்தல் என்பது மரணமடைவதற்குச் சமம். அவ்விதம் இருக்கப் பழகினால் அவர் ஒரு கடுந்துறவியாக அறிப்படுவார். தியானிக்காதவர்கள் தம்முள் இருக்கும் ஆத்மாவை வேட்டையாடுபவர்கள் என்று ஈசா உபநிஷதம் சொல்கிறது.

உடலைக் கட்டுப்படுத்தினால் உள்ளம் தூமையடையும் என்னும் பதஞ்சலி யோகம் படிப்படியான வழிமுறைகளைச் சொல்கிறது. இதற்கு இயமம், நியமம் என்று இரண்டு விதிகள் முதலில். இவையில் இயமம் என்பது செய்யக்கூடாததை விளக்குவது. நியமம் என்பது செய்ய வேண்டுவதை விளக்குவது. கொலை என்பது செய்யக்கூடாதது. அன்பாயிருத்தல் என்பது செய்ய வேண்டியது. அடுத்த இரண்டு விதிகள் ஆசனம் மற்றும் பிராணாயாமம். இதனால் புலனடக்கத்தைப் பெற முடியும். மேலும், சமாதி நிலையைப் பழகுவதில் முதற்படி இந்த நிலை என்று சொல்லப்படுவதுண்டு. பிரத்யாகாரமும், தாரணையும் இடைப்பட்ட இரண்டு நிலைகள். சமாதி நிலை என்பது 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது' என்று ஒரு சித்தர் பாடல் உண்டு.

சிந்திப்பதால் தான் நான் இருக்கிறேன் என்பது டெஸ்கார்டஸின் புகழ் பெற்ற வாசகம். நாம் சிந்திப்பது எப்போது என்று பார்த்தால் நமக்குச் சவால்களாகப் பிரச்சினைகள் உருவாகும்போது மட்டுமே என்றும் சொல்லப்படுவதுண்டு.
அவ்விதம் சிந்திக்கையில் வெளிப்பார்வையின் சாராம்சம் உள்பார்வையாகவே இருக்கிறது. தன்னைச் சுற்றியுள்ள வெளியுலகத்தைத் தனது பார்வையினால் உள்வாங்குகிற மனிதன், உள்வாங்கும் முறையில் சக மனிதருடன் வேறுபடுகிறான். இந்த வேறுபாடு கவனம், நினைவு, சிந்தனைமுறை ஆகிய பலவற்றைப் பொறுத்து அமைகிறது.

உளவியல் ரீதியாக நாம் பார்க்கிறோம் என்பதை திருமூலர்,

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று அழகாகக் குறிப்பிடுகிறார். நாம் காணும் பொருளின் காட்சிக்கு இரண்டு நிலைகள் உள்ளன.ஒரு நிலை, பொருள் கண்வழிப் புகுந்து மனதால்பாதிக்கப்படுவதற்கு முன்னிருப்பது. மற்றொரு நிலை, மனம் செயல்பட்டபின் தோன்றும் நிலை. இது இமானுவேல் கான்ட் ஒப்புக்கொண்ட ஒரு தத்துவம்.

கண்ணில் தெரியும் வடிவத்தின் தொடர்பான ஒரு சிந்தனையோட்டம் பார்த்தல் என்ற செயல்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. மனம் என்பது அந்த வடிவத்தைப் பதிய வைக்கின்றது. சுருக்கமாக மனிதனுக்கு வெளியே இருக்கும் யதார்த்தம், அவனுக்கு உள்ளே இருக்கும் உலகத்தின் கட்டளைக்கு ஏற்ப அறியப்படுகிறது. இந்த உள்லுலகம் ஒருவன் சார்ந்திருக்கும் சமூகம், பண்பாடு ஆகியவற்றைப் பொறுத்துக் காணப்படுகிறது. முக்கியமாக சூழ்நிலை என்பது பெரும்பங்கு வகிக்கிறது. சூழ்நிலை என்பது ஒரு சமூகத்தின் ஒருமித்தப் பார்வை. இந்தப்பார்வை சக மனிதரோடு பழகும்போது மேலும் பண்படுகிறது அல்லது விரிவடைகிறது முக்கியமாக கற்றுகொள்ளுதல் என்பது நிகழ்கிறது. மேலும், இந்தக் கற்றுக்கொள்ளுதல் என்பது சூழ்நிலைக்கேற்பத் தன்னைத் தயார் செய்துகொள்ள உதவி செய்கிறது.

ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவை அடைய தத்துவ சாஸ்திரத்தில் பிராமாணங்கள் என்பன பயன்படுகின்றன. அறிவு எனச் சொல்லும்போது ஒன்றைப் பற்றி நாம் பெற்ற அரிவு உண்மையானதா என்பது அந்த அறிவை நாம் எந்த வழியில் பெற்றோம் என்பதைப் பொறுத்தது. அறிவை விட அறிவைப் பெறும் வழி மிக மிக முக்கியமானது. இதற்கு தர்க்கரீதியாகவும் செல்ல முடியும். இந்தத் தத்துவத்தை நியாய சூத்திரம் என்ற நூல் கெளதமாரல் இயற்றப்பட்டது அழகாக விளக்குகிறது. கெளதமருடைய நியாய சூத்திரத்துக்கு வாத்ஸ்யாயனரும் விளக்கம் எழுதியுள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. இவர் ஆண்-பெண் உறவு பற்றிய நூலை எழுதியவர்.

பிரமாணங்கள் ஆறு. அவை பிரத்யட்சம், யூகம், ஆப்தவாக்கியம், உபமானம், அருத்தாபத்தி, அனுபலப்தி எனப்படும்.

1. பிரத்யட்சம் என்பது ஐம்புலன்களால் உணரும் ஒரு ஆதாரம். நெருப்புச் சுவாலை இதற்கு உதாரணம்.

2. யூகம் என்பது ஒன்றைக்கொண்டு மற்றதை யூகித்து உணர்வது. நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழி இதற்கு உதாரணம்.

3. ஆப்தவாக்கியம் என்பது அனுபவசாலியின் சொற்களைக்கொண்டு, ஆதாரமாகக்கொண்டு அறிவது. அந்தப் பக்கம் தெரியும் நெருப்பு காட்டில் ஆதிவாசி மக்கள் கொளுத்துவதால் தெரிவது என ஒருவர் சொல்ல அறிவது இதற்கு உதாரணம்.

4. உபமானம் என்பது ஒரு பொருளைக்கண்டவுடன் தாமாகவே அதுபோல உள்ள வேறு ஒரு பொருளின் சாயலில் இனம் காண்பது. இந்தப் பெண் ஜோதிகா என்ற நடிகையைப் போல இருக்கிறாளே ? என்று எண்ணும் எண்ணம் இதற்கு உதாரணம்.

5.அருத்தாபத்தி என்பது காட்டும் வழி சற்று சிக்கலானது. மற்ற மேற்சொன்ன வழிகளில் கிடைக்காத புது அறிவைக் கொடுப்பதுதான் இந்த வழி. இதற்கு உதாரணமாக, ஒருவன் உடல் பருத்திருக்கிறான். அவன் பகலில் உண்பதேயில்லை. அவன் உடல் பருத்தது எப்படி? எனக் கேட்டால் அவன் இரவில் உண்கிறான் என்று பதில் வரும். இந்த பதிலில் இரவில் உண்கிறான் என்ற அறிவு எப்படி வந்தது ? அந்த அறிவு தான் அருத்தாபத்தி.
யோசித்துப்பார்த்தால், மேற்சொன்ன மூன்றும் கூட லேசாக இந்த உதாரணத்தில் சாயல் காட்டும் ஆனால், அவை இதற்குப் பொறுந்தா.

6. அனுபலப்தி என்பது இன்மையை அறியும் அறிவு. இல்லாததை இருப்பதைப்போல அறிவது. சற்று முன் புறப்பட்ட இரயிலை இப்போது பார் என்று சொன்னால், இரயில் இல்லையே, புறப்பட்டுப் போய்விட்டதே என்று பதில் வரும். இப்பதில் இருப்பதைக் கண்டேன் என்று சொல்வதைப்போல இல்லாததைக் கண்டேன் என்று சொல்வதற்கு ஒப்பானது. காணாததைக் கண்டேன் என்று சொல்வதைப் போல.

இந்தப் பிரமாணங்கள் எங்கும் பயன்படக்கூடியவை. இவற்றைப் பயன்படுத்தி மனமானது வேண்டிய உருவை அடைகிறது. தண்ணீர் தான் இருக்கும் பாத்திரத்தின் அளவையும், உருவையும் பெறுவது மாதிரிதான்.
வாழ்வெனும் மகாநதியான ஆற்றில் நீந்திச் செல்ல உதவும் இந்த ஆறும் மனப்பயிற்சிக்கு உதவுபவை. வாழ்வைக் காப்பது விவேகமான மனம். எப்பொருளிலும் காரியம் யாது காரணம் யாது என்று பார்த்து நடந்தால் கோர்வை பிறழாமல் வாழ்வு நடக்கும்.

