நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, May 06, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 102

அஸிபத்ர வனம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்)


நசிகேதன் முதலில் எல்லோரையும் விழுந்து வணங்குகிறான். பின் தாய், தந்தையை வணங்குகிறான். தன் குருவான யமன் இருக்கும் திசையை நோக்கி மனதில் தியானித்து வணங்கிவிட்டு சபையோரை நோக்கிக் கூச்சமில்லாமல் எளிய நடையில் மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறான்.

பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் உள்ளுறையும் ஆத்மாவை நான் வணங்கி என் பேச்சைத் துவங்குகிறேன். விற்பன்னர்களும், தர்க்கப்புலிகளும் கூடியுள்ள இந்த இச்சபையில் என்னைப் பேசச்சொல்வது என் பேரில் உள்ள உங்கள் பிரியத்தையே காட்டுகிறது. பெரிய ஆலமரத்தின் கீழ் சிறு செடி முளைக்குமா ? ஆனாலும், உங்களன்பால் தூண்டப்பட்டு நான் இதோ நிற்கிறேன். இனி என்னைப் பேச வைப்பது உங்கள் கருணையின் பொறுப்பு.

தந்தையால் வெறுத்து ஒதுக்கப்பட்டு யமன் எதிரே சென்று வாழ்க்கை இரகசியங்களைப் பற்றி உரையாடிய ஒரு சத்திய வேட்பாளனின் நித்திய அதிருப்தி கொண்ட சாகச மனதின் அனுபவமே என் பேச்சு.

யமனைச் சந்திக்க நான் எடுத்த முயற்சிகள் இயல்பானது, ஏகாந்தமானது. மூன்று இரவுகள் முழுப்பட்டினியாக இருந்தேன். அந்த மூன்று இரவு முழுப்பட்டினிக்கு எப்போதும் பழியைத் தன் மீது ஏற்காத யமன் மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும்படி தந்தார்.

நான் கேட்ட முதல் வரம் என் தந்தை அமைதியாக மகிழ்ச்சியுடன் என்னை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வரத்தின் பயனால் நான் உங்கள் முன் இப்போது இருக்கிறேன். இரண்டாவது வரம் வயோதிகமும், மரணமும் தீண்டாத சொர்கத்தை அடைவது எப்படி என எனக்குத் தெரிய வேண்டும் என்றேன். இதற்கு ஒரு யாகமும், அந்த யாகத்தீ நசிகேதாக்னி என்று என் பெயராலேயே என்றும் அழைக்கப்படும் எனச் சொல்லி எனக்கு அந்த யாகம் செய்யும் வழிமுறைகள் கற்பிக்கப்பட்டது. மூன்றாவது வரம் மனிதன் இறந்து முடிந்தால் அவன் ஆத்மா எஞ்சியிருக்குமா ? என்ற கேள்விக்கு பதிலாக எதார்த்தமான ஆன்மீகத் தத்துவம் நீண்ட நெடிய சோதனையில் நான் தேர்ச்சி பெற்ற பின் எனக்கு போதிக்கப்பட்டது.

என் அனுபவம் எவ்வளவு சிறந்தது என்று இன்று எண்ணிப் பார்க்கிறேன். என்ன பதில் ? என்றே அலைந்தேன். இன்று என்ன கேள்வி ? என்று எஞ்சியுள்ளேன். பசியுள்ள மனிதன் தன் பசியை உணர்ந்தபின் அதைத் தணிக்க முயன்றாலும் முடியாததைப்போல நான் எவ்வளவு முயன்றாலும் என் கேள்விகளைத் தணிக்க என்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறேன்.

என் அனுபவ அறிவை விவரிக்க எண்ணும்போதே அது விவரிக்க முடியாதபடிக்கு போய்விடுவதை என்னால் உணர முடிகிறது. நான் தேடி அலைந்த பதில்களெல்லாம் எனக்குத் தெரிந்தவையே. இது எப்படி என்றால் எனக்குத் தெரியாத ஒன்றை என்னால் கேட்க முடியாது. எனவே, எனது பதில்களும், எனது கேள்விகளும் நான் என்ற ஒரு வட்டத்துக்குள்ளே அடங்கிவிடுகிறது. மேலும், எப்படியாவது புரிந்து கொள்வது என ஒன்று உள்ள போது புரிந்து கொள்வதற்கு ஒன்றுமே இல்லை என்றும் ஆகிவிடுகிறது.

