நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Wednesday, May 10, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 103

நாய் தாத்தாமகள்களும் என் புதிய வழுக்கையும்...

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

தூக்கம் வரவில்லை. கல்யாணம் ஆகாமல் தலை முழுவதும் வழுக்கை ஆனால் என் கதி என்ன? நினைக்க நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. என் கல்யாணத்தை குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாத அப்பாஅம்மாவை நினைத்தால் ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.

காலையில் முடி வெட்ட, ரமேஷ் கடைக்குப் போனப் பொழுது பெரிய கண்ணாடியை தலைக்கு பின்னால் வைத்து அவன்தான் காட்டினான். ரமேஷ் என்னோடுதான் படித்தான். பத்தாவது பெயில் ஆனதும், வீட்டைவிட்டு ஓடிப் போனவன், ஏழு எட்டு வருஷம் கழித்து திரும்ப வந்து, முடிதிருத்தம் ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் அவன் அம்மா, குல வழக்கம் இல்லையே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்துப் பார்த்தாள். பிறகு புரளும் சில்லறையைக் கண்டு வாயை மூடிக் கொண்டாள்.

இன்றைக்கு முடித்திருத்தகம் பக்கத்திலேயே ஆண்கள் ப்யூட்டி பார்லர் வேறு. கான்வெட்டில் படிக்கும் ரெண்டு பிள்ளைகள், காதல் மனைவியுடன் ஹீரோ ஹோண்டாவில் பறக்கிறான். நான் சுமாராய் படித்து, இன்றைக்கு வெகு சுமாரான வேலையில் குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் முப்பது வயதாக ஆறு மாசம் இருக்கிறதே, அதற்குள்ளாகவா வழுக்கை விழும் என்று நினைத்து நினைத்து துக்கப்படதான் முடிந்தது. அப்பா பிள்ளைக்கு சொத்துதான் சேர்த்துவைக்கவில்லை. இதுதான் அவர் எனக்கு தந்த சீதனம்.

காலையில் ரமேஷ், பேசாம நாய் தாத்தாவோட சின்ன பொண்ண கட்டிக்கிட்டு தியாகம் செய்யேன்னு கிண்டல் வேறு அடிச்சான். வழுக்கைக்கு ஏதாவது மருந்து இருக்கா என்றுக் கேட்டால், உதட்டை பிதுக்கினான். எம்.ஜி.ஆரில் தொடங்கி, முத்துராமன் அவர் மகன் கார்த்திக் வரை சொட்டை தலையர்களின் லிஸ்டை அடுக்கினான். முடிவளர தைலம் அது இது என்று காசை கரியாக்காதே என்று அட்வைஸ் வேறு!

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அப்பா, அம்மா சுகமாய் தூங்கிக் கொண்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எரிச்சல்தான் அதிகமானது. சரி மிட் நைட் மசாலாவாவது பார்க்கலாம் என்று எழுந்து ஹாலுக்கு வந்து டீவியைப் போட்டேன்.

சத்தியராஜ், நக்மாவை சேற்றில் போட்டு புரட்டிக் கொண்டிருந்தார். கண்கள் டீவி மேல் இருந்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை. இன்னுமா கல்யாணம் ஆகவில்லை என்று பார்கிறவர்கள் எல்லாம் கேட்கும்போது அம்மா மேல்தான் கோபம் வருகிறது. இதே மாலதியும், பாரதியும் டிகிரி முடித்தவுடனே அம்மா கல்யாணம், கல்யாணம் என்று குதித்து அவர்களுக்கு இருபத்திஐந்து வயது ஆவதற்குள் கல்யாணம் செய்து வைத்துவிட்டாள். அந்த அக்கறையில் கொஞ்சமாவது மகன் மீது இருக்கிறதா? எண்ணி எண்ணி மனதிற்குள் புலம்பதான் முடிகிறது. எந்த பெற்றோரும் மகள் கல்யாணத்தில் காட்டும் வேகத்தை, மகனுக்குக் காட்டுவதில்லை.

பேசாமல் கூட வேலைப் பார்க்கும் ஆர்த்தியை காதலிக்கலாமா, அவளும் கொஞ்சம் அதிகமாகவே என்னைப் பார்த்து சிரிக்கிறாள். பார்க்கவும் சுமாராய் இருக்கிறாள். அம்மாவுக்கும் நல்ல பாடம் கற்பித்தாமாதிரி இருக்கும். ஆனா அந்த அளவு தைரியம் ஏது என்று நினைக்கும் பொழுது, " இந்த கண்ராவியதான் பார்த்துக்கிட்டு இருக்கிறீயா? மாடிவீட்டு பானு கத்துறது காதுல விழலை? நாய்ங்க வேற ஓரே ஊளையிடுது" என்றவாறு கதவை திறக்கப் போனாள் அம்மா. பின்னால் அப்பா!

