சாதிக்கப் பிறந்தவன்
என் வாழ்வின் அடையாளங்களென்று
இவ்வுலகில் எதுவுமில்லை
இதுவரை - என்னைத் தவிர...
இலட்சியங்களை நோக்கிய
என் பயணப் பாதையெங்கும் -
தோல்வியெனும் முட்கள்.
கடந்து வந்த வழிகளில் எல்லாம்
இரத்தம் தோய்ந்த -
என் பாதச் சுவடுகள்.
அகல் விளக்கில் எரியும்
தீச்சுடரென என் மன உறுதி
பெரும் புயலாய் சீறும்
அவநம்பிக்கையில் அவ்வப்போது
அணைந்து போகும்.
கண்களில் நிரம்பிய கனவுகளோடு
சிறகை விரித்து வானம் அளக்கும்
சிறு பறவையென என் மனம் -
காற்றாடிகளைக் கண்டும்
ஏனோ அச்சம் கொள்ளும்..!
தொடரும் தோல்விகள்
எனைச் சுட்டாலும் - அதிலும்
பாடங்கள் பயிலும் என் உள்ளம்..!
எதிர் வரும் தடைகளும்
வெற்றிக்கான விதையாய் -
என்னில் வேரூன்றும்..!
ஆனாலும் -
தோல்விகளோடு போராடி
சமயங்களில் நான்
சோர்ந்தமரும் தருணங்களில் -
மேற்கில் விழுந்து - பின்
கிழக்கில் புதிதாய் எழும் -
சூரியன்...
தேய்ந்து - பின் வளர்ந்து -
பிரகாசமாய் ஒளிரும் நிலா...
பூமியைப் பிளந்தெழும் சிறு புல் -
இவை எனை நோக்கி
மெளனமாய் சொல்லும் -
“இளைஞனே... எழுந்திரு
நீ சாதிக்கப் பிறந்தவன்..!”
- நன்றி: சரோ - நிலாச்சாரல்.காம்
1 Comments:
அருமையான கவிதை! நிலாச்சாரலுக்கு நன்றி!
Post a Comment
<< Home