அறிவு என்பது இரகசியமானதல்ல. ஆன்மீக அறிவு என்றும், புலனறிவு என்றும் நாம் வேறுபடுத்திப் பார்க்கிறோம். இரண்டுக்குமே வித்தியாசம் என்பது இல்லை. நம் சுவைகள், விருப்பம், வெறுப்பு எல்லாமே நம்மால் உருவாக்கப்பட்டவை. நம் செயல்கள் எல்லாமே நல்லவை என்றோ, கெட்டவை என்றோ செயலைச் செய்வதற்கு முன் அல்லது பின் மட்டுமே ஏன் கூறப்படுகின்றன? வாழ்வில் நாம் கற்ற உத்திகளைப் பயன்படுத்தவே இவ்வாறு கூறப்படிகின்றன. எண்ணங்களும், வாழ்க்கையும் ஒன்றை ஒன்று கலந்து தொடர்ச்சியாகச் செயல்படும்போது ஒரு மாயையான வடிவம் ஏற்பட்டுவிடுகிறது.

இன்னும் இன்னும் தெளிவாக - என்று முயலும்போது தெளிவு என்பதே நம்மிடம் இல்லை என்பது தெளிவு. அமைதியை அனுபவிக்க எண்ணும் போது நிரந்தர அமைதி என்ற ஒன்றையும், இன்பத்தை அனுபவிக்கலாம் என்று எண்ணும்போது பேரின்பம் என்ற ஒன்றையும் நீட்சியாக உணர முடியும். ஆனால் நம்பிக்கை நம்மைத் தொடர்ந்து இயக்குகிறது. குறிக்கோளை அடைந்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கை.

நாம் விரும்பியது எதுவானாலும் நம்மால் அடைய முடியும். எந்த அனுபவத்தை விரும்பினாலும் நம்மால் அடைய முடியும். அனுபவம் என்பது இதனுடன் முடிந்து போகும் ஒன்றல்ல. அனுபவம் என்பது ஒரு பயணம். சேருமிடமல்ல.இந்தப் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்வதாக முயற்சிப்பவர்கள் அல்லது நம்மிடம் நடிப்பவர்கள் எனப் பல பேரை நாம் சந்திக்கலாம். நம்பிக்கையின் வேகத்தில் அத்தகையோரை நாம் அடையாளம் கண்டுகொள்ளாமல் தவற விட வாய்ப்புண்டு. அவர்களைச் சரியாக இனம் கண்டுகொண்டு அதற்கேற்ப நாம் செயல்பட வேண்டும்.

நமக்கு நாமே எப்படி உதவிக்கொள்வது என்பது நமக்குத் தெரியவில்லை என்பதுதான் விஷயம். இதில் நாம் என்பதும் உதவி என்பதும் வேறுவேறல்ல என்று நாம் உணர்ந்தால் வெளியிலிருந்து எதுவும் நமக்குத் தேவைப்படாது என்பது விளங்கும். நம் முழு உதவியற்ற நிலை என்பது காணாமல் போய்விடும். நமக்கு வெளியே எந்த சக்தியும் இல்லை. உலகில் ஏதாவது ஒரு சக்தி இருந்தால் அது நமக்குள்ளே தான் இருக்கிறது. அது வாழ்வின் துடிப்பு, உயிர் நாடி. அந்த சக்தியை நாம் வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் அதை நம்மால் அனுபவிக்க முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை விரும்புவது நம்மை இலக்கில்லாதவர்களாக ஆக்கிவிடும். நம்மை அழித்து விடும். வன்முறைக் குணத்தை வளர்த்துவிடும். நம்மைச் சந்தோஷம் இல்லாமல் செய்து தேடுதல் என்ற செயலை முன்னிறுத்தி ஒரு சுவையற்ற வாழ்வை வாழ வைத்துவிடும்.

நாய் தன் வாலையே துரத்துவதைபோல நாம் யாரோ ஒருவரின் பாதையைப் பின்பற்றுவது என்பது நமது நம்பிக்கையை அழிக்கும் ஒரு செயல். அந்த யாரோ ஒருவரும் நம்மைப் போலப் பல துரதிர்ஷ்டமான நிலைகளைக் கடந்துவந்துள்ள ஒரு சாதாரணர். பார்ப்பவர் இல்லாத பார்வை என்று ஒரு கோட்பாடு உண்டு. அதன் படி நாம் எப்படி பார்க்க வேண்டும் என்று யாரோ ஒருவர் கற்பிப்பது அவரின் பார்வையில் ஒரு விஷயத்தை நாம் பார்க்க வைத்துவிடும். இது ஒரு குருட்டுப்பார்வை. நான் பல உவமைகளை உபயோகிக்கலாம். அவை யாவும் என் பார்வையின் சாராம்சமே. ஆனால், இதையேல்லாம் சொல்லித் தரவும் ஒருவர் தேவையே. தாமாக எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்துவிடாது.