அப்போதுதான் மாடிவீட்டு பானு அக்கா கூப்பிடுவது காதில் விழுந்தது. அதையும் மீறி நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது.

"அது என்ன புதுபழக்கம்? காலைல இருந்து நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன், எப்பபார்த்தாலும் தலைய தடவிக்கிட்டே இருக்கே?" அம்மா சொன்னதும், கையை எடுத்தேன்.

அம்மா தோட்டத்து கேட்டையும் திறந்ததும், உள்ளே நுழைந்த பானு " என்ன ஆண்ட்டி.. நாய்ங்க இப்படி கத்துதுங்க?" பயந்த முகத்துடன் கேட்டாள்.

இந்த கல்யாணம் ஆன பெண்களுக்கு கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்லை. தேய்ந்துப்போன நைட்டியை போட்டுக் கொண்டு வந்து என்னைப் போன்ற பிரம்மசாரி பசங்களை இம்சை செய்வது ! முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

" காலைல முழுக்க, பக்கத்துவீட்டுல கொட கொடான்னு என்னத்தையோ உருட்டிக்கிட்டு இருந்தாங்க. அஞ்சு நிமிடம் கண்ணு மூட முடியலே. இப்ப இந்த நாயிங்க ஊள! சாயந்தரம் ஐஞ்சு மணி வாக்குல அந்த ரெண்டும் அலங்காரம் பண்ணிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்துச்சுங்க, சூளமேட்டுல சொந்தகாரங்க கல்யாணம்னு போறோம்னு சொல்லிச்சுங்க. கெழவனாரும் போயிருக்காருப்போல. நாய்ங்க அவுரு வீட்டுல இல்லைன்னு தேடுதோ என்னவோ?"

"ஆண்டி.. அவுரும் ஸ்ரீநாத்தும் சாயந்தரம் காஞ்சிபுரத்துக்கு கிளம்பி போயிருக்காங்க. அவங்க அப்பாவுக்கு கேடராக்ட் ஆபரேஷன். திங்கக்கிழம காலைலதான் வருவாங்க. ஆண்டி எனக்கு பயமா இருக்கு. ஒங்க வீட்டுலையே படுக்கட்டா?" கேட்டாள் பானு.

"நீங்க உள்ள படுங்க மேடம். நானும் இவனும் ஹால்ல படுக்கிறோம்" அப்பா விட்ட ஜொல்லு தாங்கவில்லை.

குமார், பானுமதி அவர்களின் ஒரே மகன் ஸ்ரீநாத்தும் மாடியில் குடிவந்து ஒரு மாதம்தான் ஆகிறது. பானுமதி வள்ளியம்மாள் பள்ளியில் ஆசிரியையாய் இருக்கிறாள். ஸ்ரீநாத், பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படிக்கிறான். சாருக்கு சின்னதா ஏதோ பிசினஸ்.

உள்ளே பேச்சு ஆரம்பித்தது.

"ஆண்ட்டி, நாய்தாத்தா பொண்ணுங்கப் பத்தி பால்காரமேரி சொன்னது நிஜமா?"

அம்மா "ஆமாம்மா... அந்த சாலினி, மாலினி ரெண்டு பொண்ணுங்களும் வயசுக்கு வரலையாம். பெத்தது ரெண்டுக்கும் இப்படினா என்ன கொடுமை? " என்றாள்.

எல்.ஐ.ஜி எனப்படும் வீட்டுவாரிய குடியிருப்புக்கு நாங்கள் குடிவந்து பதினைந்து வருடமாகிறது. ஓற்றை படுக்கையறை வீடு. முன் பக்கமும் பின் பக்கமும் கையகல நிலம். அம்மா முன் இடத்தில் டிசம்பர்பூ, மல்லிகைபூ வைத்திருந்தாள். பின் பக்கம் வாழைமரமும், கருவேப்பிலை, முருங்க மரமும் உண்டு.

இரண்டு இரண்டாய் வீடுகள் ஒட்டிக் கொண்டு இருக்கும். எங்கள் பக்கத்துவீட்டில் ஒரு பெரியவரும், அவருடைய இரண்டு மகள்களும் குடி இருக்கிறார்கள். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் பிறகு பால்விநியோகம் செய்யும் மேரியின் மூலமாய் ஒவ்வொரு கதையாய் வெளி வந்தன. அவள் தான் கடைக்குப் போய் சாமான் வாங்கி தருவது, பக்கத்து ஓட்டலில் இருந்து தின்பதற்கு ஏதாவது வாங்கி வருவது என்று போய் வந்துக்கொண்டிருப்பாள்.

