நம்பிக்கை குழுமம்

தேசியமும் தெய்வீகமும் எங்களது கண்கள்! நம்பிக்கையே வாழ்வின் வெற்றிக்கு தூண்கள்! இன, ஜாதி, மத, மொழி பேதமின்றி தனி மனிதனின்ஆன்மீக முன்னேற்றத்திற்கான தளம். நம்பிக்கை குழுமத்திற்கு உரிய வலைப்பூ இது.

Thursday, May 18, 2006

நம்பிக்கை போட்டிக்கான கவிதை - 304

இளமையில் 'கல்'

(குறிப்பு : நம்பிக்கையின் போட்டிக்காக வந்ததில் வலைபதிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இக்கவிதை . படைப்பாளியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் . உங்கள் பின்னோட்டங்களும் இவரது வெற்றிக்கு துணைபுரியும். இந்த படைபாளியை உங்களது தரமான விமர்சனங்களால் உற்சாகப் படுத்துங்கள்).

வயதுகளைத் தவிர்த்து
ஒற்றுமையில்லை நமக்குள்.
பள்ளிக்கூடம் உன் உலகம்.
உலகம் என் பள்ளிக்கூடம்.

பெயர்த்தெடுக்கப்பட்ட
தண்டவாளத் துண்டுகள்.
பாடசாலை மணியோசை.
மொழிபெயர்த்தால்...'நாம் இணைகளில்லை'.

உன் முதுகில்
பாடப்புத்தகங்களின் சுமை.
என் முதுகிலோ
யாருடைய வாழ்க்கையோ?!

எங்கள் 'கறுப்பு மை' பூசி
பொலிவடைந்து விடுகின்றன
எஜமானர் வாழ்க்கையும்

கைத்தட்டல்கள்
உன் வெற்றிகளை எதிரொலிக்கும்
எம் பெயர்களையும்.

கற்கும் ஆசை
கனலாய் தகிக்க...
கந்தகம் தோய்க்கும்
இளைய மரக்குச்சிகளில்
வறுமையின் வெறுமை.

பள்ளிக்கூடத்திற்கு வெளியே
உனை ஈர்க்கும் வேடிக்கைகள்
தின்பண்டங்களினூடே
நீ காணக்கூடும்
எம் இளம்பிராய ஆசைகளையும்

வணிக வயலில்
பணப்பயிராகிவிட்ட கல்வி.
ஒற்றைப்பாடம்
இன்னமும் பொதுவில்:
'உழைப்பு உயர்வு தரும்'.

1 Comments:

At 10:08 PM, Blogger மஞ்சூர் ராசா said...

கந்தக காட்டினுள் கஸ்டப்படும் இளம் சிறார்களின் நனவுகளாகாத கனவுகளை வெளிச்சம்போட்டு காட்டும் கவிதை. இறுதியில் அவர்கள் உழைப்பால் மட்டும்தான் முன்னேற முடியும் என்பதை சொல்லும் நம்பிக்கையூட்டும் கவிதை. கவிஞரின் பெயரில்லாமலிருந்தாலும் நான் நினைக்கும் கவிஞர்தான் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். பார்ப்போம்.

 

Post a Comment

<< Home