Monday, April 24, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 301

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நாம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)கண்முன் உலகம் விரியும்
உள்ளங்கையில் உள்ளது கணினி-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

சந்திரனை தொடலாம் - நாளை
செவ்வாயில் வசிக்கலாம் ஒளியின்
வேகத்தை மிஞ்சலாம்விதையின்
பாகத்தை மாற்றலாம் – ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

கண்டம் விட்டு கண்டத்தை ஏவு
கணைகளால் தொடலாம் உடல்
பிண்டத்துடன் பறக்கலாம் விண்ணில்-ஆனால்
கணினிகள் காட்டும் உலகம் கணினி
காட்டுமோ மனித இதயம்

மனிதன் வகுத்த நெறிகள் இங்கு
மனிதனை வாழ விடவில்லை இன்று
மனிதன் படைத்த கருவிகளால் -மனித
மனசை புரிய வழியில்லை -உலகில்
மனிதனை மனிதன் சுரண்டுவது
மடியும் காலம் வருமோ - மீள
வழிகள் காட்டி தருமோ!
* குறிப்பு

1. மனித வாழ்க்கையில் கம்ப்யூட்டர் போன்ற பல அறிவியல்
கருவிகள் வந்தபின்பும் மனிதநேயம் வளரவில்லை
அது வளர்ந்தால்தான் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் பலன் என்ற கருத்தை வலியுறுத்த இந்த கவிதைஎழுதப்பட்டது

நம்பிக்கை போட்டிக்கான கதை - 101

எவரோ கல்லெறிந்து...


(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)

குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தான் அலிக்கு நிம்மதியான மூச்சு வந்தது. ஹாயாக அந்த மருத்துவ மனையின் வெளி வராண்டாவில் காலை நீட்டி உட்கார்ந்தார். 'பதினோரு வருட ஏக்கத்திற்கு இறைவன் முடிவை கொடுத்திருக்கான்' மன நிம்மதியில் கண்களை மூடிக் கொண்டார்.

'குழந்தையும் தாயும் நலமா இருக்காங்க உள்ள போய் பாருங்க..' நர்ஸ் முக மலர்ச்சியுடன் சொன்னதும் ஆபிதாவிற்கு குதூகலம் தாங்கவில்லை. பேரபிள்ளையைப் பார்ப்பதற்கு உள்ளே ஓடினாள். கையையும் காலையும் சுருட்டிக் கொண்டு குழந்தை படுத்துக் கிடந்தது. நூரி ஆபிதாவை பார்த்து சிரித்தாள். பக்கத்தில் உட்கார்ந்த ஆபிதா மருமகளின் தலையை தடவினாள்.

'இப்போ சந்தோசந்தானே மாமி.. எனக்கு கொழந்த இல்லே'ன்னு ஊரார் சொன்னப்பவெல்லாம் நம் குடும்பத்தாரும் சேர்ந்துக் கொண்டு என்னை வதைத்தாங்க, நான் பட்ட மனகஸ்டத்துக்கெல்லாம் இறைவன் ஒரு வழி காட்டியிருக்கான்.. நூரியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. ஆபிதாவும் கண்கலங்கினாள்.

'டேய் உமர் ஒனக்கு ஆண் கொழந்த பொறந்திருக்கு எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா.. நீ எப்ப ஊர் திரும்பற, கொழந்த ஒன்ன மாதிரியே இருக்கான் சீக்கிரம் பொறப்பட்டுவா..'

'எனக்கு பிஸினஸ் லோட் ஓவரா இருக்குமா..' எதிர்முனையில் தெலிபோனில் உமர்.
'நீயும் கல்யாணத்துக்கு முன்னே இருந்து பிஸினஸ், பிஸினஸ்ன்னுதான் அலஞ்சிகிட்டு இருக்கே. உம்மனைவி பத்திக்கூட ஒனக்கு கவல இல்லே கொழந்த பெத்தவ ஒன்ன பாக்குறதுக்கு ஆசையா இருப்பா..சீக்கிரம் வா..'
'...................'
'வீடு சந்தோசமா இருக்குடா..இப்ப நீ இல்லாம இருந்தா நல்லா இருக்காது. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம் உடனே நீ வா..'