மூத்த பெண்ணிற்கு மட்டும் விஷயத்தை மறைத்து கல்யாணம் நடந்து இருக்கிறது. மறுநாளே மாப்பிள்ளை பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டானாம். ஆனால் பார்க்க இருவரிடமும் எந்த குறையும் தெரியாது. இரண்டு பேரும் நல்ல நிறம், நல்ல களையான சிரித்த முகம். என் தங்கைகள் அவர்களுடன் பேசவே மாட்டார்கள், அவ்வளவு அலட்சியம்.

எல்லாரும் மேரியின் வாயை குடைந்து, அந்த பெண்களின் உடல் கூறுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள முயன்றனர். ஆனால் அவள் தனக்கு எதுவும் தெரியாது என்று சத்தியம் செய்வாள்.

அம்மா மட்டும் எப்பொழுதாவது வேலி பக்கமாய் நின்று ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.

இரண்டு பேரும் ஒரு சினிமா விடமாட்டார்கள். நன்றாக அலங்காரம் செய்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். நாய்தாத்தா என்று எங்களால் நாமகரணம் சூட்டப்பட்டவர் எப்பொழுதும் வீட்டுவாசலில் ஒயர் கட்டிலில் படுத்துகிடப்பார். அவரை சுற்றி எப்போதும் நாலு தெரு நாய்கள். அவர் வெளியே போனால் பின்னாலேயே குஞ்சுகுளுவனுடன் ஒரு நாய் படையே போகும். அவரும் டீ கடையில் பொறை பிஸ்கெட் வாங்கி வீசிக் கொண்டே போவார்.

சிலசமயம் வீட்டில் பயங்கரமாய் சண்டை நடக்கும். இரண்டு பெண்களும் அடித்துக் கொள்வது வெளியே நன்றாக் கேட்கும். பாத்திரம், செருப்பு, விளக்குமாறு போன்றவை வெளியே வந்துவிழும். இரண்டு பெண்களும் கடைசியாய் பெற்றாயே எங்களையும் என்று பிலாக்கணம் வைத்து அழுவதைக் கேட்கும் பொழுது பாவமாய் இருக்கும். கிழவனார் யாருடனும் பேசவே மாட்டார்.

"ஏன் ஆண்ட்டி அவுங்க வீட்டுக்குள்ள யாரையும் விடமாட்டாங்களாமே? என்ன மர்ம கதையா இருக்கு?" என்று பானு கேட்க,

அம்மா, "ஆமாம். மேரி மட்டும் எப்பவாவது போவா. நாங்க ஓரே ஒரு தடவை போயிருக்கோம். வீடா அது? நெனச்சாலே கொமட்டுது. வீடு முழுக்க ஒட்டடையும், தூசியுமா ஒரே குப்பை. எங்க பார்த்தாலும் அழுக்கு துணி, செருப்பு, பேப்பர், புக்ஸ்னு கண்டமேனிக்கு எறஞ்சி கெடந்துச்சு. ஓரே நாத்தம். என்னால நிக்கவே முடியலை. ஓடியே வந்துட்டோம்" என்றதும், "சிக் மைண்ட் ஆண்ட்டி. வாழ்க்கை இப்படி வீணா போயிடுச்சேன்னு டிப்ரஷன். நெனச்சா பாவமா இருக்கு" என்றாள்.

அம்மா குரலை தாழ்த்திக் கொண்டு, " பார்த்தா வித்தியாசமா ஒண்ணும் தெரியலை இல்லையா? ஒடம்பும் மாரும் சரியாதான் இருக்கு. என்ன சொல்லறது? இதெல்லாம் கர்மவினை. போன ஜன்மத்துல செஞ்ச பாவம்"
இருவரும் உச்சுக் கொட்டுவது கேட்டது. அப்பாவின் குறட்டை மெல்ல ஆரம்பித்தது.

"சாயந்தரம் மல்லி பூ பறிச்சிக்கிட்டு இருந்தனா, அப்ப சாலினி சாய்ந்தரம் ஏழு மணிக்கு கல்யாணத்துக்கு கிளம்பறோம். ரெண்டு நாளு கழிச்சிதான் வருவோம்னு சொன்னா.... அந்த பொண்ணுங்க சினிமா, கடை கண்ணிக்கு போகுங்களே தவிர, இப்படி வீட்ட பூட்டிட்டு அவுங்க எல்லாரும் சேர்ந்து எங்குமே போனதில்லே. கெழவனாருக்கு மதுராந்தகம் பக்கத்துல நெலம் இருக்காம். குத்தக விட்டு இருக்காரு. அப்ப அப்ப அவுரு மட்டும் போய் வருவாரு.. ஆனா போன வருசம், கெழவருக்கு ஆபரேஷன் ஆச்சு, செலவுக்கு நெலத்த வித்துட்டாங்கன்னு மேரி சொன்னா. ...இப்ப நாய்ங்க ஊள இன்னும் ஜாஸ்தி ஆயிருக்கு இல்லை?"

