நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Saturday, May 13, 2006

நம்பிக்கை போட்டிக்கான கதை - 104

அக்னிப் பூ...

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

சங்கரா! வந்துவிட்டாயா...என் மகனே... ஆர்யாம்பிகை வயிற்றிலிருந்து பீரிட்ட குரல் வேகம் சங்கரரை அசைத்தது.

ஆர்யாம்பிகைக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

அம்மா... என்னை அடையாளம் தெரிந்து கொண்டாயா ? மகிழ்வுடன் சங்கரர் கேட்டார்.

சங்கரா.. எப்பவும் உன் நினைவு தான். உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்கு அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மறந்து போனால் தானே உன்னை நினைப்பதற்கு ? எல்லாம் நான் என்று சொல்லும் உனக்கு எல்லாம் நீ என்று வாழும் அம்மா. உனக்கு விசித்திரமா இருக்கிறதா ? என்று கேட்டபடியே
ஆர்யாம்பிகை மயங்கிவிட இவ்விதம் அடிக்கடி நினைவு தப்பி விடுகிறது என்று சுற்றியிருந்த உறவினர் சங்கரரிடம் கவலையோடு உரையாடினர்.

அன்று பகல் முழுவதும் அம்மாவுடன் பேசியபடியே படுக்கையில் மூச்சு திணறும் அம்மாவின் மார்பைத் தடவிக் கொடுத்தபடியே சங்கரர் இருந்தார்.

மாலை வேளையில் மயக்கம் களைந்து அம்மா விழிப்பு நிலைக்கு வந்தபோது, சங்கரர் அவரைச் சாந்த நிலைக்குக் கொண்டுவர எண்ணி அத்வைத உபதேசங்களையும், தம் வாழ்வனுபவங்களையும் பேசலானார்.

அம்மா நான் இப்போது பிரும்ம சூத்திரத்துக்கு நான் எழுதிய விளக்கத்தை ஒட்டி எழுந்த அத்வைத தத்துவத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அமைதியாக என் பேச்சைக் கேளுங்கள். மனச்சாந்தி அடைவீர்கள் என்று சொல்லிவிட்டு சங்கரர் தன் நீண்ட விளக்கத்தைத் துவங்கினார்.

உலகம் ஒரு தோற்றமே. கனவுலகில் ஒரு வாழ்க்கையும், நலவுலகில் ஒரு வாழ்க்கையும் நாம் வாழும்போது கனவுலகம் நமது வேட்கையைத் தீர்ப்பதுபோல நலவுலகமும் ந்மது வேட்கையைத் தீர்க்கிறது. இதில் எது உண்மையான நிலை ? என்ற கேள்விக்கு என் பார்வையில் எது எந்தக் காலத்திற்கும் நிலைத்திருக்கக் கூடியதோ அதுவே உண்மை.
மேலும், இரண்டு உலகையும் நாம் பேச அனுமதிக்கும் அறிவே இந்த உணர்விற்க்குக் காரணம். இந்த அறிவு மூன்று நிலைகளை உடையது. கனவு நிலை, நனவு நிலை, உண்மையை உணரும் ஞான நிலை. ஒவ்வொரு நிலையும் அடுத்த நிலைக்கு நம்மைக் கூட்டிச் செல்லும் படிகள். இதற்கு உதாரணமாக கயிற்றைப் பாம்பென்று எண்ணுவது ஒரு கனவு நிலை. கயிறு தான் என்று தெரிவது நனவு நிலை. இந்த இரண்டும் ஒன்று என அறிவது ஞான நிலை.

அறியாமையின் தன்மைக்குத் தக்கபடி உயிரின் தன்மையும் மாறும். சுருக்கமாகச் சொன்னால் பிரும்மம் உலகாகத் தோன்றுவதும், உயிர்களாக மாறுவதும் ஒரு மாயை. உண்மையில் ஒரு உயிர் பல உயிர்களாகத் தோன்றுகிறது.மேலும், பிரும்மம் மாயையினால் இயங்கத்துவங்கியதும் இறைவனாக மாறிவிடுகிறது. இந்த இறைவனால் இரண்டு தொழில்கள் இடைவிடாது நடக்கின்றன.