ஆபிதா சொன்னது போல் அந்த வீடு சந்தோசத்தில் மிதந்தது. 'அலியை எட்டி உதைக்க இந்த பேரன் வந்துட்டான்' பலர் ஜாலியாக பேசியபோது அலி மெய்மறந்து நின்றார்.

'நூரிமா கொழந்தைக்கு யார் கண்ணும் பட்டுட போகுது ஜாக்கர்தயா பாத்துக்க' அக்கறையுள்ள எவரோ சொன்னதும் நூரி எச்சரிக்கையானாள். பாதுகாப்பிற்காக அவள் நினைத்ததையெல்லாம் செய்தாள். ஊர் வந்த உமர் குழந்தையை நெருங்கும் போது கூட பல கண்டிஷன் போட்டாள்.

'ஏங்க நம்ம புள்ள எப்படி இருக்கான்'

'ஒன்ன மாதிரியே இருக்கான்'

'இல்லங்க உங்கள மாதிரிதான் இருக்கான் உங்கள மாதிரி இருக்கனும்னு தான் நான் ஆசைப்படறேன். இந்த ஒரு பாக்கியம் கிடைக்க லேட்டானதில் நா எவ்வளவு ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகினேன்.. கொஞ்சம் கூட இறக்கமில்லாம எனக்கு என்னவெல்லாம் பட்டம் கொடுத்தாங்க..' நூரியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

'ச்சீ..ஏன் பைத்தியக்காரத்தனமா பேசறே..புத்தியில்லாதவங்க ஏதாவது பேசிக்கிட்டுதான் இருப்பாங்க, அதையே நெனச்சிகிட்டு இருக்காதே..' உமர் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு ஆறுதலாக பேசினான். விளக்கும் அணைந்து கொண்டது. வீடு சகஜ நிலைக்கு திரும்பியது. குழந்தை உட்கார்ந்து தவழ்ந்து நின்று நடந்து மழலை பேசி வீட்டிற்கு வந்து செல்லும் எல்லோரையும் வசீகரித்துக் கொண்டது.

'என்னவோ தெரியல டாக்டர், காலைல இருந்து ஜொரம் அடிக்குது. எதுவும் சாப்பிடல. ஒழுங்கா இருந்த பிள்ளைக்கு ஏன் இப்படி திடீர்னுன்னு தெரியல.'

டாக்டர் செக் பண்ணி மருந்து மாத்திரை கொடுத்தார். 'இரண்டு நாள் கழிச்சி வாங்க' சொல்லி அனுப்பினார். இரண்டு நாட்களில் ஜூரம் கொஞ்சம்கூட குறையவில்லை. வீடு சோகத்தில் மூழ்கியது. படிப்பறிவு இல்லாதவர்கள் பலவித சடங்கு செய்ய வற்புறுத்தி சென்றனர். மீண்டும் டாக்டரிடம் சென்றதும் 'மெட்ராஸ் செல்லுங்கள்' என்ற கூறி விட்டார்.

'மிஸ்டர் உமர், நீங்களும் உங்க மனைவியும் உடனடியா இரத்த டெஸ்ட் பண்ணனும்..'

'ஏன் டாக்டர் என்ன பிராப்ளம்'

'ஸாரி உமர் உங்க குழந்தைக்கு ஹெச்-ஐ-வி கிருமி தாக்கியிருக்கு நீங்க கடவுளிடம் வேண்டுவதை தவிர வேறு வழியில்லை'
உமர் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

'இது துர்பாக்கியமான நிலைதான், உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க வாழ்க்கையில் ஏற்பட்ட விபத்துக்களை சொல்லுங்க..'

'உண்மை தான் டாக்டர் நான் பிஸினஸ் சம்பந்தமா வெளியூரில் தங்கிய நேரங்களில் சில தடவை தவறியிருக்கேன் ஆனா நான் இதை எதிர்ப்பார்க்கல டாக்டர்.

'இன்னக்கி உலகில் இருக்கும் ஹெச்-ஐ-வி காரங்களெல்லாம் அதை எதிர்பார்த்து பெற்றுக் கொண்டவங்களல்ல.. கட்டுபாடற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் சீரழிவு இது. இந்த கட்டுப்பாடட்ற போக்கு தொடர்ச்சியா பல உயிர்கள பலி வாங்கி விடுகிறது. பாவம் உங்க மனைவியும் குழந்தையும்' **

உமர் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதான்.