ஊளை சத்தம் காதை துளைத்துக் கொண்டிருந்தாலும், என்னையறியாமல் தூங்கிவிட்டேன்.

பேச்சு சத்தம் கேட்டு கண் விழித்தால், விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. வாசல் கதவு திறந்திருந்தது.

லுங்கியை சரி செய்துக் கொண்டுப் போனால், எல்லாரும் கூடி கூடி பேசிக் கொண்டு இருந்தனர். வழக்கப்படி, அசோசியேஷன் பிரசிடெண்ட் பத்மநாபன் சாரின் சத்தமே பெரியதாய் இருந்தது. நிறைய நாய்கள் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸாய் சுற்றிக் கொண்டு அவ்வப் பொழுது லொள் என்று சத்தம் கொடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தன.

அவர்கள் வீட்டு தோட்ட கேட் கதவு பூட்டப்பட்டிருந்ததை பார்க்கும் பொழுது, வீட்டுவாசல் கதவு பூட்டு இல்லாமல் சும்மா சாத்தியிருந்தது என் கண்ணில் பட்டது.

நான் கத்தியதும் எல்லாரும் ஓடிவந்து எட்டிப் பார்த்தனர். அப்பா, நமக்கு எதுக்கு வம்பு உள்ளே போகாதடா என்று காதில் குசுகுசுத்தார். திருட்டு நடந்திருக்கிறது என்று போலீஸ்க்கு தகவல் தருவோமா, எங்கு கல்யாணத்திற்கு போனார்கள் யாருக்கு விஷயம் தெரியும் என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, பால்கார மேரி கேட்டை தாண்டி குதித்து உள்ளே சென்றாள்.

அடுத்த நொடி அவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடிவந்தாள்.

"கெழவன் செத்துகெடக்குதுமா" அவள் அழுகையைக் கண்டு எல்லாரும் கேட்டில் ஏறிக் குதித்து உள்ளே சென்றார்கள். ஓரளவு தள்ளி நின்றுக் கொண்டு, பார்த்தப்போது, கிழவனார் மீது மூன்று கடிதங்கள்.

கிழவனார் மொதல் நாளே இறந்துப் போய் இருக்கிறார். ஒரே துணையான தந்தையும் அவர்களைவிட்டுப் போனதால் அந்த பெண்கள் அந்த பிணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் யோசித்து முடிவெடுத்திருக்கிறார்கள். வருமானம் குறைந்து, கடனும் அதிகமாகியிருக்கிறது. முதலில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்று யோசித்திருக்கிறார்கள். பிறகு மனம் வராமல், வீட்டில் உள்ள உருப்படியான பொருள்களை விற்றுவிட்டு, தந்தையின் இறுதி சடங்கிற்கு ஐயாயிரம் வைத்துவிட்டு, கையில் இரண்டாயிரம் ரூபாயுடன் கண்காணா இடத்திற்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமலேயே புறப்பட்டு விட்டார்களாம். எங்களை தேட வேண்டாம் என்ற குறிப்புடன். யார் தேடப் போகிறார்கள்?

உறவினர்களிடம் வாங்கிய கடன்கள் எவ்வளவு எழுதி, வீட்டை விற்று எடுத்துக்கொள்ளுமாறு அவர்களுக்கு ஒரு கடிதம்.
மூன்றாவது கடிதம் பால்கார மேரிக்கு. மிச்ச மீதி பாத்திர பண்டங்கள், துணிமணிகள் அவளுக்கு!

யாருக்கும் தெரியாமல் அந்த பெண்கள் தந்தையின் இறந்த உடலை ஒரு நாள் முழுவதும் வைத்துக் கொண்டு என்னமா பிளான் செய்திருக்கிறார்கள் என்று எல்லாரும் வேதனைப் பட்டார்கள்.

நானும் தைரியமாய் உள்ளே எட்டிப் பார்த்தப் பொழுது, கண்ணில் பட்டது மிகவும் ஆச்சரியமாய் இருந்தது.

வீடு ஒரு தூசு, துரும்பும் இல்லாமல் வெகுசுத்தமாய், பல இடங்களில் ஊதுவத்தி வாசம் மிஞ்சி இருக்க பளபளவென்று இருந்தது. என்னையறியாமல் தலையை தடவ, எடுத்த கையை கீழே போட்டேன்.

0 Comments:

Post a Comment

<< Home