1. உள்ளது மறைக்கப்படுகிறது.

2. இல்லாதது தோற்றுவிக்கப்படுகிறது.

இங்கு மறைக்கப்படுவது பிரும்மம், தோற்றுவிக்கப்படுவது உலகம். இந்த வகையில் இறைவனும், உயிரும் பிரும்மஸ்வரூபிகளே. இவை அத்வைத தத்துவத்தில் மாயை எனவும் அவித்யை எனவும் சொல்லப்படுகின்றன.

ஆனால், அம்மா, "தண்ணீரில் சந்திரனுடைய பிரதிபிம்பம் ஆடுவது தண்ணீரின் ஆட்டத்தால் என்று அறியாதவன் சந்திரனே ஆடுவதாய் என்ணுவதைப்போல சில சமயம் மனதில் ஒரு ஆட்டம் ஏற்பட்டுவிடுகிறது."

ஜகத்குரு என்றழைக்கப்படும் உனக்கா இந்த கலக்கம். ஏன் மகனே ?

குமாரில பட்டர் என்பவர் பெளத்த மதத்தை நிராகரிக்க எண்ணினார். அந்த எண்ணத்தின் தூண்டுதலில் அவர் பெளத்த மதத்தைப் பற்றிய கல்வியறிவைப் பயில பெளத்தராக மாறினார். கல்விகற்ற பின் தம் அரசன் சுதன்வன் துணைக்கொண்டு அப்பெளத்தர்களை வாதத்தில் வெற்றி கொண்டார். அரசன் பெளத்தர்களைத் தோல்வி காரணம் காட்டி தண்டனையாக அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டான். அச்செயல் குமாரில பட்டரைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்து தற்கொலைக்குத் தூண்டிவிட்டது. குற்றவுணர்வுக்குக் காரணம் குரு துரோகம் - புத்த பிஷூக்களிடம் கற்ற கல்வியைக் கொண்டே அவர்களையும் பெளத்தத்தையும் அழித்துவிட்டது.

அவருக்கு நான் அத்வைத மார்க்கத்தைச் சொல்லி, கர்மத்திலிருந்து எவரும் விடுபட முடியாது என்ற அவரின் வாதத்தைத் தவறு என்று ஒப்புக்கொள்ள வைத்து கர்மாவை நாம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்தால் தான் அது நம்மை பீடிக்கும். அந்த எண்ணமில்லாமல் ஈஸ்வரார்ப்பணம் என்று செயலை எண்ணி விட்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம் என்று போதித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

நல்லது தானே செய்துள்ளாய் மகனே? கலக்கம் எங்கு வந்தது ?

அம்மா விஷயம் அதோடு முடியவில்லை. மேலும் கேளுங்கள். குமாரில பட்டரின் பேச்சைக் கேட்டு மீமாம்சகர் பலரை அத்வைதவாதிகளாக மாற்ற எண்ணி மண்டனமிச்ரரையும், அவரது மனைவி சரஸவாணியையும் வாதத்தில் வெல்ல, கூடுவிட்டுக் கூடுபாய்ந்து சம்சாரியாக ஒரு வாழ்க்கை சில நாட்கள் வாழ்ந்துவிட்டேன். அந்த வாழ்க்கைக்கு ஒரு பாவமும் அறியாத அமருகனின் மனைவியைப் பயன்படுத்தினேன். இச்செயல் என்னை அவ்வப்போது கலக்கமடையச் செய்கிறது.

மகனே, நீ எழுதிய அமருகம் என்ற நூல் இந்தச் செயலின் விளைவா ? என்னால் நம்ப முடியவில்லை.

ஆம் அம்மா. அமருகன் நினைவாக இல்லற வாழ்வியல் பற்றிய எனது நூலுக்கு அமருகம் என்று பெயரிட்டேன்.