'பதினாரு வருசம் குழந்த இல்லாம இருந்தேன். இந்த குழந்த கிடைத்த சந்தோசத்த இன்னும் முழுமையா அனுபவிக்கல அதற்குள் இப்படி ஒரு சோதனை...' முடிக்க முடியாமல் தேம்பி அழுதான்.

'முடிவு தெரிஞ்ச பிறகு அழுது பிரயோஜனமில்ல உமர், இருக்கும் காலத்தை சந்தோசமாகவும் இதன் விளைவுகளை மக்களுக்கு விளக்கும் விதமாகவும் அமைத்துக் கொள்ளுங்கள்.' டாக்டர் ஆருதல் சொல்லி விட்டு நகர்ந்தார்.

தன் உயிரோடு விளையாடும் ஹெச்-ஐ-வி பற்றி தெரியாமல் குழந்தையின் மீது கவிழ்ந்து கிடந்தாள் நூரி.


--------------------------------------------------------------------------------

எயிட்ஸ் பற்றிய ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தகாத உறவுகள் வியாபித்து நீடிக்கின்றன. தகாத உறவால் சம்பந்தமே இல்லாத உறவுகள் கூட வாழ்க்கையை தொலைக்கும் நிலையை மீண்டும் தமிழ் இதயங்களுக்கு நினைவுறுத்தவே இந்த சிறுகதை.

Friday, April 21, 2006

நம்பிக்கை ஆண்டு விழா போட்டி - அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா கதை , கவிதை மற்றும் கட்டுரை போட்டி அறிவிப்பு மடல் இணையத்தின் இனிய நண்பர்களே! வணக்கம்!

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:

1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.

2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.

போட்டி விதி முறைகள்:

1. படைப்பாளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் போது படைப்பின் தரம் குறைகிறது. அதனால் இது தான் தலைப்பு என்று தருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தலைப்பை படைப்பாளிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் படைப்பைப் பிறர் படிக்கும் போது இப்படிக் கூட ஒரு பார்வை இருக்க முடியுமா என்று பிரமிக்க வைப்பதாக இருப்பது அவசியம்.

2. உங்கள் படைப்பு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ அல்லது இலக்கியங்களை நயம் படச் சொல்லும் ஆய்வாகவோ இருக்கலாம். மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட அல்லது தத்துவம் சார்ந்ததாய் இருத்தல் மிகச் சிறப்பு.

3. சாடலாக இருந்தாலும், தன் கருத்தை ஆணித்தரமாக கூறினாலும் அது நாகரீக எல்லையைத் தாண்டாதவாறு பார்த்துக் கொள்வது குழும நட்பிற்கு நல்லது.

4. கட்டுரையில், கவிதையில், கதையில் ஏதாவது முக்கிய விஷயங்களைக் கூறுகையில் ஆதாரம் இருந்தால், * புள்ளியிட்டு அதனை படைப்பின் முடிவில் தருதல் நலம்.

5. குறைந்த வார்த்தைக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் படைப்பு சிறந்ததாகக் கருதப்படும்.

6. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்

தேர்வுக் குழு : படைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள். உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.

பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்கள் கட்டுரையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தங்களது படைப்பைப் பற்றி உண்மையாகத் தெரிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை. கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.

ஆன்மிகம் சம்பந்தமாய் வரும் படைப்பிற்கு சிறப்பு பரிசாக பொற்காசு பரிசளிக்க இனிய ஆன்மீக நண்பர் ஆவல் கொண்டு உள்ளார்.

அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம். தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள். மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

முக்கியக் குறிப்பு : தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!

இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/

Thursday, April 20, 2006

தன்னம்பிக்கையின் மறுபெயர் அலி அப்பாஸ்


அலி அப்பாஸ் என்கிற சிறுவனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?...


நிச்சயம் இருக்கவேண்டும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஈராக் போரில் அமெரிக்க விமானங்கள் குண்டு வீசித் தாக்கியபோது அதில் தனது பெற்றோர் உட்பட 16 உறவினர்களைப் பறிகொடுத்த சிறுவன்தான் அலி அப்பாஸ்.

இதில் இன்னொரு வேதனை யான விஷயம். குண்டு வெடிப்பில் அலி அப்பாசின் இரண்டு கைகளும் துண்டாகி விட்டன. அப்போது அவனுக்கு 12 வயதுதான்.


துள்ளித் திரிந்து விளையாட வேண்டிய இளங்கன்று பருவத்தில் இருந்த அவனுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை வெளியே தெரிய வந்தபோது உலகமே அதிர்ந்து போனது.