என்னிடம் வாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள் என்று யாராவது சொன்னால் அதில் உள்ள நகைச்சுவையை நாம் ரசிக்கப் பழக வேண்டும். போக விரும்பாதவனுக்குப் பாதை தேவையில்லை. போக விரும்புபவன் பாதை அவனால் உருவாக்கப்படவேண்டும். எது நன்மையானது எது இனிமையானது என்று நமக்கு யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன ? குரு சீடனின் ஆன்மீகப் பிணைப்பின் திண்மையைச் சுட்டிக்காட்டும் இப்பாடலுடன் என் பேச்சை முடிக்கிறேன்.

"ஓம் ஸஹ நாவவது
ஸஹ நெள புனக்து
ஸஹ வீர்யம் கரவாவஹை.
தேஜஸ்விநாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:"

பொருள்: எங்களைக் கடவுள் ஒன்றாகக் காப்பதாக!
நாங்கள் இருவரும் ஒன்றாகப் பரிபாலிக்கப்படுவதாக!
நாங்கள் ஒன்றிணைந்து வீரியத்துடன் செயலாற்றுவதாக!
நாங்கள் கற்று ஆராய்ந்தது தெளிவுறுவதாக!
நாங்கள் (ஒருவரையொருவர்) வெறுக்காதிருப்போமாக!

குற்றம் களைந்து குணம் நாடி அடியேனை ஆசீர்வதியுங்கள். பெரியோர்களே நமஸ்காரம். நசிகேதன் மீண்டும் ஒரு முறை ஸாஷ்ட்டாங்கமாக வணங்கிவிட்டு கைகட்டி நிற்கிறான். பெண்மணிகள் வந்து மங்களாட்சதை தூவி ஹாரத்தி சுற்றுகின்றனர்.

4 Comments:

At 11:58 PM, Blogger குமரன் (Kumaran) said...

நசிகேதஸின் மூலமாக ஒரு நல்ல சொற்பொழிவு. புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறது.

 
At 4:06 AM, Blogger மாதங்கி said...

நசிகேதஸ், துருவன், பிரகலாதன், அஷ்டவக்ரன்,.. மிக அற்புதமாக சிறிய வயதில் பெரிதாய் சிந்திக்கும் அற்புதக் குழந்தைகள்.

நல்ல கருத்துக்கள்; அசிபத்ரவனம் - பெயர் காரணம் என்னவோ? தெரிந்துகொள்ளலாமா-

 
At 4:45 AM, Blogger மாதங்கி said...

நசிகேதஸ், துருவன், பிரகலாதன், அஷ்டவக்ரன்,.. மிக அற்புதமாக சிறிய வயதில் பெரிதாய் சிந்திக்கும் அற்புதக் குழந்தைகள்.

நல்ல கருத்துக்கள்; அசிபத்ரவனம் - பெயர் காரணம் என்னவோ? தெரிந்துகொள்ளலாமா-

 
At 12:51 AM, Blogger Ram.K said...

மாதங்கி,

அஸிபத்ர வனம் என்பது யமனின் உலகிற்குச் செல்லும் வழியில் வரும் ஒரு கொடுமையான காடு. இறந்தவர்களை யம தூதர்கள் இழுத்துச் செல்லும் பாதை. இந்தப் பாதையைக் கடோபநிஷத் நாயகன் நசிகேதன் அரை வினாடியில் கடந்துவிட்டதாகப் படித்தேன். (புண்ணிய புருஷன்)

புண்ணியம் செய்தவர்கள் ஜோதி மார்க்கமாகச் செல்வர். திரும்பி வரமாட்டார்கள். நசிகேதன் திரும்பி வரவேண்டியிருப்பதால் சுட்டெரிக்கும் வெயிலும், அவலம் நிறைந்த காட்சிகளும், சீழ்பிடித்த ரத்த ஆறும் உள்ள அஸிபத்ர வனம் வழியாகவே செல்கிறான்.

அஸிபத்ர வனம் இக்கதையில் ஒரு குறியீடு.

 

Post a Comment

<< Home