நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Wednesday, May 10, 2006

நம்பிக்கை போட்டிக்கான கட்டுரை - 203

உழைப்பவர் உலகம்

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கட்டுரை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

தோள் வலிமை படைத்தவர்கள் சண்டைபோடுவதும், சொல்வலிமை படைத்தவர்கள் கதை சொல்வதும் அவர்கள் இயல்புக்கு உட்பட்டவை. ஆனால், தோள்வலிமை உடையவர் பாடும் கவிதையும், சொல்வலிமை உடையவர் சண்டை போடுவதையும் தடை செய்யமுடியாது. அந்த வகையில் முரண்பாட்டை உணர்வதும், முரண்படுவதால் ஏற்படும் அனுபவமும் பதிவு செய்யப்படவேண்டியவை.

ஒரு வியாபார காந்தம் சினிமா எடுப்பதும் (உதாரணம் - மணிரத்னம் எம்.பி.ஏ), சினிமா அனுபவஸ்தர் அரசியலும், நாட்டை ஆள்வதும், (உதாரணம் - பலர்), சட்ட பட்டதாரி, ஆன்மீகத் துறையில் கலக்குவதும் (உதாரணம் - சுகி. சிவம்) என்னை யோசிக்க வைக்கும் சில முரண்பாடுகள். அந்தத் துறையில் சிறந்தவர்கள் இருக்கும்போது, ஒரு துறையிலிருந்து, இன்னொரு துறையில் முயன்று பார்ப்பதும், அதில் வெற்றியடைவதும் வெற்றிக்கான இரகசியத்தின் ஒரு மெளன வெளிச்சம். அவ்விதம் முயல்வோர் அவர்கள் கற்ற தனது கல்வியறிவுப் பாதையில் தோல்வியடைந்தவர்கள் என்பது இதன் பொருள் அல்ல. அவர்கள் ஒரு துறையில் கல்வி கற்று அதில் மட்டுமே போராடி வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கவில்லை, பல வழிகளில் முயன்றவர்கள்.

இது தான் நான் சொல்ல வருவது. ஆனால், ஒன்றை உனது இலக்காகக் கொள் என்று சொல்லி, அதில் மட்டும் முயன்று வெற்றியடை என்பது ஒரு பொதுவான போதனையாக இன்றும் உள்ளது. இது பல துறையில் வாய்ப்பு கிடைத்தால் முயன்று பார்க்கலாமே என்று யோசிக்கும் என்னைப் போன்ற பலருக்கு ஒரு மனத் தடையாகவே இருக்கும்.

இலக்கு என்ன என்று வகுத்துக் கொள்ளும்போது புகழடைவதும், பணம் சம்பாதிப்பதும் என்ற இரண்டில் எதை இலக்காக்குவது என்ற குழப்பத்தைச் சந்திக்க வேண்டும்.

இரண்டும் என் பார்வையில் ஒன்றுபோல தோன்றினாலும் எது முதலில் அல்லது அதை அடைய முதலில் முயற்சிக்க வேண்டும் என்றால் கோழியா அல்லது முட்டையா என்று ஒரு விவாதம் கிளம்பி விடும். இது அவரவர் வாழ்வனுபவத்தைப் பொறுத்து அமையும் கோணங்கள்.

மேலும் உழைப்பவர்களை நீலக் காலர், வெள்ளைக் காலர் என்று பாகுபடுத்தி, உடல் உழைப்பவர் நீலம் என்றும், அறிவால் யோசித்து உழைப்பவர் வெள்ளைக் காலர் என்றும் பிரித்துப் பார்க்கும் வழக்கம் அந்தக் கால மனிதர்களிடம் இன்றும் உண்டு. அந்தப் பாகுபாடு இன்று உடைந்துவிட்டது. உடலுழைப்பவர் யோசித்துச் சொல்லும் பல யோசனைகள் ஒரு நிறுவன வளர்ச்சிக்கு உதவுவதைப் பல நிறுவனங்கள் உணர்ந்து இன்று இந்த யோசனைத் திட்டத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதைபோலவே, படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் உடல் உழைப்பை நம்பி செய்யப்படும் பல வேலைகளைத் தாம் முதலில் செய்தும், அறிந்தும் நுணுக்கங்களை தம் கல்வியறிவால் ஒப்புமை நோக்கில் யோசித்துக் கற்று, நூற்றுக்கணக்கான ஆட்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்பை அவசியமாகக் கொண்ட ஆலையாக வளர்த்தும் தொழிலாளி என்று துவங்கி முதலாளி என்று அடையாள மாற்றம் அடைவதும் ஒரு சாதாரண நிகழ்வாக இன்று சாத்தியப்படுகிறது.

இதில் தனிப்பட்டவரது உற்பத்தி சமுதாயத்தின் உற்பத்தியாகவும் மாற்றம் அடைகிறது. இன்று இது நான் செய்தது என்று எந்த ஒன்றையும் யாராலும் சுட்டிக்காட்டிச் சொல்லும்படியான நிலமை எந்தப் பொருளுக்கும் இல்லாமல் உள்ளது.

"சமூகப் பகைமை" என்பது இந்த நிலமையில் ஏற்படும் ஒரு அம்சம். பகைமை என்பது இங்கு இரு வர்க்கங்களுக்கு இடையே ஏற்படும் ஒரு முரண்பாடு, பூசல் என்ற பொருளில் கையாளப்படுறது. இரு வர்க்கங்கள் தொழிலாளி மற்றும் முதலாளி என்ற இரு பிரிவினைகள்.

இந்த அம்சத்தை ஒரு 'நச்சு சூழ்நிலை' எனப் பார்க்கும் பார்வை ஒருவரை போராட்டக்காரராகவும், புரட்சியாளராகவும் ஆக்கிவிடும். அதுவே, இந்த அம்சத்தை 'வளர வாய்ப்பு' என்று பார்க்கும் ஒரு பார்வை ஒருவருக்கு முயன்று பார்க்க ஒரு சாத்தியத்தை வழங்கும். அவர் அந்த சாத்தியத்தைப் பயன்படுத்தி ஒரு வெற்றியாளராகவும் ஆகிவிட ஒரு சாத்தியம் உள்ளது.

நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம்.

0 Comments:

Post a Comment

<< Home