பண்ணிய பாவத்திற்கு பரிகாரம் தேடுவதுபோல் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அலி அப்பாசை இங்கிலாந்து அரசாங்கம் மேல் மருத்துவ சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் சென்றது. இப்போதும் அவன் லண்டனில்தான் தங்கியிருக்கிறான்.

அவன் பள்ளிக் கூடப் படிப்பையும் தொடர்ந்து வருகிறான். கைகள் இரண்டையும் பறி கொடுத்து விட்டாலும் அலி அப்பாஸ் நம்பிக்கையை மட்டும் தளரவிடவில்லை.

அவனுக்கு கால்பந்து விளையாட, செயற்கை கைகளை பயன்படுத்தி உணவு சாப்பிட, பொருட்களை எடுக்க என்று பல்வேறு விதமாக அவனது சோகம் மறைய பயிற்சி தரப்பட்டது. 6 மாதங்களுக்குப் பின்னர் அவனது அந்த நாள் ஞாபகங்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கின.

இதனிடையே கால்களைக் கொண்டு ஓவியம் வரையவும் பழக்கினார்கள். என்ன ஆச்சர்யம், நான்கே மாதங்களில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் வாட்டர் கலர் ஓவியங்கள் வரையப் பழகி விட்டான்.

அப்படி அவன் வரைந்த 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் அண்மையில் தெற்கு லண்டனில் உள்ள ரிச்மாண்ட் ஆர்ட் காலரியில் விற்பனை கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறது. மே மாதம் 26-ந்தேதி வரை அலி அப்பாசின் ஓவியக் கண்காட்சி நடக்கிறது.

விற்பனையாகும் இந்த ஓவியங்கள் மூலம் கிடைக்கும் தொகையை ஈராக்கில் உள்ள தன்னைப் போன்ற கை, கால் இழந்த சிறுவர்களுக்காக உதவப் போகிறான், அலி அப்பாஸ். இதே போல் அனாதைக் குழந்தைகளுக்கும் ஓரளவு நிதி திரட்டிக் கொடுத்து உதவப் போகிறானாம்.

கைகளை இழந்த நிலையிலும் தனது நாட்டுக் குழந்தைகளுக்கு கைகொடுக்க நினைக்கும் அலி அப்பாசின் நல்லெண்ணம் பாராட்டப்பட வேண்டியதே!

நன்றி: தினத்தந்தி

Wednesday, April 19, 2006

"நம்பிக்கை ஆண்டு விழா" போட்டி அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா
கதை , கவிதை மற்றும் கட்டுரை போட்டி
அறிவிப்பு மடல்


இணையத்தின் இனிய நண்பர்களே! வணக்கம்!

உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்குப் புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:

1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.

2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.

3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.

போட்டி விதி முறைகள்:

1. படைப்பாளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் போது படைப்பின் தரம் குறைகிறது. அதனால் இது தான் தலைப்பு என்று தருவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தலைப்பை படைப்பாளிகளே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஆனால் படைப்பைப் பிறர் படிக்கும் போது இப்படிக் கூட ஒரு பார்வை இருக்க முடியுமா என்று பிரமிக்க வைப்பதாக இருப்பது அவசியம்.

2. உங்கள் படைப்பு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, கதையாகவோ அல்லது இலக்கியங்களை நயம் படச் சொல்லும் ஆய்வாகவோ இருக்கலாம்.
மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட அல்லது தத்துவம் சார்ந்ததாய் இருத்தல் மிகச் சிறப்பு.

3. சாடலாக இருந்தாலும், தன் கருத்தை ஆணித்தரமாக கூறினாலும் அது நாகரீக எல்லையைத் தாண்டாதவாறு பார்த்துக் கொள்வது குழும நட்பிற்கு நல்லது.

4. கட்டுரையில், கவிதையில், கதையில் ஏதாவது முக்கிய விஷயங்களைக் கூறுகையில் ஆதாரம் இருந்தால், * புள்ளியிட்டு அதனை படைப்பின் முடிவில் தருதல் நலம்.

5. குறைந்த வார்த்தைக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் படைப்பு சிறந்ததாகக் கருதப்படும்.

6. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்:

14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்

தேர்வுக் குழு :

படைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள்.

உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.

பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும். பிறரின் விமர்சனங்கள் கட்டுரையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.

தங்களது படைப்பைப் பற்றி உண்மையாகத் தெரிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை.

கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.