இப்போது மனக்கலக்கம் அடையும் நீ அவ்விதம் செய்யக் காரணம் என்ன மகனே ?
என் பார்வையில் ஆன்மாவுக்கும் உடலுக்கும் தொடர்பில்லை. உடலுகுரிய கனவு, விழிப்பு ஆகிய நிலைகளை நான் கடந்துவிட்டவன். மேலும், கொண்ட நிலைப்பாட்டை நிறுவ நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றாலும் என் செயலில் பின் உள்ள காரணத்தில் ஒரு பெண் ஏன் எனக்குப் பயன்பட வேண்டும் ? அம்மா உனக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் என்றார் சங்கரர்.

"எனக்கு ஒண்ணும் புரியயையே சங்கரா" என்றாள் ஆர்யாம்பிகை.

சங்கரர் இறைவனைப் பிரார்தித்துச் தியானித்த நிலையில் கண்மூடிச் சில நிமிடங்கள் அப்படியே இருந்தார்.

ஆர்யாம்பிகையின் உடல் விட்டு உயிர் பிரிந்தது.தாயின் தலையைச் சங்கரரின் கண்ணீர் நனைத்தது.

சங்கரர் பின் சுதாரித்துத் தான் கொள்ளியிட்டுக் காரியம் செய்யப்போவதாக சொன்னபோது, உற்றார், உறவினர் மற்றும் பண்டிதர்கள் கடுமையாக அவரது நிலைப்பாட்டை ஆட்சேபித்தனர்.

அவர்களின் கேள்வி துறவிக்கு உறவு ஏது ?

சங்கரர் அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, தம் அன்னையைத் தம் தோளில் தூக்கிச் சென்று வீட்டுக்குப் பின் அருகில் உள்ள கொல்லையில் கிடத்தினார்.
சற்று நேரம் தன் தாயின் உடலையே பார்த்தபடி இருந்துவிட்டு, பின் கம்பீரமாக வான் நோக்கிப் பேசத் துவங்கினார்.

அக்னி பகவானே! இது நாள் வரை நான் இல்லற தர்மம் ஏற்றவனாக உனக்கு நெய்யையும், அவிஸ்ஸையும் ஆஹுதியாக அளித்தது இல்லை. ஆனால் இன்று என் தாயின் உடலை உனக்கு அளிக்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்லும்போதே, மின்னலென தாம் சம்சாரியாகவும் வாழ்ந்த காலம் மனதில் வெட்டியது.

அக்கணத்தில் குபீரென அக்னி சுழன்றபடி வானில் இருந்து இறங்கி ஆர்யாம்பிகையின் சிதையை வலம் வந்து அவளின் உடல் மேல் படர்ந்தது. ஆர்யாம்பிகையின் உடல் எதிலிருந்து வந்ததோ அதுவாகவே மாறிப்போனது.

1 Comments:

At 10:17 PM, Blogger meenamuthu said...

\\ ஆன்மாவுக்கும் உடலுக்கும் தொடர்பில்லை. உடலுகுரிய கனவு, விழிப்பு ஆகிய நிலைகளை நான் கடந்துவிட்டவன். மேலும், கொண்ட நிலைப்பாட்டை நிறுவ நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றாலும் என் செயலில் பின் உள்ள காரணத்தில் ஒரு பெண் ஏன் எனக்குப் பயன்பட வேண்டும் ? அம்மா உனக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் \\

இக்கேள்விக்கு பதில் யாருக்காவது தெரியுமா?அறிந்து கொள்ள பேராவலுடன் இருக்கின்றேன்.

கதையல்ல இது!ஆன்மாவை புரட்டி போடும் ஒரு நிகழ்வு! மனம் கனத்து கண்கள் பனிக்கின்றன.

வெற்றியடைய வாழ்த்துகள்

அன்பு
மீனா.

 

Post a Comment

<< Home