ஆன்மிகம் சம்பந்தமாய் வரும் படைப்பிற்கு சிறப்பு பரிசாக பொற்காசு பரிசளிக்க இனிய ஆன்மீக நண்பர் ஆவல் கொண்டு உள்ளார்.

அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும்.

நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பரஞ்சோதி paransothi@gmail.com
2.உமாநாத்(எ) விழியன்
umanaths@gmail.com
3.பாஸிடிவ்ராமா
positiverama@gmail.com

இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

முக்கியக் குறிப்பு :

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி!


இவண்,
நம்பிக்கை நண்பர்கள்
கூகுள் குழுமம்.
http://groups-beta.google.com/group/nambikkai/

Saturday, April 15, 2006

வெற்றித் தடங்க(ல்)ள்!

நண்பர் கடலூர் நடேசன் அவர்களின் மூலமாக "நம்பிக்கை"க்கு ஒரு அருமையான கவிதை வந்திருந்தது. இதோ இங்கு அதைக் காணுங்கள்!

அடித்தல் திருத்தலின்றி
அற்புத கவிதைப் பிறப்பதில்லை
மடித்தல் ஒடித்தலின்றி
அணிகலனாய் தங்கம் சிறப்பதில்லை

அணை தடுத்தல் சிறைப் படுத்தலின்றி
ஆற்று நீர் பயிரிடைப் பாய்வதில்லை
வளர்பிறை தேய்பிறை இன்றி
வானில் முழு நிலா காய்வதில்லை

அழுதல் விழுதல் இன்றி
மழலை தளிர் நடை பயில்வதில்லை
அழுத்தி ஆழ உழுதலின்றி
நெல்மணி துளிர்ப்பதில்லை

துயரம் பிறர் துரோகமின்றி

செய்த தவறுகளும் புரிவதில்லை!
தடங்கல்தோல்வி இன்றி வாழ்வில்
வெற்றித் தடங்களும் தெரிவதில்லை!!!

தடங்கலின்றி தோல்வி இன்றி வாழ்வில்
வெற்றித் தடங்களும் தெரிவதில்லை!!!

- அனந்தலஷ்மி (மாதர் சங்கம், கடலூர்)

Thursday, April 13, 2006

நம்பிக்கை பாடல்கள்!

விழியனின் கடிதம் :
நம்பிக்கை நெஞ்சங்களே,

அடியேனின் ஒரு சின்ன வேண்டுகோள். சில வாரங்கள் முன்னர் வேலூரில் ஒரு நிர்வாகியை சந்திக்க நேரிட்டது, அவர் பல ஊனமுற்றோர் ,அனாதை இல்லங்களோடு தொடர்பு கொண்டு தொண்டாற்றி வருகின்றார். அவர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை உங்களிடம் வைக்கின்றேன்.

இது போன்ற இல்லங்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவு உணவின் போதும், நாளை துவங்கும் பழைய போதும் பாடல்களை பாடிவருகின்றனராம்.புதிய சிந்தனையோடும், நம்பிக்கையோடும் சில பாடல்கள் அவர்களுக்கு வேண்டுமாம்.

நம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல நல்ல பாடல்களை இயற்றுவோம். அனைவரையும் ஆர்வமுடன் பங்கோற்க அழைக்கிறேன். எழுத்துக்கள் ஏட்டிலும் நெட்டிலும் இருப்பதை காட்டிலும் மாணவர்கள் மனதில், அன்புக்கு ஏங்குவோருக்கு உறுதுணையாக இருப்பின் அதுவே நம் உண்மையான வெற்றி என்று கருதுகின்றேன்.

ஏற்கெனவே மற்ற கவிஞர்களின் பாடல்களையும் இங்கே இடலாம். நாம் அனைவரும் சேர்ந்து சரி செய்து ஒரு பத்து பாடல்களை தேர்வு செய்வோம். நிச்சயம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒரு ஊரில் ஒலிக்க துவங்கினால் அது தமிழகம் எங்கும் ஒலிக்கும். நம் நம்பிக்கை குழுவிற்கு பெருமை சேர்க்கும்.

மேலும் கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கபடுகின்றது. வார்த்தைகள் எளிமையாக இருத்தல் நலம்.

வாருங்கள் நம்மால் முடிந்த நம்பிக்கையை பிஞ்சுகளின் உள்ளத்தில் விதைப்போம்.

நன்றியுடன்
உமாநாத் (எ) விழியன்


முதல் பாடல் தருபவர் ஆன்மீக அன்பர் காழியூரான் சம்பந்தன் அவர்கள்!

இரவின் முடிவில் விடியல் இருக்கும்!
விடியும் 'பொழுது' ஒளியின் துவக்கம்!
ஒளிக் கம்பியிலே சுருதியை கூட்டு!

ஒவ்வொரு மூச்சிலும் ஆனந்தம் காட்டு!

வைத்திடும் அடி ஒவ்வொன்றிலும் உறுதி
தோல்வியைப் பொசுக்கும் ஊழிப் பெருந்தீ
உலகோர் அனைவரும் எம்முடையோரே!
நன்றே செய்ய அருள்வாய் சக்தீ!

சிந்திடும் வியர்வையும் நிலந்தனில் உரமாய்
இரேசிக்கும் காற்றும் மரத்திற்கு வாழ்வாய்
செய்திடும் செயலும் பிறர்கொரு பலனாய்
ஆகிட அருள்வாய்! கேட்டேன் தருவாய்!


பயமது பொடிபட தயக்கம் இடிபட
தொடர்ந்து நடப்பேன் வாழ்வை வழிபட!
என்னுடன் இருப்போர் பலருண்டு
நான் தனியில்லை பெரும் படையுண்டு!

- காழியூரான்இரண்டாவது பாடல் தருபவர் கனடா திருமதி. விஜிசுதன் அவர்கள்

துணிவாய் இரு! துடிப்பாய் எழு!
எதுவும் நடக்கலாம்
விழிப்புடன் இரு!

வீண் கனவுகள் தகர்த்து!
இளமையை நகர்த்து!
நாளைய உலகம்
உன் நம்பிக்கை விதைப்பு!

கல்விகள் சொல்லும்
பாடங்கள் கொஞ்சம்!
காலமே உணர்த்தும்
வாழ்க்கையில் மிச்சம்!

உந்தன் விரல்கள்

உளியின் நகல்கள்!
உண்மையோடு உன்னைச் செதுக்க
மிளிரும் நிஜங்கள்!

தோல்வி என்பது

வெற்றியின் தொடக்கம்!.
துணிந்தால் மலையும்
கடுகாய் சிறுக்கும்!.

எந்த இடரும்

தகர்த்து நிறுத்து!
நம்பிக்கைகளின்
கரங்கள் கோர்த்து!!...

உந்தன் வாழ்க்கை

உந்தன் கைகளில்!
உன்னை அறிந்தால்
வெற்றி உன் தோள்களில்!.

-- சுதனின்விஜி

மூன்றாவது பாடலைத் தருபவர் பாஸிடிவ் ராமா

சாதிக்கப் பிறந்தோம்!

சாதிக்கப் பிறந்தோமே நாமடா - இதை
சந்தோஷ மாகக் கொண் டாடடா!
வீதியிலே வரும் கேலிப்பேச்சை எல்லாம்
எச்சமாய் துச்சமாய் தள்ளடா!

( சாதிக்கப் பிறந்தோமே...)

சாதிமதம் என்ற பாகுபாடு - இங்கு
ஏதும் நமக் கில்லையே
நீதி தேவனே உன்தாழ் பணிந்தோம்
நிம் மதியே அடைந் தோம்!

( சாதிக்கப் பிறந்தோமே...)

வானம் வசப்படும் தூரமே - நம்
வாழ்வினில் வசந் தம் வீசுமே!
ஊனம் மனதினில் இல்லையே - மன
ஊக்கம் நம் வெற்றியைச் சொல்லுமே!

( சாதிக்கப் பிறந்தோமே...)

அன்னை பாரதம் தந்தை வான்வெளி
தாயகம் போற்றித் தான் வாழுவோம்!
யாதும் ஊர் எனப் பாடுவோம்
யாவரும் கேளிர் என் றாடுவோம்!

(வானம் வசப்படும் ...)

சிந்தை அனைத்தையும் கல்வியில் சேர்த்து
சீரிய வெற்றியைக் காணு வோம்!
நற்குணம் கொண்டு அல்லவை வென்று
கற்புடை வாழ்வுதான் வாழு வோம்!

(வானம் வசப்படும் ...)

சாதிக்கப் பிறந்தோமே நாமடா - இதை
சந்தோஷ மாகக் கொண் டாடடா!
வீதியிலே வரும் கேலிப்பேச்சை எல்லாம்
எச்சமாய் துச்சமாய் தள்ளடா!

- பாஸிடிவ் ராமா